ராஜன் குறை
திருவண்ணாமலையில் தி.மு.க இளைஞரணியின் எழுச்சிமிகு மாநாடு பிரம்மாண்டமாக நடந்தேறியுள்ளது. இளைஞரணித் தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், பாஜக வியூக வகுப்பாளர் அமித் ஷா தமிழ்நாட்டைக் கைப்பற்றுவோம் என்று கூறியதற்கு அந்தக் கனவு நிறைவேறாது என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினும் பாஜக-விற்கான முழுமையான கொள்கை, கருத்தியல் எதிரி இந்தியாவில் தி.மு.க-தான் என்பதை எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த இளைஞரணி மாநாட்டின் முக்கியத்துவத்தை நாம் இரண்டு அம்சங்களை இணைத்து புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று திராவிட மாடல் அரசு சாதித்துள்ள தமிழ்நாட்டின் தடுக்கவியலாத பொருளாதார வளர்ச்சி. ஒன்றிய ரிசர்வ் வங்கியே தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனை பாஜக-வால் எதிர்கொள்ள முடியவில்லை.
அதனால் தமிழ்நாட்டில் கால் பதிக்கத் துடிக்கும் பாஜக, அதற்குத்தெரிந்த ஒரே அரசியலான மதவாதக் கலவர அரசியலை திருப்பரங்குன்றத்தில் உருவாக்க முனைகிறது. அதனை வெளிப்படையாகவே திருப்பரங்குன்றத்தை தமிழ்நாட்டின் அயோத்தி ஆக்குவோம் என்று கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நாங்கள் நினைத்தால் பிரச்சினையைக் கையிலெடுப்போம். நீதிமன்றமே தீர்ப்பளிக்கட்டும் எனக் காத்திருக்கிறோம் என்கிறார்.
அயோத்தி பிரச்சினையில் எப்படி இறையுணர்வை மதவாதமாக்கி, முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பரசியல் செய்து, வன்முறைக் கலவரங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தார்கள் என்பது வரலாறு. அதைப்போலவே தமிழ்நாட்டிலும் திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்து மதவாத அரசியல் செய்யலாம் என முயற்சிக்கிறார்கள்.
வளர்ச்சிப் பாதையிலே, சமூக நீதியை முன்னிலைப்படுத்தி, எல்லோருக்கும் எல்லாம் என்று முன்னேறும் தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு முறியடித்த வர்ண தர்ம மேலாதிக்கத்தை மீட்டுடெடுக்க விரும்புகிறார்கள். இதனை விரிவாக புரிந்துகொள்வது காலத்தின் அவசியம்.

அயோத்தியில் என்ன நடந்தது?
அயோத்தியில் பாபர் மசூதிக்கு வெளியே இருந்த பொது நிலத்தில் 1857-க்குப் பிறகு ஒரு சிறிய மேடை கட்டி அதில் ராமர் வழிபாட்டைத் துவங்கினார்கள். அதுதான் ராமர் பிறந்த இடம் என்று கூறினார்கள். மசூதி நிர்வாகம் அந்த கோயில் கட்டப்படுவதற்கு எதிராக வழக்குத் தொடுத்தது. நீதிமன்றம் அந்த கோயிலை முழுமையாகக் கட்டக் கூடாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்து சன்னியாசிகள் மசூதிக்குள்தான் ராமர் பிறந்தார் என்று கூறத்தொடங்கினார்கள். அதனால் கோயிலை முழுமையாகக் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள்.
கோரக்பூர் மஹந்த்தாக இருந்த திக்விஜய்நாத் என்பவரும், மாவட்ட நீதிபதியாக இருந்த கே.கே.கே.நாயர் என்பவரும் 1946-ஆம் ஆண்டு இந்த பிரச்சினையை கையில் எடுத்து ராமர் கோயிலை மசூதிக்குள் கட்டவேண்டும் என்று முடிவெடுத்ததாக கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே.ஜா எழுதிய நூலில் ஆதாரத்துடன் கூறுகிறார்கள். இருவரும் பின்னாளில் ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்.
