தந்தை பெரியார் இன்றைக்கும் ஏன் தேவைப்படுகிறார்? தனி தமிழ்நாடு கேட்பது பிரிவினை என்றவர்கள் தமிழ்நாட்டை எப்படியெல்லாம் பிரித்து வைத்துள்ளார்கள்? என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா விவரித்துள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று பிப்ரவரி 21-ந் தேதி திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகம் நடத்திய மாநாட்டில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது: அருமைத் தம்பி முரசொலி அவர்களும் நம்முடைய துரை சந்திரசேகர் அவர்களும் ஆசிரியரைப் (கி.வீரமணி) பற்றி நிறைவாக நிறைய பேசினார்கள். நான் ஆசிரியரைப் புகழ்வது என்பது பிள்ளை தாயைப் புகழ்வதைப் போல. ஆனால் ஒன்றைச் சொல்லி முடிக்க வேண்டும்.
அவர் யார் என்பதற்கு ஒற்றை வரியிலே சொல்வதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் மீதான விவாதத்தைக் கொண்டு வந்தார்கள். பாவம், எப்போதும் அவர்கள் சங்கிகள் அரைகுறைகள். இந்த வந்தே மாதரம் பாடலுக்குப் பின்னால் இருந்த வரலாறு தெரியாமல், அது சார்ந்திருக்கிற மதவெறியை மட்டுமே ஊட்ட வேண்டும் என்பதற்காகத் தீர்மானத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள்.
ஆனால் அந்தத் தீர்மானம் கொண்டு வந்ததற்குப் பிறகு, அந்தப் பாடலை எழுதியவர் யார்? எழுதியவருக்கு என்ன பின்புலம்? அப்படிப் பாடல் எழுதப்பட்டு மகிழ்ந்தவர்கள் எல்லாம் யார்? அதற்குப் பிறகு எதிர்ப்பு எங்கே இருந்து வந்தது? அந்த எதிர்ப்புக்குக் காரணம் என்ன? நான் இன்னும் கூட இங்கே வலியுறுத்திச் சொல்வதற்குப் காரணம், அந்தப் பாடலைப் பாடுவதிலே என்ன பிரச்சனை என்றால்…
வந்தே மாதரத்தின் வரலாறு
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக, வெள்ளைக்காரர்களுக்கு எதிராக சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று அப்போது சொன்னார்களே, அப்படி இளைஞர்கள் திரண்டு ஆயுதம் ஏந்தலாம் என்று முடிவெடுத்து ஆயுதம் ஏந்திய போது, ஒரு பத்து இஸ்லாமிய இளைஞர்கள் ‘எங்களையும் இந்த அமைப்பிலே சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள்.
‘இல்லை, நாங்கள் சேர்த்துக்கொள்ள மாட்டோம். ஏனென்றால் நாங்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடுகிறவர்கள், அந்தப் பாடலில் உங்களுக்கு இடமில்லை. எனவே இந்த தேச விடுதலைக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை மட்டுமல்ல, இந்தத் தேசத்திற்கே உங்களுக்கும் சம்பந்தமில்லை’ என்று அப்போது சொன்னார்கள் 1905-ல்.
இந்த தேசம் பிளவுபட்டதற்கு யாராரோ காரணம், ஆனால் எல்லாத்துக்கும் மூலம் வந்தே மாதரம் பாடல்தான் காரணம். எனவே அந்தப் பாடல் தீர்மானம் வருகிற போது அதிலே உரையாற்ற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர், திராவிட மாடல் ஆட்சியினுடைய நாயகர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் (மு.க.ஸ்டாலின்) ‘ராஜா பேசட்டும்’ என்று சொன்னபோது நான் பல புத்தகங்களைத் தேடினேன்.
