வைஃபை ஆன் செய்ததும், ‘புயல் கரையை கடந்துவிட்டது’ என புதிர் போட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
வங்க கடலா? அரபிக் கடலா? எந்த புயல்?
இது பாமக புயல் அய்யா.. பாமகவில் அப்பா – மகன் இடையேயான மோதலில் கிளைமேக்ஸ் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அன்புமணியை பாமகவின் செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அதாவது பாமகவில் இருந்தே நீக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார் அப்பா ராமதாஸ்.
மகன் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், “தனிக் கட்சி தொடங்கி நடத்தட்டும்… ஆனால் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர் அன்புமணி.. அப்படி தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது” என சாபமும் கொடுத்தார்.

ராமதாஸ் இன்று அன்புமணியை நீக்கும் முடிவை அறிவிக்கப் போவதை தெரிந்து கொண்ட அக்கட்சியின் முக்கிய அமைப்பான நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர், ‘நமக்கு எதுக்கு வம்பு’ என தைலாபுரம் பக்கம் எட்டிகூடப் பார்க்கவில்லை. அதிலும் ஒரு சிலர் நேற்று இரவே, “அய்யா நீங்க எடுக்கிற எந்த முடிவானும் சரிங்கய்யா” என பவ்யமாக சொல்லிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டனராம்.
பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் மற்றும் அன்பழகன், பரந்தாமன் உள்ளிட்டோர்தான் பிரஸ் மீட்டில் ராமதாஸுடன் இருந்தனர்.
ராமதாஸ் குடும்பத்தில் என்ன சொல்றாங்களாம்?
தம்பி அன்புமணிக்கும் அப்பா ராமதாஸுக்கும் இடையே தொடர்ந்து சமாதானம் செய்ய முயற்சித்தவர் டாக்டரின் மூத்த மகள் ஶ்ரீ காந்தி. அதே நேரத்தில் அன்புமணி பிரச்சனையை முன்வைத்து பாமகவுக்குள்ளும் என்ட்ரி ஆகி நிர்வாகக் குழு உறுப்பினராகிவிட்டார் ஶ்ரீ காந்தி. கடந்த முறை நிர்வாக குழுவில், அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இப்பவும் அப்பா கூட சண்டை போட்டாரா?
அதான் இல்லை.. இந்த முறை அப்பா பிரஸ் மீட் தந்த போது தைலாபுரத்தில் ஶ்ரீகாந்தி இல்லை.. இந்த பிரஸ் மீட் முடிந்ததும் 30 நிமிடம் கழித்து தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த ஶ்ரீ காந்தி, எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ‘வந்தார்.. சாப்பிட்டார்’ என்பதாக இருந்தார் என்கின்றன பாமக வட்டாரங்கள்..

சரி அன்புமணி ரியாக்சன் என்னவாம்?
ராமதாஸ் பிரஸ் மீட்டை தொடங்கும் போது கடலூரில் இருந்தார் அன்புமணி. கடலூர் சில்வர்பீச் பகுதியில் EID Parry கம்பெனி நிறுவனத்தின் கெஸ்ட் ஹவுஸில் முதல் மாடியில் தங்கி இருந்த அன்புமணி- Woodlands ஹோட்டலில் இருந்து வந்த காலை டிபனை முடித்த கையோடு, அப்பாவின் பிரஸ் மீட்டை லைவ் வாக டிவியில் முழுவதுமாக பார்த்தார். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை அன்புமணி அந்த அறையை விட்டே வெளியே வரவில்லை.
பிரஸ் மீட் முடிந்த உடன், பாமக வழக்கறிஞர் கே.பாலு, மனைவி சவுமியா மற்றும் குடும்பத்தினருடன் அடுத்தடுத்து செல்போனில் பேசினார் அன்புமணி.
அன்புமணி கீழே இறங்கி வரும் வரை பாமக அரியலூர் மா.செ. வைத்தி, நிர்வாகிகள் தாமரைக்கண்ணன் முத்துகிருஷ்ணன் என பலரும் காத்திருந்தனர். இவர்களுடன் பத்திரிகையாளர்களும் நீண்ட நேரம் அன்புமணிக்காக நின்று கொண்டிருந்தனர்.
கெஸ்ட் ஹவுஸ் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த அன்புமணி, “அதான் பாலு எல்லாத்தையும் சொல்லிட்டாரே” என எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக சென்றுவிட்டார். இதன் பின் தேவனாம்பட்டினத்துக்கு போய் மீனவர்களை கவலை + விரக்தியான முகத்துடன் சந்தித்து பேசினார் அன்புமணி.
அன்புமணி தரப்பில் பாலு பிரஸ் மீட் வைத்தாரே?
ஆமாம்,, “பாமகவே எங்களுடையதுதான்.. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் எல்லாம் நாங்கதான்.. தேர்தல் ஆணையமே எங்களை அங்கீகரிச்சுருக்கு.. இதுல ராமதாஸ் யாரு எங்களை நீக்க.. அதெல்லாம் செல்லாது” என லா பாயிண்டுகளை அடுக்கினார் வக்கீல் பாலு.
ஓஹோ.. பாமகவில் அன்புமணியை நீக்கியாச்சு.. இனி பிரச்சனையே இல்லைதானே?
அப்படி எல்லாம் இல்லைங்க.. உண்மையிலேயே இனிதான் பாமகவில் பெரிய பிரச்சனையே வெடிக்கப் போகுது.. எது எங்க போய் முடியும்னே தெரியாது.. ஏன்னா அப்பா- மகன் மோதலால் இப்போது வன்னியர் சமூகமே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது..

வன்னியர்களுக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரவு பகலாக உழைத்தவர் ராமதாஸ் என்பதால் அவரை அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட வன்னியர்களில் பெரும்பான்மையினர் ஆதரிக்கின்றனர். அன்புமணிக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஆதரவு அதிகம்.
அண்மையில் வெளியான ஒரு ரிப்போர்ட்டில், அன்புமணியின் நடவடிக்கையால் ராமதாஸுக்கு அனுதாப ஆதரவும் சேர்ந்துள்ளதாம்.
வன்னியர்களில் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலானோர் ராமதாஸ் பக்கமும் புதியதாக வரக் கூடிய வன்னியர் இளைஞர்கள்தான் அன்புமணி பக்கமும் நிற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் மிக முக்கியமானது, பாமகவின் தாய் அமைப்பு.. பாமகவின் முதுகெலும்புன்னு சொல்லக் கூடிய வன்னியர் சங்கம் முழுமையாக ராமதாஸ் பக்கமே நிற்கிறது. இதற்கு காரணம் காடுவெட்டி குருவின் மரணம் என்கின்றனர் வன்னியர் சங்க நிர்வாகிகள்.
“காடுவெட்டி குருவுக்கான மருத்துவ சிகிச்சையில் அன்புமணி அலட்சியமாக இருந்தார்; அதனால் காடுவெட்டி குரு மரணமடைந்தார்.. இந்த மரணத்துக்கு ஒருவகையில் அன்புமணியும் காரணம்” என்கிற பெருங்கோபம் வன்னியர் சங்கத்தினரிடம் இருக்கிறது.. இதனால் டாக்டர் ராமதாஸ் பக்கமே வன்னியர் சங்கம் அரண்போல நிற்கிறது.. அதனால்தான் வட தமிழ்நாட்டில் இனி ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடிக்கப் போகுது என அச்சத்தை கொட்டுகின்றனர் பாமக நிர்வாகிகள் என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.