மசூதியைக் கைப்பற்றும் திட்டத்தைச் செயல்படுத்த அயோத்தியாவின் புகழ்பெற்ற அனுமான் கர்ஹி (ஆனுமன் வீடு) என்ற மடாலயத்தைச் சார்ந்த அபிராம் தாஸ் என்ற சன்னியாசியை அணுகினார்கள். அபிராம் தாஸ் 22, டிசம்பர், 1948 அன்று இரவு ரகசியமாகச் சுவர் ஏறிக்குதித்து ராமர் சிலையை மசூதிக்குள் சென்று வைத்தார்.

மறுநாள் அந்த ராமர் சிலை தானாக மசூதியில் தோன்றிவிட்டதாக செய்தி பரப்பினார்கள். அந்த மசூதியின் முஸ்லீம் காவலாளியும் திடீரென்று மசூதிக்குள் விடிகாலையில் பூஜை செய்யப்பட்டதால் அந்த சிலை மசூதிக்குள் தானாக வந்துவிட்டது என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டார்.
இது ஒரு சதிவேலை என்று நினைத்தவர்கள் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினாலும், வழக்கு சிக்கலாக இருந்த தால் மசூதி வளாகம் அப்படியே பூட்டப்பட்டது. பிரதமர் நேரு சிலைகளை மசூதி வளாகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றுதான் கூறினார். ஆனால் உத்திரப் பிரதேச காங்கிரஸ் அரசு அதனைச் செய்யவில்லை.
முப்பதாண்டுகளுக்குப் பிறகு அந்த மசூதி வளாகத்தைத் திறந்து விட ராஜீவ் காந்தி ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட போது மீண்டும் ராம ஜன்ம பூமி இயக்கத்தைத் தொடங்கினார்கள் சங்க பரிவார அமைப்புகள். ரத யாத்திரை, கர சேவை என்றெல்லாம் பல கட்டமாக இயக்கங்களை முன்னெடுத்து 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள். அதன் பிறகு நீண்ட காலம் நடந்த வழக்கின் இறுதியில் அந்த இடம் ராமருக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அந்த இடத்தில் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கு என்ன?
திருப்பரங்குன்றம் மலையின் கீழ் பகுதியில் முருகன் கோயில் இருக்கிறது. அந்த மலையின் மற்றொரு பகுதியில் உயரமான பாறை மேல் சிக்கந்தர் தர்க்கா இருக்கிறது. அந்த மலையில் பல சமணக் குடவரைகளும், காசி விஸ்வநாதர் ஆலயமும், உச்சிப் பிள்ளையார் கோயிலும் வெவ்வேறு பாறைகளில் உள்ளன. இந்த மலையில் வெகுகாலமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வழிபாடுகள் நிகழ்ந்து வருகின்றன. மதுரைக்கு அருகிலுள்ள தலமென்பதால் பக்தர்கள் அதிகம் செல்லும் இடமாகத் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
வட நாட்டு சங்க பரிவார அமைப்புகளுக்கு கிளைகளுக்கு மலையில் உள்ள சிக்கந்தர் தர்க்கா கண்ணை உறுத்தியுள்ளது. அதை வைத்து ஏதெனும் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று நாற்பதாண்டுகளாக முயற்சிகள் செய்து வருகிறார்கள். ஒட்டுமொத்தமான மலையும் இந்துக்களின் புனிதத் தலம், அங்கே தர்கா இருக்கலாமா என்றும், தர்க்காவிற்கு கீழுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள சமாதிகளில் வழிபடுபவர்கள் மாமிசம் சாப்பிடலாமா என்றும் பிரச்சினை செய்யத் தொடங்கினார்கள்.
முருக பக்தர்கள் பெரும்பாலானோர் மாமிசம் சாப்பிடுபவர்கள்தான் என்ற போதும் மலை புனிதமான இடம் என்றெல்லாம் கூறி பிரச்சினை செய்ய முயற்சிக்கிறார்கள். ரிக் வேதத்தில் யாகம் செய்து ஆடு மாடுகளை கடவுள்களுக்கு பலியிடுவதுதான் புனிதமான பழக்கமாகக் கூறப்பட்டுள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள்.
இந்த பிரச்சினையின் ஒரு பகுதியாக கார்த்திகை தீபத்தை எங்கே ஏற்றுவது என்று ஒரு வழக்கை உருவாக்கினார்கள். கார்த்திகை தீபம் முருகன் கோயிலுக்கு நேர் மேலே உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் உள்ள நாயக்கர் காலத்து தீபத்தூணில்தான் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் தர்க்காவிற்கு அருகே ஆங்கிலேயர்கள் நட்டு வைத்த நில அளவைக் கல்தான் உண்மையான தீபத்தூண் என்றும் அங்கேதான் தீபம் ஏற்றவேண்டும் என்று வழக்குப் போட்டார்கள்.

