மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இன்று (அக்டோபர் 27) மருது சகோதரர்களின் 224-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தினை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
கேள்வி பதில்கள்
2026 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நீங்கள் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி விட்டீர்கள்… மீண்டும் இந்த கூட்டணியில் இணைவீர்களா? அல்லது வேறு கூட்டணியில் இணைவீர்களா?
தமிழக மக்கள் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க உள்ளோம். அதை முதலில் உங்களிடம் சொல்லிவிட்டு தான் மற்றவர்களிடம் சொல்வோம்.
விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா?
அவர் கட்சி ஆரம்பித்த உடனேயே சொல்லிவிட்டேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.
கரூருக்கு சென்று விஜய் ஆறுதல் சொல்லாமல் இங்கு அழைத்து வந்து ஆறுதல் சொல்லும் நிகழ்வை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
எது எப்படியோ… அந்தத் துயரச்சம்பவம் நடைபெற்று விட்டது. அங்கு சென்று அனுதாபம் தெரிவித்தால் என்ன இங்கு அழைத்து வந்து அனுதாபம் தெரிவித்தால் என்ன. அனுதாபம் தெரிவித்துவிட்டார். அதை பாராட்ட வேண்டுமே தவிர , காரணங்களை பற்றி பேசுவது சரியாக இருக்காது. உண்மையிலேயே இது பாராட்ட கூடியது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறதா?
இன்றைய சூழலில் மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் என்பது கண்கூடாக தெரிகிறது. எல்லா எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. திமுக வரும் என்று நான் சொல்லவில்லை மக்கள் பேசுகிறார்கள்.
