தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக 8 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டிக்குத் தேர்வாகி, சர்வதேச அரங்கில் முத்திரை பதிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.
தேசிய தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று, பி.டி. உஷாவின் 23 ஆண்டுகால 200 மீட்டர் சாதனையை 23.26 வினாடிகளில் கடந்து முறியடித்தார்.
2022 ஆம் ஆண்டில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடைக்காலம் ஆகஸ்ட் 2025-ல் முடிவடைந்தது.
தற்போது மீண்டும் ஊக்கமருந்து சோதனையில் தனலட்சுமி சிக்கியதால் தற்போது 8 ஆண்டுகள் தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ‘ட்ரோஸ்டனோலோன்’ (drostanolone) என்ற ஸ்டீராய்டு ஊக்கமருந்தை தனலட்சுமி இரண்டாவது முறையாகப் பயன்படுத்தியது சோதனையில் உறுதியாகியுள்ளது. இந்த மருந்து தசைகளை அதிகரிக்கும், பலத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியால் (WADA) தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ‘ட்ரோஸ்டனோலோன்’ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
