2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தேமுதிக. அப்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரப்படும் என அதிமுக உறுதியளித்தது. தேமுதிகவும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தது.
ஆனால் ராஜ்யசபா தேர்தலின் போது, தேமுதிகவுக்கு எம்பி பதவி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். இது தேமுதிகவுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதனால் அதிமுக மீது கடும் கோபத்தை காட்டியது தேமுதிக.
இதனைத் தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை திமுக தரப்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நடத்தினார். திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில், “திமுக கூட்டணி உடையும் என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்; ஆனால் 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக அந்த கூட்டணியை விட்டு வெளியேறி நம்ம அணிக்கு வருவது நல்லதுதான்” என கூறியிருக்கிறார்.
தேமுதிகவைப் பொறுத்தவரையில் ஒரு ராஜ்யசபா சீட், கவுரவமான தொகுதிகள் மற்றும் தேர்தல் செலவுகளை திமுகவே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நிபந்தனையாம். இதனை திமுக தரப்பும் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் அடுத்த கட்டமாக, மதுரை திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது; இதற்கு தேமுதிக தரப்பில் உடனே நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஜூலை 31-ந் தேதி, முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளான பார்த்தசாரதி உள்ளிட்டோருடன் சந்தித்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்த போது திருமாவளவன் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். ஆனால் அப்போது ஸ்டாலினை யாரும் நேரில் சந்தித்து பேசவில்லை; உதயநிதி ஸ்டாலினைத்தான் திருமாவளவன் உள்ளிட்டோர் சந்தித்து பேசியிருந்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிஎம் ஸ்டாலின், கடந்த திங்கள்கிழமையே தலைமைச் செயலகம் செல்ல தயாரானார். ஆனாலும் மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதால் ஓய்வில் இருந்தார். அதனால் யாரையும் சந்திக்கவில்லை.
இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்துக்கு புறப்பட்டு கொண்டிருந்த போது, பிரேமலதா உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்தார்.
முதல்வர் ஸ்டாலினை திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு முன்னரே பிரேமலதா மற்றும் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “குடும்ப ரீதியான, நட்பு ரீதியான சந்திப்பு மட்டும்தான்; அரசியலாகப் பார்க்க வேண்டாம்” என்றார்.
ஆனால் முதல்வர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வரவழைக்கப்பட்டார்; அதேபோல தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார். தேமுதிக தரப்பில் பிரேமலதா, சுதீஷ் மட்டுமல்லாமல் பார்த்தசாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்; இதுதான் இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை சொல்லாமல் சொல்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.