கள்ளக்குறிச்சி: மலையேறும் மலையரசன்… போராடும் குமரகுரு

Published On:

| By Aara

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2019ல்  பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சில பகுதிகளையும், சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளையும் கலந்து செய்த கலவைதான் கள்ளக்குறிச்சி தொகுதி.

 கள்ளக்குறிச்சியின் அடையாளங்கள்!

முக்கிய தொழில் விவசாயம். நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், காபி, மிளகு, கடுக்காய் தோட்டப் பயிர்கள், காய்கறிகள்அரிசி , வெல்லம், மரவள்ளிக் கிழங்கில் மாவு தயாரிப்பு செய்யும் சேகோ தொழிற்சாலைகள், சுற்றுலாத் தலமான  ஏற்காடு, பழங்குடியினர் வாழும் கல்வராயன் மலை ஆகியவை கள்ளக்குறிச்சியின் அடையாளங்கள்.

அதைப் போலவே தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற பேரவை தொகுதிகளில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகியவை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளன.

ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று சட்டமன்ற பேரவை தொகுதிகளும்  சேலம் மாவட்டத்தில் உள்ளன.

சங்கராபுரம், ரிஷிவந்தியம், தொகுதிகள் திமுக வசமும் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன.

மலை, காடு, சமவெளி, ஆறு என்று இயற்கையின் வெவ்வேறு வடிவங்கள் கள்ளக்குறிச்சியில் அமைந்திருக்கின்றன.

அருந்ததியினர், ஆதி திராவிடர்கள், வன்னியர்கள், பழங்குடியினர், உடையார்கள், கார்காத்த வேளாளர்கள், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள், குரும்ப கவுண்டர்கள், மலைவாழ் மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பல சாதிப் பிரிவினர் இத்தொகுதியின் வெவ்வேறு பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். தவிர முஸ்லிம்கள், கிறித்துவர்கள் ஆகிய மதச் சிறுபான்மையினரும் கணிசமான அளவில் வசிக்கின்றனர்.

திமுகவின் கோட்டை!

கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க.வின் கோட்டையாகும். 1957-ல் திமுக போட்டியிட்ட முதல் பொதுத்தேர்தலில் கலைஞர், பேராசிரியர் உட்பட 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதில் 4 பேர் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள்.

கள்ளக்குறிச்சி இரட்டைத் தொகுதியில் முடியனூர் நடராஜன், ஆனந்தன் ஆகியோரும் ஆத்தூர் இரட்டைத் தொகுதியில் எம்.பி. சுப்பிரமணியம் – இருசப்பன் ஆகியோர்தான் அந்த நால்வர்.

1967, 1971 ஆகிய இரண்டு தேர்தல்களில் முன்பு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி இடம் பெற்றிருந்தது. அந்த இரண்டு முறையும் திமுக-வை சேர்ந்த எம்.தெய்வீகன் வெற்றி பெற்றார். பிறகு இந்த தொகுதியில் தற்போது இடம் பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதிகள் கடலூர், ராசிபுரம் மக்களவைத் தொகுதிகளில்  இருந்தன.

தொகுதி மறுவரையறையில் மீண்டும் 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் 2009-ல் திருக்கோயிலூரைச் சேர்ந்த திமுகவின் ஆதி.சங்கர் பாமக-வின் கே.தனராஜுவை வென்றார்.  2014  தேர்தலில் தமிழகம் முழுதும் அதிமுக வென்ற நிலையில் கள்ளக்குறிச்சியிலும் காமராஜ் அதிமுக வேட்பாளர் வென்றார்.

 

2019  தேர்தலில் அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர்.கெளதம சிகாமணி தேமுதிகவின் சுதீஷை வீழ்த்தினார். ஆக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்த 5 தேர்தல்களில் நான்கு முறை திமுக-வும், ஒரு முறை அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளன.

கள்ளக்குறிச்சியின் மக்கள் பிரச்சினைகள்!

