கோவி.லெனின் Voice of the Right to State Autonomy
ஏன் தமிழ்நாடு மட்டும் அடிக்கடி மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை எழுப்புகிறது? அதுவும் தி.மு.க. ஏன் இதை சட்டமன்றத்தில் தீர்மானமாகவே நிறைவேற்றுகிறது? 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள், நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான மூவர் குழு அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார் அன்றைய முதலமைச்சர் கலைஞர். 51 ஆண்டுகள் கழித்து 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் அதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தொடர்பாக 110 விதியின் கீழ் அறிக்கையை படித்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான மூவர் குழுவை அமைத்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது? Voice of the Right to State Autonomy
ஒன்றிய அரசில் ஒரு கட்சியும், மாநிலத்தில் இன்னொரு கட்சியும் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றிய அரசுடனான உரசல் போக்குகள் தொடர்ந்து நீடிக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவும், திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்குவங்காளமும் தமிழ்நாட்டைப் போலவே பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன. அந்த மாநில ஆளுங்கட்சிகள் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. ஆனால், பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான ஆட்சி நடந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முதல்வர் கலைஞர் நிறைவேற்றினார். Voice of the Right to State Autonomy
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நடக்கிறபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறார். கலைஞர் தீர்மானம் நிறைவேற்றியபோதும் அ.தி.மு.க அதை ஆதரிக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிக்கை படித்தபோதும் அ.தி.மு.க. அவையில் இல்லை. வெளிநடப்பு செய்துவிட்டது. தி.மு.க. மட்டும் ஏன் மாநில சுயாட்சி என்று முழங்குகிறது? தீர்மானம் கொண்டு வருகிறது? குழு அமைக்கிறது? Voice of the Right to State Autonomy

கலைஞர் ஆட்சியில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜி.ஆர்.எட்மண்ட், “அறிஞர் அண்ணா கேட்டது மாநிலங்களுக்கான உரிமைகளைத்தான். அவர் மாநில சுயாட்சி கேட்கவில்லை” என்றார். அப்போதிருந்தே, ‘மாநில சுயாட்சி’ என்றால் அ.தி.மு.க. சற்று தள்ளியே நிற்கும். உண்மையில், அண்ணா மாநில சுயாட்சி கேட்டாரா? இல்லையா? Voice of the Right to State Autonomy
அண்ணா தலைமையில் 1967ஆம் ஆண்டு தி.மு.க. முதன் முதலாக ஆட்சி அமைத்தபோது, “இது நீதிக் கட்சி ஆட்சியின் நீட்சி” என்றார். 1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அதன்பின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. நீதிக்கட்சியை ஆயிரம் அடி குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி 1937ல் சொன்னார். அண்ணா முதல்வரானதும் அதனை நினைவூட்டி, அவர்கள் புதைத்துவிட்டதாக சொன்ன அந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சியாகத்தான் 30 ஆண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சி மலர்ந்திருக்கிறது” என்றார். Voice of the Right to State Autonomy
பிரிட்டிஷ் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் ஆகியோர் வழங்கிய திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்த மாகாணங்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்துடன் தேர்தல் நடைபெற்றது. 1920ல் நடைபெற்ற இந்தத் தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்தது. அதனால் மற்ற மாநிலங்களில் சுயேட்சைகள் போட்டியிட்டு வென்றார்கள். கவர்னரின் நிர்வாகமே சட்டமன்றத்திலும் தொடர்ந்தது. ஆனால், சென்னை மாகாணம் மட்டும் மாறுபட்டிருந்தது. காங்கிரஸ் போட்டியிடாவிட்டாலும் நீதிக்கட்சி போட்டியிட்டது. வென்றது. ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் பெருந்தலைகள் சிலர் ஹோம் ரூல் இயக்கம் என்ற பெயரில் போட்டியிட்டு சட்டமன்றம் சென்றனர். Voice of the Right to State Autonomy
பணம், நிலம், பட்டம் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்கும் தேர்தல் அது. மாகாண (மாநில) சட்டமன்றத் தேர்தல் என்றாலும் ஒரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு இருக்கக்கூடிய அதிகாரம்தான் மாகாண அரசுக்கு உண்டு. நீதி, காவல் போன்ற அதிகாரங்கள் பிரிட்டிஷாரிடம்தான் இருந்தன. ஆனாலும், அந்த குறைந்தபட்ச அதிகாரத்தைக் கொண்டே வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசாணை என்கிற சமூக நீதியின் தொடக்கம், அதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பு, கல்வி உரிமை மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமை, பெண்களுக்கான வாக்குரிமை, சட்டமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம், அறநிலையச் சட்டம் என திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை சட்டவழியில் செயல்படுத்தியது நீதிக்கட்சி.

