விம்பிள்டன் முதல் சுற்றில் விளையாடியபோது ஏற்பட்ட வயிற்றுவலியில் இருந்து காப்பாற்றிய மாத்திரைக்கு ஜோகோவிச் நன்றி தெரிவித்தார். Djokovic thanked pill for victory in Wimbledon
டென்னிஸ் உலகில் மிக முக்கியமான கிராண்ட்ஸ்லாம் போட்டியாக விம்பிள்டன் டென்னிஸ் கருதப்படுகிறது. இதில் பங்கேற்று பட்டம் வெல்வதை உலகின் அனைத்து முன்னணி நட்சத்திர வீரர்களும் பெருமையாக கருதுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி தொடங்கிய விம்பிள்டன் போட்டியில் முதல் சுற்றுகள் நடந்து வருகின்றது.
இதில் 7 முறை பட்டம் வென்ற உலகின் 6ஆம் நிலை வீரரான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், தரவரிசையில் 41வது இடத்தில் உள்ள பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரை நேற்று எதிர்கொண்டார்.
செண்டர் கோர்ட்டில் நடந்த இப்போட்டியில் முதல் செட்டை அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே, அதனை 6-7 என்ற கணக்கில் இழந்தார்.
அதன்பின்னர் மைதானத்திலேயே மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் 6-2, 6-2 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களை கைப்பற்றி வெற்றிபெற்றார்.
போட்டிக்கு பின்னர் ஜோகோவிச் பேசுகையில், ”விம்பிள்டனில் மீண்டும் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மைதானத்தின் புனிதத்தன்மையை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இது எப்போதும் எனக்கும் பல வீரர்களின் வாழ்விலும் நிறைய அர்த்தத்தை கொண்டுவந்துள்ளது. இது ஒவ்வொருவரின் குழந்தை பருவ கனவுப் போட்டி. அதனால் நான் ஒருபோதும் மைதானத்தில் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை.
“நான் என்னை ரசித்தேன், இரண்டாவது செட்டில் கொஞ்சம் குறைவாகவே இருந்தேன், ஆனால் ஒன்றரை செட்டுக்கு எனது முழுமையான சிறந்த உணர்விலிருந்து சுமார் 45 நிமிடங்கள் எனது முழுமையான மோசமான நிலைக்குச் சென்றேன்,” என்று அவர் கூறினார்.
“அது வயிற்றுப் பிரச்சினையா என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் அதனுடன் போராடினேன், ஆனால் சில மருத்துவர்களின் அதிசய மாத்திரைகளுக்குப் பிறகு இயல்புநிலைக்கு திரும்பி போட்டியை நல்ல நிலையில் முடிக்க முடிந்தது. மருத்துவர்களுக்கும், அந்த மாத்திரைக்கும் நன்றி” என அவர் தெரிவித்தர்.
இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 38 வயதான ஜோகோவிச், இந்தமுறை விம்பிள்டனில் தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் கனவுடன் களமிறங்கியுள்ளார். அவர் ஏற்கெனவே 7 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸிடம் தோல்வியடைந்து பட்டத்தை இழந்தார்.
கடந்த 2018 முதல் கடுமையாக போராடி தொடர்ந்து விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அவர், இந்தமுறை அதை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.