ராஜபாளையம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோவிலில் 2 காவலாளிகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சாஸ்தா கோவில் செல்லும் சாலையில் உள்ளது தேவதானம். இந்த கிராமத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இக்கோவிலில் 3 காவலாளிகள் பணியாற்றி வந்தனர். இவர்களில், பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகிய இரு காவலாளிகள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே கொலையாளி என சந்தேகப்படும் நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு கொலையாளி தப்பி ஓடினார். இதனால் போலீசார், அந்த கொலையாளியை துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப் பிடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