அந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு கோயில் நிர்வாகம் வழக்கமான நடைமுறைப்படி தீபம் ஏற்றினால் போதுமானது என்று தீர்ப்பளித்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு அயோத்தியில் செய்தது போலவே ஒரு திடீர் வழக்கைப் போட்டு, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மூலம் மலை உச்சியில் உள்ள நில அளவைக் கல்லில்தான் தீபம் ஏற்றவேண்டும் என்று ஒரு தீர்ப்பைப் பெற்று கலவரம் செய்ய முயற்சித்தார்கள். மாநில அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. திருப்பரங்குன்ற மக்களும் இந்த தேவையற்ற கலவர முயற்சிக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை.
தர்க்காவிற்கு வெளியே 50 மீட்டருக்கு அப்பாலுள்ள தூணில் விளக்கேற்றினால் என்ன என்று சிலர் அப்பாவியாக கேட்கிறார்கள். இந்துத்துவ சக்திகளின் நோக்கமே அப்படிச் செய்யத் துவங்கி தர்க்காவுடன் பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்களே அயோத்தி போல பிரச்சினை செய்ய வேண்டும் என்ற அரசியல் கலவர திட்டத்தைக் கூறினாலும் புரிந்து கொள்ளாவிட்டால் என்ன செய்ய முடியும்?
இந்த பின்னணியில்தான் திராவிட இயக்கம் எப்படி இறை வழிபாட்டை அணுகுகிறது என்பதை நாம் அரசியல் தத்துவ அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியாரின் சுயமரியாதை என்ற ஆன்மீகம்
பெரியார் இந்து மதக் கடவுள் நம்பிக்கை பார்ப்பனீய மேலாதிக்கத்திற்கு வழி வகுப்பதைக் கண்டார். வைக்கம் போராட்டத்தில் எப்படி வர்ண தர்ம சிந்தனை தீண்டாமையை நியாயப்படுத்தியது என்பதைக் கண்டார். அதனால் பகுத்தறிவு நோக்கில் மானுட வாழ்விற்கான ஆதாரம் எது என்பதை அறிய வேண்டும் என்று நினைத்தார். அவருடைய பிரகிருதிவாதம் நூலில் தெளிவாக மத அமைப்புகளின் பிரச்சினைகளை விவரித்தார். சுயமரியாதையின் அடிப்படைகளை அந்த நூலில் காணலாம்.
“என்னுடைய சட்டை” என்று ஒருவர் சொல்லும்போது நான் என்ற சுயம் வேறு, சட்டை வேறு என்று தெளிவாகத் தெரிகிறது. அதே போல “என்னுடைய ஆன்மா” என்றும் கூறுவதால் ஆன்மா என்னும் உயிர்ச்சக்தி வேறு, நான் என்ற தன்னுணர்வு வேறு என்று தெளிவாகிறது.
உடல் இயக்கம் நின்ற பிறகு அதில் இயங்கும் உயிர்சக்தி ஆன்மா என்று பிரிந்து மேலுலகம் செல்கிறதா, மறுபிறவி எடுக்கிறதா என்பதையெல்லாம் பகுத்தறிவால் சொல்ல முடியாது, அப்படியெல்லாம் மக்கள் நம்பலாமே தவிர புலன் அனுபவமாகவோ, தர்க்கமாகவோ ஆதாரம் தர முடியாது.
அதே போல இந்த பேரண்டம் எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது என்றெல்லாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால் இந்த இயற்கைப் பெருவெளியை இறை சக்திதான் உருவாக்கி இயக்குகிறது என்று ஒருவர் நம்பலாம். பல வடிவங்களில் வழிபடலாம். ஆனால் பகுத்தறிவின் தர்க்கப்படி நிறுவ முடியாது.
அதனால் கடவுள் நான்கு வர்ணங்களைப் படைத்தார். ஒரு பிறவியில் ஒருவர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறு பிறவியில் அவர் ஒரு வர்ணத்தில் பிறப்பார் என்றெல்லாம் கூறுவது மூட நம்பிக்கை என்று அறுதியிட்டார் பெரியார்.
