டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினை சீண்டிய ராகுல்.. மீண்டும் ’விஜய்’ விளையாட்டு.. களமிறங்கிய ப.சி.. புதுவையில் ‘பகீர்’ சம்பவங்கள்!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “ஆடாதடா ஆடாதடா மனிதா ”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..

என்னய்யா.. ரொம்ப பெரிய சங்கதி போல.. கச்சேரி ஆரம்பமாகட்டும்..

ADVERTISEMENT

ரொம்பவே சீரியசான விஷயமும்தான்.. புதுச்சேரியில இதுவரையில இல்லாத அளவுக்கு கூட்டணிகளில்ல தொகுதி பங்கீடு குழப்பம்.. அதுவும் காங்கிரஸ் கட்சி திமுகவை படுத்துன பாடு இருக்கே.. அப்பப்பான்னு சொல்றாங்கய்யா..

அப்படியா நடந்துச்சு.. விளக்கமா சொல்லும்..

ADVERTISEMENT

புதுச்சேரியில போன டைம் காங்கிரஸ் 14 இடத்துல நின்னு 2 சீட்தான் ஜெயிச்சது.. 13 இடத்துல நின்ன திமுக 6 இடங்களில்ல ஜெயிச்சது..

இந்த முறை ஆரம்பத்துலேயே கூட்டணிக்கு யாரு தலைமை? அப்படிங்கிறதுல காங்கிரஸ் – திமுகவுக்கு இடையே பிரச்சனை வந்தது.. “புதுச்சேரியில நாங்க தான் கூட்டணிக்கு தலைமை”ன்னு பிடிவாதம் பிடிச்சது காங்கிரஸ்.. திமுகவும் இதுல எதுக்கு அக்கப்போருன்னு பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிச்சது..

ADVERTISEMENT

புதுச்சேரி திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பியும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமும்தான் பேச்சுவார்த்தை நடத்தி ஆரம்பிச்சாங்க.. ஆனா வேட்பு மனுத் தாக்கலே முடிஞ்ச பிறகும் இன்னமும் பேச்சுவார்த்தை முடியலை.. ஒரே குழப்பமாவே இருக்குது..

இதை பத்தி விசாரிச்சப்ப, “தமிழ்நாட்டுல கூட்டணியில குழப்பத்துல ஏற்படுத்துன கிரிஷ் சோடங்கர்தான் புதுச்சேரிக்கும் பொறுப்பாளர்.. ஜெகத்ரட்சகனும் வைத்திலிங்கமும் சீரியசா பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. திமுக தரப்புல 14/14 சீட்டுன்னு பிரிச்சுக்கலாம். விசிகவுக்கு 1, சிபிஐக்கு 1 கொடுக்கலாம்னு ஜெகத்ரட்சகன் சொன்னாரு..

வைத்திலிங்கமோ, ”கூட்டணிக்கு தலைமைன்னு இருக்கிறதால காங்கிரஸுக்கு திமுகவை விட ஒரு சீட்டாவது கூட இருக்கனும்”னு அழுத்தமா நின்னாரு.. சரின்னு திமுக சைடு ஓகே சொன்னப்பவும் காங்கிரஸ் முடிவெடுக்காம இழுத்தடிச்சாங்க..

வைத்திலிங்கத்துகிட்ட ஜெகத்ரட்சகன் கேட்குறப்ப, “டெல்லிதான் முடிவெடுக்கனும்”னு சொல்லிட்டாரு..

திமுகவும் காங்கிரஸ் முடிவுக்கு வெயிட் பண்ணுன நேரத்துலதான் கிரிஷ்சோடங்கர், திமுகவை பழிவாங்குறேன்னு ஒரு கேம் ஆடினாரு.. அதாவது, ”தமிழ்நாட்டுலதான் எப்படியோ திமுகவோட கூட்டணி வெச்சிருக்கிறோம்.. ஏன் புதுச்சேரியில விஜய் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கக் கூடாது?”ன்னு ராகுல் காந்திகிட்ட விளையாட்டை ஆரம்பிச்சாரு..

ராகுல் காந்தியும் இந்த விளையாட்டுல இறங்கி, விஜய்யை கூப்பிட்டு பேசி ‘கூட்டணிக்கு ரெடி’யாகுற மோடுக்கு போயிட்டாங்க..

