திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இம் மாநாட்டுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1.5 லட்சம் மகளிர் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நாளை (டிசம்பர் 29) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு திமுக மாநில மகளிர் அணி சார்பில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி, இந்த மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.
திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் திமுகவின்13, மாவட்டங்கள் 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 30 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. 140 ஏக்கர் பரப்பளவில் வாகனம் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வருகை தரும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் நிர்வாகிகளுக்கு மாவட்டம் வாரியாக தனித்தனி வண்ணங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. பெண்கள் அமர 1.5 லட்சம் இருக்கைகள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் மகளிர் மட்டும் பங்கேற்கும் பறையிசை நிகழ்ச்சி மற்றும் சிலம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்புரையாற்ற உள்ள முதலமைச்சரை நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் விழா மேடைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டின் போது ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அமர்வதற்கு என்று தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்துவதற்கு மேற்கு மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
மாநாடு நடைபெற உள்ள திடல் முழுவதும் திமுக ஆட்சியில் மகளிர் நலனை முன்னிறுத்தி செய்த சாதனைகள், நலத் திட்டங்களை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கு வருகை தரும் அனைவருக்கும் மதியம் மற்றும் இரவு உணவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிற்றுண்டிகள் அடங்கிய தொகுப்பு மற்றும் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தடையற்ற தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ வசதிக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மினி கிளினிக் மற்றும் தீயணைப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மாநாடு நடக்கும் பகுதியில் 350 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான மாநாட்டிற்கான கடைசி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் 1.31 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் கட்டணம் இல்லா பேருந்து பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், வேலைக்கு செல்லும் மகளிருக்கு பாதுகாப்பாக தோழி விடுதி, உள்ளிட்ட திட்டங்கள், 43 சதவிகிதம் வேலைக்கு போகும் பெண்களை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கான சூழல் உள்ளது போன்ற மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார். மேலும் மகளிருக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
மாநாட்டையொட்டி சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
