திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 3) நடைபெற்றது. dmk district secretary meeting
இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது, ஜூன் 1-ஆம் தேதி மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இரங்கல் தீர்மானங்கள்:
ஜம்மு – காஷ்மீர் பகல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் மற்றும் முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 1
திராவிட மாடல் அரசின் ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருக்கு துணையாகச் செயலாற்றி வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து அமைச்சர்களுக்கும் பாராட்டும் நன்றியும்.
தீர்மானம் : 2
திமுக அரசின் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!” சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

தீர்மானம் : 3
திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும்.
தீர்மானம் : 4
நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறிக் குறுக்கிட்டு அந்த அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறித்து வருவதோடு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ரெய்டுக்கும், சோதனைகளுக்கும் இலக்காகும் வகையில் அதிகார அத்துமீறல் செய்து அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை உருவாக்கி வரும் ஒன்றிய பாஜக அரசுக்கு இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதன் விளைவாக இன்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த அமைப்புகளை ஆளாக்கி, அதிமுக போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க ஒன்றிய பாஜக அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையை “பழிவாங்கும் நடவடிக்கை” எனக் கூறிய அமலாக்கத்துறையைப் பார்த்து, இப்போது டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அந்த அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை கண்டித்துக் கொண்டு இருப்பதையும் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.
திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்துவதை சட்டத்தின் துணைக் கொண்டு துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஏற்கெனவே ஸ்டாலின் சொன்னபடி, அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும் மக்கள் மன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது. dmk district secretary meeting