தேடியதற்குப் பிறகு ஆசிரியருக்குத் தொலைபேசியிலே பேசினேன். கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களுக்குப் பேசினேன். ஆசிரியர் சில புத்தகங்களை எல்லாம் அனுப்பினார், கிடைக்காத புத்தகங்களை எல்லாம் அனுப்பினார். நான் ஐந்தாவதாக ஆறாவதாகப் பேச வேண்டும். எனக்கு முன்னாலே பேச வேண்டியவர்கள் பிஜேபி, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ்.. இவ்வளவு பேரும் பேசிட்டுதான் வரணும். எனவே பேசியதெல்லாம் பேசி விடுவார்கள் என்று நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சம்தான் தொட்டார்கள், ஆங்காங்கு தொட்டார்கள்.
அப்போதுதான் திருப்தி அடைந்தேன், நம்மிடத்திலே சரக்கு நிறைய இருக்கிறது என்று. பேசினேன், இந்தப் பாடல்தான் இந்தத் தேசத்தைப் பிளவுபடுத்தியதற்குக் காரணம். ஒரு நாட்டிற்குத் தேசிய கீதம் என்று இருக்கிறபோது, ‘நேஷனல் ஆந்தம்’ (National Anthem) என்று இருக்கிறபோது, ‘நேஷனல் சாங்’ (National Song) என்று ஒன்று ஏன் வேண்டும்? தேசிய கீதம் என்று ஒரு பாடல், தேசியப் பாடல் என்று ஒரு பாடல்… என்ன பாடல்? நேஷனல் சாங் அண்ட் நேஷனல் ஆந்தம். ஆந்தம் என்றால் என்ன, சாங் என்றால் என்ன? வித்தியாசம் தெரியல. தேசிய கீதம் ‘வாஸ் அப்ரூவ்டு இன் தி கேபினட்’ (was approved in the cabinet). அமைச்சரவையிலே வைக்கப்பட்டு இதுதான் இந்தியாவினுடைய தேசிய கீதம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் வந்தே மாதரம் பாடலை வைக்கல…
என்ன காரணம்? ஒரு ஜி.ஓ. சின்ன ஜி.ஓ. கூட இல்ல, வெறும் சர்க்குலர். இதற்குப் பின்னால இருக்கிற எல்லா சங்கதிகளையும் தோண்டி தோண்டி எடுத்தால் அது எங்கெங்கெல்லாம் போகிறது என்றால் ஆர்.எஸ்.எஸ்-க்குப் போகிறது, இந்து வெறியர்களுக்குப் போகிறது. இந்த தேசத்தை இந்து தேசமாக என்றைக்காவது அறிவிக்க வேண்டும் என்றால் இந்தப் பாடல் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவர்களுடைய கனவு அதிலே இருக்கிறது.
அந்தக் கனவுகளையெல்லாம் எப்படி முறியடித்தார்கள் காந்தியும், நேருவும், அம்பேத்கரும் அன்றைக்கு இருந்த மதச்சார்பற்ற தலைவர்களும் என்பதையெல்லாம் அந்தப் புத்தகங்கள் எனக்குக் காட்டின. அந்தப் புத்தகங்கள் எது என்று கேட்டார்கள். அவர்கள் நினைத்துக் கொண்டார்கள் ஒரே ஒரு புத்தகம் இருக்கிறது போல இருக்குது, ராஜா அதையெல்லாம் தேடிப் படித்துவிட்டார் என்று.
ஆசிரியர் வீரமணி எனும் ஆயுதம்
நான் சொன்னேன், ஆசிரியர் வீரமணி என்கிற ஒரு புத்தகம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த ஒரு புத்தகத்தைப் படித்தால் போதும், நீங்கள் வீசுகின்ற எந்த ஆயுதத்தையும் எங்களால் தடுத்து மட்டுமல்ல, அதே ஆயுதத்தால் உங்களைக் கொல்ல முடியும் என்று சொன்னேன்.

கலைஞர் சொன்னது..
