இலங்கையில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ள டிட்வா புயல் இன்று நவம்பர் 29-ந் தேதி இலங்கை கடற்பரப்பில் இருந்து விலகி தமிழ்நாட்டை நோக்கி நகர இருக்கிறது.
இலங்கையில் மட்டக்களப்பு- திருகோணமலையில் கடந்த 2 நாட்களாக ‘பேராட்டம்’ ஆடிய டிட்வா புயல் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் கடல்பரப்பில் இன்று நகரும் டிட்வா புயல், தீவுப் பகுதிகளை கடந்து தமிழ்நாடு கடல் பகுதிக்குள் நுழையும்.
இலங்கையில் மாத்தளை பகுதியில் முதல் முறையாக 56 செ.மீ. மழையை கொட்டித் தீர்த்தது டிட்வா புயல். இலங்கை தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை அனைத்து பகுதிகளும் பெருவெள்ளத்தில் சிக்கி உள்ளன. மலையக மாவட்டங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளன நிலச்சரிவுகள்.
இலங்கையில் வெள்ள பாதிப்புகளை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க இரவு நேரங்களில் பார்வையிட்டார். ஏற்கனவே இந்திய அரசு, இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளது.
இலங்கையை விட்டு நகர்ந்து தமிழ்நாடு நோக்கி வரும் இந்த டிட்வா புயல், புதுச்சேரி- காரைக்கால் -சென்னைக்கு பெருமழையைக் கொட்டும். இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்று நவம்பர் 29-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