அதிகாரத்தைக் கொண்டு செயல்படுத்துவதுடன், அந்த அதிகாரத்தை வலிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதை குறைந்தபட்ச அதிகாரத்துடன் ஆட்சி செய்த நீதிக்கட்சி நிரூபித்துக் காட்டியது. பேரறிஞர் அண்ணாவின் அரசியல் செயல்பாடுகள் நீதிக்கட்சியில்தான் தொடங்கின. நீதிக்கட்சி முன்னோடிகளான மேயர் பாசுதேவ், சன்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியன் போன்றோரின் ஆங்கிலப் பேச்சுகளை மேடையில் தமிழில் மொழி பெயர்த்தார். சென்னை மாநகராட்சித் தேர்தலில் வடசென்னையில் உள்ள பெத்தநாயக்கன்பேட்டையில் நீதிக்கட்சி வேட்பாளராக அவர் போட்டியிட்டார். வெற்றி பெறாவிட்டாலும் அவருடைய அரசியல் ஆர்வமும் பணிகளும் தொடர்ந்தன. திருப்பூர் செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் பெரியாரை சந்தித்தபோது அவரது பொதுவாழ்வில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. பின்னர் தி.க.விலிருந்து பிரிந்து 1949ல் தி.மு.கவைத் தொடங்கி 1967ல் ஆட்சியையும் பிடித்தார் அண்ணா.
திராவிட நாடு கோரிக்கையுடன் தி.மு.கவைத் தொடங்கிய அண்ணா, 1962ல் மாநிலங்களவையில் திராவிட நாட்டின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசினார். 1963-ல் பிரிவினைத் தடைச்சட்டத்தின் காரணமாக, தனி நாடு கோரிக்கையை கைவிட்டது. “பிரிவினையைக் கைவிட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன” என்று அண்ணா சொன்ன வார்த்தைகள் நீறு பூத்த நெருப்பு. கங்குகள் அணையவில்லை. அந்தக் கங்குதான் மாநில சுயாட்சி. அதனால்தான் தேசிய கட்சிகள் அந்த வார்த்தையைக் கேட்டால் இன்னமும் அஞ்சுகின்றன. பிரிவினைவாதம் என அர்த்தப்படுத்துகின்றன. அ.தி.மு.க. என்பது பெயரளவில் ‘அனைத்திந்திய’ (அ.இ.அ.தி.மு.க.) கட்சியாக இருப்பதால் மாநில சுயாட்சி என்றதும் எதிர்க்கிறது, வெளிநடப்பு செய்கிறது. அண்ணா மாநில சுயாட்சி கேட்கவில்லை என்கிறது.
அறிஞர் அண்ணாவின் உயில் எனப்படும் தொண்டர்களுக்கான அவரது கடைசி கடிதம் 1969 ஜனவரியில் ஹோம் ரூல் மற்றும் காஞ்சி இதழ்களில் வெளியானது. அதில், “காகிதத்தில் கூட்டாட்சியாகவும், நடைமுறையில் மத்தியில் அதிகாரக் குவிப்பு கொண்டதாகவும் இருக்கிற ஓர் அரசியல் சட்டத்தின் கீழ் முதலமைச்சராக இருப்பதற்கு மகிழ்ச்சி கொண்டிருப்பவனுமல்ல” என்று அவர் எழுதியிருப்பதுடன், மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிரான நிலைப்பாட்டையும், அரசியல் சட்டம் என்பது கொல்லைப்புறமாகக் கொண்டு வரப்பட்ட இரட்டை ஆட்சி முறையாகத்தான் இருக்கிறது என்பதையும், கூட்டாட்சி முறையைப் பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார் அண்ணா.

அதிகாரங்கள் குறைந்த இரட்டையாட்சி முறை என்று அண்ணா வர்ணித்த அந்த வரையறைக்குள் இருந்துதான் அவர் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை முன்தேதியிட்டு நிறைவேற்றினார். சுயமரியாதைத் திருமண முறையை பல ஆண்டுகளாக பெரியார் வலியுறுத்தியும் நடத்தியும் வந்த நிலையில், அந்த சட்டத்தை பொதுவாக அப்படிச் சொன்னாலும், உண்மையில் அது, ‘தமிழ்நாடு அரசு இந்து திருமணத் திருத்தச் சட்டம்’ ஆகும். எங்கே திருத்தம் செய்தால் சட்டம் உண்மையான பயனைத் தருமோ, வாரிசுரிமை-சொத்துரிமை ஆகியவற்றுக்கு பாதிப்பு வராமல் இருக்குமோ அந்த திருத்தத்தை அவர் நிறைவேற்றியது என்பது மாநில சுயாட்சிக்கான அடித்தளம்.
