கூட்டணி அறிவிப்பு எப்போது? – டாக்டர் கிருஷ்ணசாமி விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று (பிப்ரவரி 16) டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.3,000 மற்றும் கோடை கால நிவாரணமாக ரூ2,000 என மொத்தம் ரூ.5,000-ஐ முன்கூட்டியே 1.31 கோடி மகளிர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதில் அரசின் பணத்தை ஆளும் கட்சி ஓட்டுக்களுக்காக வாரி வழங்கியுள்ளது என்றும், மகளிர் உரிமைத் திட்டத்திற்கான நிதியை பட்டியல் சாதி மக்களை மேம்படுத்துவதற்கான SC சிறப்பு உட்கூறு திட்டத்திலிருந்து பயன்படுத்தியுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், தமிழக அரசு இந்த சிறப்பு உட்கூறு திட்டத்தை பயன்படுத்தவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக சில ஆதாரங்களை செய்திக் குறிப்பில் கொடுத்துள்ளேன். 2023 முதல் 2026 வரை சிறப்பு உட்கூறு நிதியிலிருந்துதான் மகளிர் உரிமைத் தொகைக்கு பணம் எடுக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. மொத்தம் ரூ.16,000 கோடி வரை இந்த நிதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிதியை வேறு கவர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ள நிலையில், கலைஞர் டிவி மற்றும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. அதிமுக ஆட்சியிலும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ளேன்” என்றார்.

மேலும், இது தொடர்பாக நீதிமன்றம் செல்வது குறித்து இதுவரை சிந்திக்கவில்லை. இப்போது மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். கண்டிப்பாக தேர்தல் ஆணையத்தை அணுக வாய்ப்பு உள்ளது என்றார்.

ADVERTISEMENT

நீதிமன்றத்திற்குச் செல்ல மாட்டோம், ஆனால் தேர்தல் ஆணையத்திற்குச் செல்வோம் என்பது அரசியல் நோக்கம் காரணமா? என்ற கேள்விக்கு, “நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல மாட்டோம் என்று சொல்லவில்லை. முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம். உங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்கிறோம். தேவையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்” என்றார்.

கூட்டணியை எப்போது அறிவிப்பீர்கள்? என்ற கேள்விக்கு, “2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் புதிய தமிழகம் தெளிவாகவும், உறுதியாகவும், வலுவாகவும் உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பேன். தேர்தல் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்றார்.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழகத்தைத் தவிர வேறு யாரும் கூட்டணி ஆட்சிக்கு தயாராக இல்லையே? என்ற கேள்விக்கு, “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் கொள்கையில் தெளிவாகவும், உறுதியாகவும், வலுவாகவும் இந்த நிமிடமும் இருக்கிறோம்; நாளையும் இருப்போம். பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

தவெக கூட்டத்தில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருவது குறித்து கேள்விக்கு, “தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிற்பகல் 12 மணிக்கு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது தவறு. 12 மணிக்கு கூட்டம் நடத்தினால் சன் ஸ்ட்ரோக் வரும். இதை ஒரு மருத்துவராகச் சொல்கிறேன்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share