கலைஞர் தான் சொல்லுவார், ஆட்சி அதிகாரத்திலே இருக்கிற போது எனக்கு விஷம் தீண்டிவிட்டால் – விஷம்னா பாம்பு இல்ல, பாம்பு மாதிரி இருக்கிற மனிதர்கள் தீண்டிவிட்டால் – விஷம் போக வேண்டும் என்பதற்காக நான் போகிற இடம் திராவிடர் கழகம். அங்கே இருக்கிற தெருவிலே தான் அந்த கீரிப்பிள்ளை போகுமே, அது போல மூலிகை அங்கே இருக்கிறது என்று சொல்லுவார். அது எவ்வளவு பெரிய உண்மை, இன்னமும் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு மூலிகையாகத் திகழ்ந்து கொண்டிருக்கிற ஆசிரியரும் திராவிடர் கழகமும் தான் இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பெரியார் மீதான விமர்சனம்
இப்ப திடீர்னு ஒன்னு கிளம்பிட்டாங்க நம்முடைய கவனத்தையெல்லாம் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பெரியாரை நேரா அடிக்கிறது. பெரியார் தான் கிழிச்சாரா? பெரியார் தான் மண்.. என்ன காரணம் என்றால் நம்முடைய சக்தி எல்லாம் அந்தப் பக்கம் விரயத்திலே சென்றுவிடும் என்கின்ற அந்தச் சூழ்ச்சியோடு செய்கிறார்கள். பெரியாரை யாரும் இழிவுபடுத்த முடியாது, பெரியாரை யாரும் சுருக்கி விட முடியாது. ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஆசிரியரை வைத்துக் கொண்டு சொன்னேன், இந்த மண்ணில் இந்துத்துவாதிகளோ, இந்து மதமோ அல்லது பிராமணர்களோ பொட்டலம் கட்ட முடியாத ஒரு நெருப்பு இருக்கிறது என்றால் அது பெரியார் தான்.
அம்பேத்கரைக் கூட அவர்கள் பொட்டலம் கட்ட முயற்சிக்கிறார்கள், என்ன காரணம் என்றால் பௌத்தத்திற்குப் போனார் என்று. பௌத்தம் இந்து மதத்தின் ஒரு பகுதி என்று எழுதிவிட்டார்கள். அதைச் சட்டத்திலேயே கொண்டு வந்துவிட்டார்கள். யாரெல்லாம் இந்து என்று கேட்டால் யாரெல்லாம் இஸ்லாமியர்கள் இல்லையோ, யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையோ, யாரெல்லாம் அவர்கள் இல்லையோ இவர்கள் இல்லையோ அவர்களெல்லாம் இந்து. ஆனால் பௌத்தமும் ஜைனமும் இன்னமும் இந்து மதத்திலே வைத்திருக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட ஒரு பெருநெருப்பு இந்த மண்ணிலே தத்துவமாக இருந்து அந்தத் தத்துவம் இன்றைக்கு 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வரலாற்று புரிதல்
இன்றைக்கு இருக்கிற இளைஞர்களுக்கு என்ன பிரச்சனை? பழைய வரலாறு தெரியவில்லை. பழைய வரலாறு படிக்கவில்லை. இப்போது அதற்கென்ன பிரச்சனை, ஜாதியா, இப்ப என்ன ஜாதி, இப்ப என்ன தமிழ் மொழிக்கு ஆபத்து என்றெல்லாம் கேட்கிறார்கள். இன்றைக்கு வடிவங்கள் மாறியிருக்கிறது. கவனத்தைக் கொள்ளுங்கள். இங்கே நம்முடைய ஆசிரியர் தீர்மானத்தைப் படித்தார், எந்தெந்தத் துறைகளில் நாம் முன்னேறியிருக்கிறோம் என்று சொன்னார். இந்தத் துறைகளில் இருக்கிற முன்னேற்றத்திற்கெல்லாம் இந்த மண்ணில் ஆன்மீகமோ கடவுளோ காரணம் அல்ல; பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், திராவிட இயக்கமும், அவர்களுக்கு முன்னோடிகளாக இருந்த தத்துவமும் தான் காரணம்.