அதுபோலவே, இந்தித் திணிப்புக்கு எதிராகவும், இந்திதான் இந்திய மத்தியஅரசின் அலுவல் மொழி-ஆங்கிலம் இணை அலுவல் மொழி என்ற அளவில் மத்திய அரசு சட்டமியற்றிய நிலையில், 1968 ஜனவரி 23ஆம் நாள் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று கூறி, இருமொழிக் கொள்கை சட்டத்தை அண்ணா நிறைவேற்றியதும் மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்டு, மத்திய அரசுக்கு அவர் விடுத்த சவாலாகும். 1968 ஜனவரி 25ஆம் நாள் சென்னை நேப்பியர் பூங்கா (மே தினப் பூங்கா)வில் தி.மு.க. நடத்திய மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய அண்ணா, “என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்றார். அண்ணா சொல்லி 57 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது. இதுதான் மாநில சுயாட்சியின் உரிமைக் குரல். Voice of the Right to State Autonomy

அறிஞர் அண்ணாவின் அந்தக் குரலை சட்டப்பூர்வமாக்குவதற்காக அவருக்குப் பின் முதலமைச்சரான கலைஞர் 1969ல் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து, அதன் அறிக்கையைப் பெற்று, பிரதமர் இந்திராகாந்திக்கு 1971ல் அனுப்பி வைத்தார். 1974 ஏப்ரல் 16 அன்று அந்தப் பரிந்துரைகளில் சாத்தியமானவற்றைக் கொண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். சட்டப் பேரவையிலும் சட்ட மேலவையிலும் மிக நீண்ட விவாதங்கள் நடைபெற்றன.
எல்லாத் தரப்பு கேள்விகளுக்கும் முதலமைச்சர் கலைஞர் பதிலளித்தார். “அதிகாரங்கள், கூடுதலாக மாநிலங்களுக்கு வேண்டுமென்று கேட்பதால் மத்திய சர்க்காரிலே குறைவான அதிகாரங்கள்தான் இருக்க வேண்டுமென்று பொருள் அல்ல. மத்திய சர்க்காருக்கு அதனுடைய வலிவு காக்கப்படுவதற்கான அதிகாரங்கள் அங்கே இருக்க வேண்டுமென்பதும், மாநில சர்க்கார்களுக்கு அந்த மாநிலங்களின் வளம் பெருக்கப்படுவதற்குத் தேவையான அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் மாநில சுயாட்சியினுடைய நோக்கம்” என்றார் கலைஞர். Voice of the Right to State Autonomy
சுருக்கமாகச் சொன்னால், பாதுகாப்புத் துறை(ராணுவம்), வெளியுறவுத் துறை, நாணயம்(கரன்சி) இவை மத்திய அரசாங்கத்திற்குரியவை. மக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய துறைகளும் வரி வசூல்-நிதி நிர்வாகம் உள்ளிட்டவையும் மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ் வரவேண்டும். Voice of the Right to State Autonomy
இது குறித்து கலைஞர் விளக்கினார், “நாட்டு பாதுகாப்புத் தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகிற மீதியுள்ள அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் என்றார்.