நான் என்ற தன்னுணர்வு நம்மை சிந்திக்க வைப்பதால் அதற்கு நாம் தரும் மரியாதை என்பது மூட நம்பிக்கைகளை பின்பற்றாமல் இருப்பதுதான் என்றார். நம்மைப் போன்ற பிற மனிதர்களை உயர்ந்தவர்கள் என்றோ, தாழ்ந்தவர்கள் என்றோ நடத்தக் கூடாது என்பதே சுயமரியாதை என்று தெளிவுபடுத்தினார்.
அதனால் தன்னுணர்வின் ஆன்மீகம் என்பது அனைத்து தன்னுணர்வு கொண்டவர்களும் சமம் என்று சமதர்ம நோக்கினைக் கொள்ளும் சுயமரியாதைதான் என்று கூறலாம். இந்த நோக்கினை வலியுறுத்த பெரியார் இறைமறுப்பு வாதத்தை வலியுறுத்தினார்.

தி.மு.க-வின் மத நல்லிணக்கம்
பெரியார் பொதுவான மானுட பகுத்தறிவுச் சிந்தனையை வலியுறுத்தவே, பாப்பனீய வர்ண சமூக அமைப்பை தகர்க்கவே இயக்கம் நடத்தினார். அவர் அதனால் மக்களை அணிசேர்க்கும் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தேர்தல் அரசியலிலும் ஈடுபடவில்லை.
அவரிடமிருந்து விலகி தி.மு.க-வை தோற்றுவித்த அண்ணா திராவிட-தமிழ் மக்கள் என்ற அரசியல் தொகுதியை கட்டமைக்க விரும்பினார். அப்பொதுதான் ஆரிய வர்ண தர்மத்தை முற்றிலும் தவிர்க்கும் திராவிட வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்பதை உணர்ந்தார்.
அதே சமயம் பொதுவாழ்வில் திராவிட-தமிழ் மக்கள் தொகுதி சுயமரியாதையைப் பயின்றாலும். தனிப்பட்ட வாழ்வில் இறையுணர்வு, இறை நம்பிக்கை ஆகியவற்றை கைவிடச் சொல்வது கடினம் என்று உணர்ந்தார். முன்னோர் வழிபாடு போன்ற சடங்குகளை அனைவரும் கைவிடுவது கடினம். எனவே தனிப்பட்ட வாழ்வில் அவரவர் பாணியில் இறைவழிபாடு சடங்குகளை பின்பற்றினாலும், பொதுவாழ்வில் அனைவரும் சமத்துவ சமூகமாக இயங்குவதே அவசியம் என்று கருதினார்.
இந்த புரிதலை உணர்த்த தமிழ் சைவ ஞானி திருமூலர் கூறிய “ஓன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற வாக்கியத்தை தி.மு.க-வின் மத நல்லிணக்க தத்துவமாகக் கூறினார். இதனைப் பலர் பெரியாரின் இறைமறுப்பு வாதத்திலிருந்து வழுவிய சமரசமாகக் கருதினார்கள். அது அப்படியல்ல. இரண்டு பாதைகளின் நோக்கமும், ஆரிய வர்ண தர்மம் களைந்த சுயமரியாதைச் சமூகத்தைக் கட்டமைப்பதுதான் எனலாம். வரலாறு இதனை நிரூபித்துள்ளது.
ஒன்றே குலம் என்றால் என்ன? வம்சாவழியாக வருவதைக் குலம் என்கிறோம். சோழர் குலம், பாண்டியர் குலம் என்றெல்லாம் கூறுவோம். ஒருவருடைய சந்ததியினர் அனைவரும் வழிபடும் கடவுளை குலதெய்வம் என்று கூறுவோம். அப்படியானால் எத்தனையோ குலங்கள் உள்ளன என்னும்போது ஒன்றே குலம் என்பதன் பொருள் என்னவாக இருக்க முடியும்? மனித குலம் என்ற மானுட பொதுமையைத்தான் அப்படி ஒன்றே குலம் என்று கூற முடியும்.
அப்படி அனைத்து மனிதர்களும் ஒரே குலம் என்றால், அனைவர் வழிபடும் இறைவடிவமும் குறிப்பது ஒரே இறைமையாகத்தானே இருக்க முடியும்? அதனால்தான் ஒன்றே குலம் என்பதிலிருந்து ஒருவனே தேவன் என்பது பெறப்படுகிறது. யார் எந்த வடிவில் இறைமையை வழிப்பட்டாலும் அந்த இறைமை மானுடப் பொதுமையின் வடிவம்தான் என்பதே பொருள். இதனை உணர்ந்தால் பிற மதத்தவர்களுடன் விரோதம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதுவே மத நல்லிணக்கத்தின் தத்துவம்.
