பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தேர்வு செய்து பிப்ரவரி 27-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. dpi order perasiriyar anbazhagan award
கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலும், பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது மாவட்டத்துக்கு தகுதியான நான்கு பள்ளிகளை அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்து பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைத்தது. அதில் சிறந்த பள்ளிகளாக ஒரு மாவட்டத்துக்கு இரண்டு பள்ளிகள் வீதம் மொத்தமாக 76 பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக தேர்வுசெய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த பள்ளிகளுக்கு சென்ற ஆண்டு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன், தலைமைத்துவம், மாணவர் மேம்பாடு பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்யும்போது பொதுத் தேர்வுகள், திறனறித் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு, தினசரி கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள், வகுப்பறையில் தொழில்நுட்பப் பயன்பாடு, கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள், உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, விளையாட்டு போட்டிகள், கலைத் திருவிழா மற்றும் கட்டமைப்பு வசதிகள் என்பன உட்பட பல்வேறு காரணிகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து கருத்துகளை பிப்ரவரி 27-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.