மத்தியில் கூட்டாட்சி என்கிறீர்களே அதற்கு விளக்கம் என்ன என்று சுதந்திரா கட்சியின் உறுப்பினரான எச்.வி.ஹண்டே குறுக்கிட்டபோது, அதற்கு விளக்கமளித்த கலைஞர், “வெளியுறவுக் கொள்கை மத்திய அரசின் அதிகாரங்களின் கீழ் வரும் நிலையில், கச்சத்தீவு உள்ளிட்ட அந்தந்த மாநிலங்கள் சார்ந்த பிரச்சினைகளில் மத்திய அரசு முடிவெடுக்கும்போது, மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒத்திசைவுப் பட்டியலின் கீழ் உள்ள துறைகளில் மத்திய அரசு எடுக்கும் முடிவகளை மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது. அந்தந்த மாநிலங்களின் தன்மை, விருப்பம் ஆகியவற்றை அறிந்தே முடிவெடுக்கவேண்டும். இதுதான் கூட்டாட்சி தத்துவம்” என்றார் கலைஞர். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானத்தை மற்ற மாநில முதலமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்தார் கலைஞர். Voice of the Right to State Autonomy
தீர்மானம் நிறைவேற்றி 51 ஆண்டுகளாகியும் மாநில சுயாட்சி மலர்ந்து விட்டதா? இல்லை. முழுமையான வெற்றி கிடைக்கவில்லை என்பதால்தான் மீண்டும் மாநில சுயாட்சிக்கான முன்னெடுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். மாநில சுயாட்சி என்பது பூந்தோட்டமல்ல. நட்டு வைத்த செடியில் இருந்த மொட்டு சட்டென மலர்வதற்கு. இது ஒரு தொடர்ச்சியான ஜனநாயகப் போராட்டம். ஒவ்வொரு களமாகத்தான் முன்னேற முடியும்.
தி.மு.க.தான் இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்த முதல் கட்சி. அதன்பின் 20 ஆண்டுகளில் அண்டை மாநிலங்கள் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளின் ஆட்சி அமைந்தது. தி.மு.க. ஆட்சிதான் மொழிக்கொள்கையை சட்டமாக்கிய ஆட்சி. இன்று பல மாநிலங்களும் அதனைப் பின்பற்றுகின்றன. Voice of the Right to State Autonomy
இந்தியாவின் தேசிய கீதம் போல தமிழ்நாட்டுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்களிடமிருந்த தேசியக் கொடி ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்குப் பெற்றுத் தந்தது, மாநிலத்திற்கான திட்டக் கமிஷன், பொது நுழைவுத் தேர்வு ரத்து, தேசிய முன்னணி ஆட்சியில் பிரதமர் வி.பி.சிங் அமைத்த மாநில உரிமைகள் தொடர்பான இன்டர்ஸ்டேட் கவுன்சில், ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது தி.மு.க முன்னெடுத்த த.மா.கா, தெலுங்குதேசம், அசாம் கண பரிஷத் கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணி (Federal Front), வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் மதவாதக் கொள்கைகளுக்கு கடிவாளம் போட்டு- மாநில நலன்களை முன்னிலைப்படுத்திய குறைந்தபட்ச பொது செயல்திட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு இவை எல்லாமும் கலைஞரின் மாநில சுயாட்சிக் கொள்கையின் படிப்படியான விளைவுகளே. Voice of the Right to State Autonomy
உறவுக்கு கை கொடுப்போம்- உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதை முன்வைத்து தி.மு.க. மொழிகின்ற மாநில சுயாட்சியின் குரல், இந்திய அரசியல் சட்டத்தில் இன்னமும் முழுமையாக நிறைவேறாமல் இருக்கின்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கான அடிநாதம். ஆளுநர் பதவி தேவையா என அண்ணா எழுப்பிய கேள்வி இன்றும் நியாயத்தின் குரலாக ஒலிக்கிறது.
ஆளுநர் பதவி என்பது பெயரளவிலான அதிகாரம்தான் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முடிவுகளே வலிமையானவை-இறுதியானவை என்பதையும் உச்சநீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 சட்ட முன்வடிவுகள், ஆளுநரின் கையெழுத்தின்றி சட்டங்களாகியிருப்பது ஜனநாயகத்தின் வெற்றி. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, மத்திய அரசின் வல்லாதிக்கப் போக்கை எதிர்க்கும் கேரளா, மேற்குவங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில ஆட்சிகளுக்குமான பாதுகாப்பு அரண். நீட் தேர்வு ரத்து, நிதிப் பங்கீடு, மொழிக்கொள்கை உள்பட இன்னும் கடக்க வேண்டியவை நிறைய உள்ளன. அவற்றுக்கான நம்பிக்கைதான் மாநில சுயாட்சி குறித்த முதல்வரின் அறிக்கை.
இந்திய அரசியலில் மாநில உரிமைக்கான அடையாளமாக தி.மு.க. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகள், அனைத்து மாநிலங்களின் நலன்களையும் பாதுகாத்தன. பிற மாநிலங்களும் அதே வழியைப் பின்பற்றுவதற்குத் துணையாக உள்ளன. தமிழ்நாட்டின் அடங்காத உரிமைக்குரல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மௌனமானப் பகுதிகளைக் கண்டறிந்து மாநில சுயாட்சிக்கான முழக்கங்களாக முன்னெடுக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.