கடந்த மார்ச் மாதத்தில் இசைஞானி இளையராஜா லண்டனில் தனது சிம்பனி இசையை அரங்கேற்றியது நினைவிருக்கலாம் . எல்லோராலும் பாராட்டப்பட்ட அந்த சிம்பனி இசையை இளையராஜா அமைத்ததற்காக , அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் கட்சி அவரைப் பெரிதாகக் கொண்டாடவில்லை.
ஆனால் முதல் முதலில் ஓர் இசையமைப்பாளருக்கு அரசு நடத்தும் பாராட்டு விழா என்ற சாதனையோடு விழா எடுத்த முதல்வர் ஸ்டாலின் , முதல்வர் என்ற நிலையில் இருந்தும் இறங்கி இளையராஜாவின் ரசிகனாகப் பேசினார் .
”எல்லோரும் முதல்வர் என்ற முறையில் என்னிடம் கோரிக்கை வைப்பார்கள் . ஆனால் நான் இந்த மேடையில் இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன் . அவர் திருவாசகத்துக்கு இசை அமைத்தது போல சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் .அப்படி செய்தால் சங்கத் தமிழ்ப் பாடல்கள் இன்றைய தலைமுறைக்கும் போய்ச் சேரும் ” என்றார் . சிரித்தபடி உட்கார்ந்து இருந்தார் இளையராஜா
முதல்வர் சொன்னதை எப்போது ராஜா செய்யப் போகிறார்?
— என்று கேட்பதற்காக இது இப்போது எழுதப்படவில்லை .
உண்மையில் இதற்கு முன்பே 1993 ஆம் ஆண்டே இளையராஜா தனது முதல் சிம்பனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா மூலம் இசைத்தார் .
ஆனால் அந்த சிம்பனியில், சிம்பனி விதிகளுக்கு மாறாக சில இந்திய இசைக் கருவிகளைப் பயன்படுத்தியதாக ஒரு வம்படியான காரணம் சொல்லி , மேற்கத்திய இசை விமர்சகர்கள் இளையராஜாவைக் கடுமையாக விமர்சித்தார்கள் . உண்மையான காரணம், ஓர் ஆசியாக்காரன் சிம்பனி அமைத்து விட்டானே என்ற ‘மனத் தீண்டாமை’தான். .
எனவே அதை வெளியிடாமல் நிறுத்தி விட்டார் இளையராஜா .
1999 ஆம் ஆண்டு இளையாராஜாவின் சகோதார் கங்கை அமரனிடம் அந்த சிம்பனி பற்றிக் கேட்கப்பட்ட போது , ” அவங்களுக்குதான் அது சிம்பனி . நம்ம நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் கேட்ட ”பருவமே புதிய பாடல் பாடு” பாட்டு, , ஜானி படத்தில் கேட்ட ”ஆசைய காத்துல தூது விட்டு..” போன்ற பாடல்களின் மெட்டு எல்லாம் அந்த சிம்பனியில் இருக்கு” என்றார் .
இப்போது இந்த வேலியன்ட் சிம்பனி மூலம் தன்னை வன்மமாக விமர்சித்தவர்களையே கொண்டாட வைத்து விட்டார் இளையராஜா .
எனவே இதுதான் எனது முதல் சிம்பனி என்று அறிவித்த இளையராஜா இப்போது அடுத்த சிம்பனியை எழுதிக் கொண்டு இருக்கிறார் .
இப்படியாக 1993 ஆம் ஆண்டு இசை அமைக்கப்பட்ட அந்த சிம்பனி இளையராஜாவைப் பொறுத்தவரை ஒரு கசப்பான நினைவாகப் போய் விட்டாலும கூட , அப்போது நடந்த ஒரு விஷயம் ரகளையானது
அந்த சிம்பனி இசை இசைக்கப்பட்டதும் , ஒரு வெளிநாட்டு இசை அமைப்பாளர் ராஜாவிடம் வந்து பாராட்டிவிட்டு , ” நீங்கள் நிறைய படங்களுக்கு இசை அமைத்து இருப்பதாக சொன்னார்கள் . சுமார் ஐம்பது படம் இருக்குமா?” என்றார்
மிக அமைதியாக இளையராஜா சொன்னார் ” அறுநூற்று அம்பது’
அதிர்ந்து போன அவர் , ” மை காட். மனைவி பிள்ளைகள் ?” என்றார்
மறுபடியும் ராஜா , ” மனைவியும் மூன்று குழந்தைகளும் ” என்றார் புன்னகையோடு
இன்னும் அதிகமாக அதிர்ந்த அவர் கேட்டார் , ” வாட்? உங்களுக்கு அதுக்கு எல்லாம் எப்படி நேரம் இருந்தது?”
- ராஜ திருமகன்