சமீப ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், கள்ளக்குறிச்சியை ஒட்டி அமைந்துள்ள கல்வராயன் மலை அடிவாரத்தில் இருக்கும் கோமுகி அணைக் கட்டு, மணிமுத்தாறு  அணைக்கட்டு கரிய கோயில் அணைக்கட்டு, மூன்றும் வறண்டு போயுள்ளன. அத்துடன், இந்த வறட்சியால்  கிழங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு, அது சேகோ (ஜவ்வரிசி) தொழிற்சாலைகளையும் பாதித்துள்ளது.

வட இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் கள்ளக்குறிச்சி ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்ய…  கள்ளக்குறிச்சியின் தொழிலாளர்கள் 100 நாள் வேலையும் இல்லாததால் பெங்களூருக்கும், கேரளாவுக்கும் கூலி வேலைக்காக சென்றுள்ளனர்.

கரும்பு விவசாயம் ஓரளவு வெற்றிகரமாக நடந்தாலும் உரம் கூலி உயர்வு கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் கரும்பு விவசாயிகள் பிரச்சினையில் இருக்கிறார்கள்.

 

சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில்வே பணிகளை துரிதப்படுத்தி   கள்ளக்குறிச்சியை திருவண்ணாமலையோடு  இணைக்கும் ரயில்பாதை திட்டம் 1958-ல் இருந்தே  இப்பகுதி மக்களின் கனவு திட்டம். இன்னும் அது கனவாகவே உள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் 15,11,972 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,50,610 பேர் ஆண்கள், 7,61,191 பேர் பெண்கள், 171 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

2024 தேர்தலில் திமுக சார்பில் புதுமுக வேட்பாளர்  மலையரசனும்,அதிமுக சார்பில் எடப் பாடிக்கு மிக நெருக்கமானவரும் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளருமான இரா.குமரகுருவும் .பாமக சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சேலம் ராமசாமி உடையாரின் மகனும் த.மா.கா வின் முன்னாள் எம்.பியாக இருந்தவருமான தேவதாஸ்  ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

திமுக வேட்பாளர் மலையரசன், அதிமுக வேட்பாளர் குமரகுரு ஆகியோரும் உடையார்தான் என்றபோதும், இதில் தேவதாஸ் உடையார் என்ற சாதி அடையாளத்துடன் அவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

மலையரசனின் மலைபோன்ற நம்பிக்கை!

மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், கல்லூரி செல்லும் பெண்களுக்கான மாத உதவித்தொகை, காலை உணவுத் திட்டம்,விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்  மின் இணைப்பு வழங்கியது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு ஏழைப்பெண்களுக்கு வருடம் ஒரு லட்சம் ஆகியவை தி.மு.கவிற்கு சாதகம்.

10 பேர், திருமணம் மற்றும் கோவில் இன் படமாக இருக்கக்கூடும்

ஏற்காடு, ஆத்தூர் தொகுதி,  வாக்களர்களுக்கு  2021 தேர்தலில் அதிமுகவினர் கொடுத்த டோக்கனின்  பலன் வாக்களர்களுக்கு இதுவரை கிடைக்காததால் அதிமுகவினர் மேல்  மக்களுக்கு உள்ள கோபம் ஆகியவை மலையரசனுக்கு மலைபோன்ற நம்பிக்கையை தருகிறது.

தேர்தல் பணிகளில் திறமை வாய்ந்தவரும் நினைத்ததை முடித்து காட்டுவதற்கு எந்த  ‘ரிஸ்க்’க்கும் எடுக்கத் தயங்காதவரான, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயனின் வலதுகரம்தான் இந்த மலையரசன்.

மலையரசனை  வேட்பாளராக்கி  கள்ளக்குறிச்சி தன் ஆளுகைக்குட்பட்ட மண்டலம் என்பதை நிரூபித்திருப்பதும்   தேர்தல் வேலை தெரிந்த அவரது ‘டீம்’ ஆட்கள் அனைத்து பணிகளையும் கவனித்து ஒருங்கிணைப்பதால்… டென்ஷன் இன்றி வேட்பாளர் மலையரசன் ஜீப்பில் ஏறி தொகுதி முழுக்க விறுவிறுவென இரண்டு சுற்று வாக்குகள் கேட்டு முடித்து விட்டார்.