இதையே சிவ வாக்கியர் “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்? சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?” என்றார். கறியைச் சமைக்க அடுப்பு, சட்டி, சட்டுவம் எல்லாம் அவசியம் வேண்டும். ஆனால் கறியின் சுவையை தன்னுணர்வு கொண்ட மனிதன் தான் அறிய முடியும். அதே போல கோயில், தர்க்கா என்றெல்லாம் இறைமையை பலவாறு வடிவமைக்கலாம். ஆனால் மானுடத் தன்னுணர்வுதான் அதனை உணர முடியும் என்னும்போது அந்த உணர்வு பொதுவானது.
அந்த பொதுவான தன்னுணர்வுதான் மனிதர்களிடமிருந்து ஏற்றத்தாழ்வை நீக்க முடியும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூற முடியும். அதுவே சுயமரியாதையாகவும் விளங்க முடியும்.
மதச்சார்பின்மை என்ற அரசு வடிவம்
நல்லிணக்கத்துடன் வாழும் மக்கள் பல்வேறு வடிவங்களில் இறைமையை வழிபடுவார்கள். பல மத அமைப்புகளை உருவாக்கிக் கொள்வார்கள். அனைவருக்கும் பொதுவான அரசு எந்த மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதுதான் மதச்சார்பின்மை.
அரசிற்கு எந்த மதமும் கிடையாது என்பதால் மக்கள் எல்லோருமே ஒன்றே போன்ற குடிநபர்கள்தான். அரசின் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை. இந்திய அரசமைப்பு சட்ட த்தை எழுதியபோது அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் இந்துத்துவம் அப்படி நினைக்கவில்லை. சாவர்க்கர் இந்தியா புண்ணிய பூமி என்றும், இந்தியாவிற்கு வெளியே புனிதத் தலங்களைக் கொண்டவர்கள் முழுமையான இந்தியக் குடிமக்களாக இருக்க முடியாது என்று கருதினார். அதாவது கிறிஸ்துவர்களோ, முஸ்லீம்களோ, யூதர்களோ யாருடைய புனிதத் தலங்கள் இந்திய எல்லைக்கு அப்பால் உள்ளதோ அவர்களெல்லாம் முழுமையான இந்தியக் குடிமக்கள் கிடையாது என்று கருதினார்.
இந்த அடிப்படை கொள்கை வேறுபாட்டை மறைபொருளாகக் கொண்டுதான் தனது முஸ்லீம் வெறுப்பு அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. அதற்கு ஆதாரமாக அது இந்து மதத்தை சனாதன மதம் என்று முன்னிறுத்தும் போது, அதில் வர்ண தர்மத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதான் சொல்கிறது. அதனால்தான் வர்ண தர்மத்தை எதிர்க்கும் திராவிட-தமிழ் பண்பாட்டை சனாதனத்தை எதிர்க்கும் மாநிலமாக நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகிறார்.
சனாதனம் என்றால் மாறாதது என்று சிலர் பொருள் கூறுகிறார்கள். அப்படி மாறாமல் இருப்பது எது என்று கூறுவதில்லை. வர்ண தர்மம் தான் அப்படி மாறாமல் இருக்கும் கோட்பாடு என்று காசி இந்து பல்கலைகழக வெளியீடுகள் சொல்கின்றன. அதனை அறியாதது போலத்தான் பாஜக-வினர் பேசுகிறார்கள். இவர்களுடன்தான் ஆரிய மாயை எழுதிய அண்ணா பெயரைக் கொண்ட கட்சி கூட்டணி வைக்கிறது. அவர்களது மதக்கலவர அரசியலுக்கு துணைபோகிறது.
அனைத்து சதிகளையும் முறியடித்து, தனது திராவிட அரசியல் தத்துவப் பாதையில் பயணிக்கிறது தி.மு.க. தமிழ்நாட்டையும் முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்கிறது! திராவிட தமிழர் தன்னுணர்வு அந்த வரலாற்றிற்கு வழிகாட்டும்!
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