இந்தத் தத்துவத்தை நீங்கள் படிக்காவிட்டாலும் கூடப் பரவாயில்லை. ஆனால் இந்தத் தத்துவம் இன்றைக்கு எப்படி உருமாறியிருக்கிறது? டீலிமிடேஷன் (Delimitation) என்றொன்று வந்ததே, தொகுதி சீரமைப்பு. அந்தத் தொகுதி சீரமைப்புக்குப் பின்னாலிருக்கிற எவ்வளவு பெரிய ஆபத்து? புதிய நாடாளுமன்றத்தைக் கட்டினார்கள், 542 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு 545 பேர் கூடப் போடுங்க இருக்க, ஆனால் 850 இருக்கைகளைப் போட்டீர்களே என்ன காரணம்?
டீலிமிடேஷன் என்று சொல்லுகின்ற அந்த மறு வரையறை, தொகுதி வரையறை, மக்கள் தொகை அடிப்படையில நாங்கள் அதிகப்படுத்துவோம். தமிழ்நாட்டுக்கும் அதிகம் கிடைக்கும். எவ்வளவு வஞ்சகமான வார்த்தை. தமிழ்நாட்டுக்கு அதிகம் கிடைக்கும் எவ்வளவு? 4, 5. உத்தரப்பிரதேசத்துக்கு எவ்வளவு அதிகம் கிடைக்கும்? 80 அதிகம் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு மாநிலத்தையும் கணக்குப் போட்டால் அவர்கள் எங்கே வந்து நிற்கிறார்கள் தெரியுமா?
மறைமுகமாகப் பெரியாரிடத்திலேயும் திராவிடத்திடத்திலேயும் வந்து நிற்கிறார்கள். என்ன காரணம்? இந்த மண்ணில் இரண்டு தத்துவங்கள், இரண்டு பண்பாடு. இரண்டு பண்பாடுகளும் மொழி சார்ந்த பண்பாடு. ஒன்று ஆரியம், சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு. ஒப்புக்கொள்கிறோம் இல்லைன்னு சொல்லலையே, There was a culture, Aryan culture. அது அங்கே இருந்தது.
திராவிடத் தத்துவம் என்று ஒன்று இருந்தது. அந்தத் தத்துவத்தினுடைய தலைமை மொழியாகத் தமிழ் இருந்தது. அதற்குப் பிறகு “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் தாயே தமிழே உன் உதிரத்தே உதித்தெழுந்து ஒன்று பலவாயிடினும்” என்று திராவிடமாக இருக்கிறது. இந்தத் திராவிடம் சொன்ன இலக்கியம் வேறு, திராவிடம் சொன்ன வாழ்வியல் கூறு வேறு, திராவிடம் சொன்ன நீதி போதனைகள் வேறு, நீங்கள் சொன்ன வாழ்வியல் கூறு, நீதி போதனைகள் வேறு. வேறு வேறு மட்டுமல்ல எதிரானது என்பதை நிரூபித்த இயக்கம் தான் இந்த இயக்கம்.
தனி தமிழ்நாடு அன்றும் இன்றும்
அதனால்தான் “I belong to Dravidian stock” என்று அன்றைக்கு அண்ணா சொன்னார். அண்ணா அன்றைக்குச் சொன்னார் “I belong to Dravidian stock”. திராவிட நாடு பிரிவினையைக் கேட்டார் பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று சொன்னார் பெரியார். இன்றைக்கு அந்த முழக்கம் மாநிலச் சுயாட்சியாக மாறியிருக்கிறது. வடிவங்கள் மாறியிருக்கிறது.