 

பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் விவசாயிகள் வழக்கறிஞர்கள் மில் அதிபர்கள் என பல்வேறு  சங்கத்தினரை சந்தித்து ஆதரவையும் திரட்டி வருகிறார்,
கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட்கள்,இஸ்லாமிய கட்சிகள், தி.மு.க.விற்கு எல்லா வகையிலும் கூடுதல் பலம் சேர்க்கின்றன.

சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு, கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை  கூட்டம் போட்டு நிர்வாகிகளை முடுக்கி விடுகின்றனர். வேலு தினந்தோறும் தொகுதியின் அப்டேட்டை கேட்டுக்கொண்டு அதற்கேற்றாற்போல் வியூகங்களை மாற்றி அமைக்கிறார். இரு அமைச்சர்கள், வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களின் சுறுசுறுப்பே திமுக வேட்பாளர் மலையரசனுக்கு பெரும் பலம்.

சீட்டை எதிர்பார்த்து கிடைக்காமல் ஆரம்பத்தில் அதிருப்தியில் இருந்த… சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கமும் கட்சியின் உத்திரவிற்கு கட்டுப்பட்டு  வேகம் காட்டுவதுடன் பூத்வாரியாக நேரில் சென்று கவனித்து வருகிறார்.

சொதப்பும் நிர்வாகிகளை அடையாளம் கண்டு ‘பென் ‘ நோட் போட அவர்களுக்கு தலைமையிலிருந்தும் அன்றாடம் டோஸ் விழ அலறியடித்து கொண்டு தி.மு.க.வினர் சுணக்கமின்றி வேலை செய்கின்றனர். மேலும் பா.மக பிரிக்கும் வாக்குகள். டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  அ.தி.மு.க.வின் வாக்குகளை பிரிப்பதும் திமுகவிற்கு சாதகம்.

எடப்பாடியின் வலது கரமான அதிமுக வேட்பாளர்

5 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

 

அதிமுக வேட்பாளர் குமரகுரு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரம் போன்றவர். அது அவருக்கு பலமாக இருக்கும் நிலையில், அதே அதிகாரத்தில் பொது இடங்களில் நிர்வாகிகளை ஒருமையிலும், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் பேசுவதும்  பொது மேடைகளில் அநாகரிகமாக நடந்து கொள்வதும் அதிமுகவின் பலவீனம். அவருடன் அதிமுக நிர்வாகிகளே சற்று நெருடலோடுதான் பயணிக்கிறார்கள். பணம்தான் அவருக்கு பெரும் பலம்.

குமரகுரு 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியதே அதிமுக அரசுதான் என்றும், சின்னசேலம் அருகே சர்வதேச தரத்தில் கால் நடைப் பூங்கா அரசு அமைக்க எடப்பாடி அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த திமுக அரசு அதை திறக்கவில்லை என்றும் பிரச்சாரத்தில் பேசி வருகிறார்கள் அதிமுகவினர்.

தேமுதிகவினரும், புரட்சி பாரதம் கட்சியினரும் அதிமுகவுக்காக வேலை செய்கிறார்கள். அதிமுக சார்பில் பூத் செலவு முதல் அனைத்து செலவினங்களையும் சற்று அளந்தே செலவிட்டு வருகிறார்கள். திமுகவின் தீவிர வேலைகளை அறிந்த எடப்பாடி தனது சேலத்து நம்பிக்கைக்குரியவரான ஆத்தூர் இளங்கோவனை கள்ளக்குறிச்சியை கவனிக்கும்படி சொல்லியனுப்பியுள்ளார்.

பாமக வின் பலம் என்ன?

May be an image of 5 people and text

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பாமக நிர்வாகிகள் கணிசமானோர் தர்மபுரி தொகுதிக்கு சென்றுவிட்டனர். இதனால் பாமக வேட்பாளர் தேவதாஸ் உடையார் இரு பெரும் கழகங்களுக்கு இடையே தனது தேர்தல் பணியை முடிந்தவரை செய்து வருகிறார்.

இங்கே போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான். திமுகவில் இரண்டு அமைச்சர்கள், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பில் திமுக வேட்பாளரான மலையரசனே இப்போது வேகமாக மலையேறிக் கொண்டிருக்கிறார்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரபல தமிழ் வில்லன் நடிகர் மரணம்… திரையுலகினர் சோகம்!

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share