புதுச்சேரியில ’டேரா’ போட்ட கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் நிர்வாகிகளோட விடிய விடிய ஆலோசனை நடத்துனாரு.. 10 மணிநேரமா நடந்த ஆலோசனையில விஜய் கூட கூட்டணி வைக்கிறதை பத்தி சீரியசா பேசியிருக்காங்க..

இதுக்கு அப்புறமா, ”ஆஹா.. டெல்லி ‘வேலையை காண்பிக்குதே”ன்னு கடுப்பாகிப் போன ஜெகத்ரட்சகன், ஸ்டாலினை சந்திச்சு பேசுனாரு.. அப்ப, “புதுச்சேரியில காங்கிரஸ் இல்லாமலேயே நாம விசிக, சிபிஐ எல்லாம் சேர்ந்து எலக்‌ஷனை சந்திப்போம்.. விசிகவுக்கு 3, சிபிஐக்கு 3ன்னு கொடுத்துட்டு மிச்ச இடத்துல நாம நின்றால் நிச்சயம் ஜெயிச்சுடுவோம்.. காங்கிரஸ் இல்லாமலேயே ஆட்சி அமைச்சுடுவோம்”னு நம்பிக்கையா ஸ்டாலின்கிட்ட சொன்னாரு ஜெகத்ரட்சகன்.. இதை ஸ்டாலினும் ரொம்ப கவனமா கேட்டுகிட்டாரு..

இப்படி, அங்கிட்டு ராகுல் காந்தி, விஜய்கிட்ட பேசி கூட்டணிக்கு ரெடியாகிறாரு.. இங்கிட்டு காங்கிரஸை கழற்றிவிட திமுக ரெடியாகுது.. இதை எல்லாம் தெரிஞ்சுகிட்ட ப.சிதம்பரம் களத்துல இறங்கினாரு..

ஜெகத்ரட்சகனையும் வரவழைச்சு ஸ்டாலினை சந்திச்சு பேசுனாரு சிதம்பரம், அப்ப, “விழுப்புரத்துல திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு கேட்டுட்டு அங்கிருந்து சில கிலோ மீட்டர் தள்ளி போய் விஜய் கட்சிக்கு ஓட்டு கேட்கிறது எல்லாம் எப்படி சரி வரும்னு டெல்லி நினைக்குதுன்னு தெரியலை.. இது சரியானதும் இல்லை”ன்னு ரொம்ப வேதனைப்பட்டிருக்காரு.. டெல்லி லீடர்ஸ்கிட்டேயும் சிதம்பரம் பேசினாரு.. டெல்லியில இருந்து பாசிட்டிவ் சிக்னல் சரியாக வரலை..

இப்ப காங்கிரஸுக்கு 16; திமுகவுக்கு 14-ன்னு தொகுதி பங்கீட்டை அறிவிச்சிருக்காங்க.. இதுல திமுகவே கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை கொடுக்கனும்னு காங்கிரஸ் சொல்லி இருக்கு.. அதனால விசிகவுக்கு 1 சீட் திமுக கொடுத்துருக்கு” என்றனர்.

அப்ப திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சு சுமூகமாக முடிஞ்சிருச்சுதானே?

அதான் இல்லையா.. ”திமுகவுக்கு ஒதுக்குன தொகுதிகளில்ல வேட்பு மனுத் தாக்கலை செஞ்சிருக்க காங்கிரஸ் நிர்வாகிகள் வாபஸ் வாங்க மறுக்கிறாங்களாம்..

என்னய்யான்னு கேட்டா, “பிரெண்ட்லியா பைட்” பண்ணுவோம்.. நீங்களும் நில்லுங்க.. நாங்களும் நிற்கிறோம்.. எலக்‌ஷன்ல ஜெயிச்சதுக்கு அப்புறமா பார்த்துக்கலாமே”ன்னு அசால்ட்டா சொல்றாங்க..

சென்னையில இன்னைக்கு பிரஸ் மீட்டுல பேசுன திருமா கூட இதை பத்தி விரிவா சொல்லி இருந்தாரு..”ன்னு என்கின்றனர்.

இப்ப இருக்கிற நிலவரத்தைப் பார்த்தா, மல்லிகார்ஜூன கார்கே பதவியில இருக்கும் வரைக்கும்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி இருக்கும் போல.. 2029 லோக்சபா தேர்தலை விஜய் கூடத்தான் ராகுல் காந்தி சந்திப்பாருன்னு சொல்றாங்கய்யா என்றபடியே டைப் செய்து சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share