நாடாளுமன்றத்திலே கூட பிரிவினை பேசுகிறார்கள். என்னுடைய உதகமண்டல தொகுதிக்கு வந்து நட்டா சொல்லுகிறார், ‘நாங்கள் எவ்வளவோ செய்து பார்க்கிறோம், தமிழ்நாடு தனியாகவே இருக்கிறது’. இதுவரை தமிழ்நாட்டை நாங்கள் பிரிப்பதாகச் சொன்னார்கள், இப்போது அவர்கள் சொல்லுகிறார்கள் ‘தமிழ்நாடு தனியாக இருக்கிறது’.
என்ன காரணம் தெரியுமா? ஒரு விசித்திரத்தைச் சொல்லுகிறேன், பெரியாருடைய வெற்றிக்குக் காரணம், இந்தத் தத்துவம், இந்தத் திராவிடம் எங்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தெரியுமா? ஒரு காலத்தில் தமிழ்நாடு கேட்டால் தப்பு என்றோம், நாங்கள் விட்டுட்டோம், இல்லை என்றுவிட்டோம். ஆனால், நாடாளுமன்றத்திலே சட்டங்கள் நிறைவேறுகிறது. என்ன சட்டம்? நீட்-க்கு (NEET) ஒரு சட்டம் நிறைவேறுகிறது.
நாடாளுமன்றம் எது? ‘The political will of the 140 crore people reflected in the Parliament’. அப்படித்தானே அர்த்தம்? இந்தியாவிலிருக்கிற எல்லா மக்களுடைய உணர்வும் நாடாளுமன்றத்திலே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்புதான் சட்டமாக மாறுகிறது. சரி சட்டம் வந்துட்டீங்க, EWS – பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி ஒரு கோட்டா கொண்டு வந்துட்டீங்க 10 சதவீதம். நீட் 10 சதவீதம் கொண்டு வந்துட்டீங்க.
நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது, அரசியல் சட்டத்தைத் திருத்தினார்கள். ஆனால், நீங்கள் கொண்டு வந்த சட்டத்தைத் தமிழ்நாடும் தமிழ்நாடு சட்டமன்றமும் ஏற்றுக் கொள்ளவில்லையே! நாங்கள் பிரிந்து கிடக்கிறோமா அல்லது நீங்கள் பிரித்து வைத்திருக்கிறீர்களா? டீலிமிடேஷன் (Delimitation) கொண்டு வந்தீர்கள், எந்த மாநிலமும் விழித்துக் கொள்ளவில்லை, நாங்கள் விழித்துக் கொண்டோம். ஏன்? எங்களுடைய உரிமை பறிபோகும்.
தென்னகம் இல்லாமலேயே இந்தியாவில் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றக்கூடிய அளவுக்கு நாடாளுமன்றத்திலே மிகப்பெரிய வலிமையை, மிருகத்தன்மையைப் பெற்றுவிடுவீர்கள். இப்போதே எங்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறீர்களே, அப்படி ஒரு வடிவம் நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது என்பதைச் சிந்தித்த ஒரு இயக்கம், ஒரு தலைமையில் இருக்கிறார்கள் என்றால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவனும், இந்தத் திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான். அதனால்தான் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எதைச் செய்தாலும் புரிந்துகொள்கிறார்கள், தெரிந்துகொள்கிறார்கள், வஞ்சகத்தைச் சூழ்ச்சியை முறியடிக்கிறார்கள். இது தனி மனித சாத்தியமா? ஸ்டாலின் என்கின்ற ஒரு மனிதன் யோசிக்கிறாரா? கூர்ந்து பார்க்கிறார்கள், அப்படித் தெரியவில்லையே. ஒருவேளை அவருக்குப் பின்னால் ஆசிரியர் வீரமணி என்கின்ற ஒரு சக்தி இருக்கிறது, அந்த காரணமா? அப்படியும் தெரியவில்லையே. பிறகுதான் தெரிகிறது, இந்த 92-ம் 72-ம் வெறும் மனிதர்கள் அல்ல, அவர்களுக்குப் பின்னால் பெரியார் என்கின்ற ஒரு தத்துவம் இருக்கிற காரணத்தால் நம்மால் வீழ்த்த முடியவில்லை.
எனவே அப்படிப்பட்ட தத்துவத்தைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துச் செல்கிறது என்று சொன்னால், அதற்கு காரணம் வற்றாத ஜீவ ஊற்றாகத் தாய்க்கழகம் இன்னமும் எங்களை இயக்கிக்கொண்டிருப்பதுதான் என்பதை நன்றியோடு நான் நினைத்துப் பார்க்கிறேன்.
எனவேதான் வந்திருக்கிற இளைஞர்களுக்குச் சொல்லுகிறேன், அன்றைக்கு இருந்த போராட்டங்கள் வேறு. தோள்சீலைப் போராட்டம் என்று சொன்னால் இப்போது எங்கே இருக்கிறது என்று கேட்பீர்கள். தெருவிலே நடக்க விடவில்லையா என்று கேட்டால் ‘ஆமாம் அதெல்லாம் முடிந்து போன கதை’ என்று சொல்வார்கள். பெண்களுக்குச் சொத்திலே பங்கு இருக்கிறதா என்றால் ‘அதான் வந்துவிட்டது’ என்று சொல்வார்கள். ஆனால் அப்போது இருந்த அடக்குமுறையினுடைய வடிவங்கள் இப்போது வேறு வேறு முறையில், மிக அமர்க்களமாக, வேறு விதத்திலே தெரியாமல் நியாயப்படுத்துகின்ற விதத்திலே, இதில் என்ன தவறு என்று சொல்லுகிற விதத்திலே வந்து கொண்டிருக்கிறது.
அந்தச் சூழ்ச்சியையெல்லாம் வீழ்த்துவதற்குப் பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார், பெரியார் என்றைக்கும் தேவைப்படுவார். அந்தத் தேவையைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற இரண்டு தலைவர்கள் வாழுகின்ற காலத்தில் நாங்கள் வாழுகிறோம் என்பது எங்களுக்குப் பெருமை. இந்த 72-ம் 92-ம் அல்லது இப்போது 73-ம் 93-ம் இருக்கிற வரை…
1929-ல் முதன்முதலாகத் தமிழர்களே, சூத்திரர்களே, இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று பெரியார் முதன்முதலில் சொன்னது எங்க ஊர் பெரம்பலூரில்தான்.. அப்புறம் தான் அது பெருசாயிடுச்சு.
எல்லா ஊருக்கும் பெரியார் தேவைப்படுகிறார். நீங்கள் தஞ்சாவூருக்கு மட்டும் தனியாகக் கட்டம் கட்ட முடியாது. இது பனிமலர் கண்ணன் காலத்திலிருந்து நான் பார்த்துக்கிட்டு இருக்கேன். நாங்கள் யார் தெரியுமா? இந்தக் கனிமொழி வேற சேர்ந்துப்பாங்க பார்லிமென்ட்ல. ‘நாங்கள் யார் தெரியுமா, நாங்கள் யார் தெரியுமா’ என.

பெரியார் இன்றைக்கு உலகம் முழுக்கத் தேவைப்படுகிறார். எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ, எந்த வடிவத்தில் அடக்குமுறை இருக்கிறதோ அந்த வடிவத்திற்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார். பெரியார் தேவைப்படுகிற வரை ஆசிரியரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாமனிதர்களும் போற்றப்படுவார்கள், வணங்கப்படுவார்கள், பாதுகாக்கப்படுவார்கள். அதற்காக நாம் எல்லாச் சிரமங்களையும் ஏற்றுக் கொள்வோம், எந்தக் களப்பலிக்கும் சித்தமாக இருப்போம் என்று சொல்லி உங்கள் அனைவரையும் வணங்கி விடைபெறுகிறேன், இவ்வாறு ஆ.ராசா உரையாற்றினார்.
