டிஜிட்டல் திண்ணை: தமிழகம் முழுவதும் நேரடி சர்வே நடத்தும் ‘ஸ்டாலினின் மூன்றாவது கண்’!

Published On:

| By Minnambalam Desk

DMK MK Stalin

வைஃபை ஆன் செய்ததும், ‘அடேங்கப்பா! தேர்தல் வேலைகளுக்கு இவ்வளவு பெரிய ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறாரே சிஎம் ஸ்டாலின்’ என சற்றே மிரட்சியுடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். DMK MK Stalin Election 2026

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றால், உள்ளூர் பூத் ஏஜெண்டுகள், கட்சிக்காரர்கள் ஒன்று சேர்ந்து வாக்காளர் பட்டியலை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாகப் போய், சரி பார்த்து கொண்டிருப்பர்.. வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களில் யார் யார் அந்த வீட்டில் இப்போது இருக்கின்றனர்? வெளியூரில் இருக்கின்றனர்? இறந்து போனவர்கள் யார்? என்றெல்லாம் உள்ளூர் கட்சிக்காரர்கள் மெனக்கெடுவது தேர்தல் பணிகளில் மிக அடிப்படையான ஒன்று.

இப்போதும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இதே பாணி அரசியலைத்தான் செய்து கொண்டிருக்க, முதல்வர் ஸ்டாலின் ‘வேறலெவல்’ பார்முலாவுடன் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு களமிறங்கிவிட்டார்.

அது என்னப்பா ‘வேறலெவல்’ பார்முலா?

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் திமுகவினர் சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணியை மேற்கொள்வர்; அரசின் நலத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வார்கள்; மத்திய அரசின் வஞ்சகம் குறித்தும் பிரசாரம் செய்வார்கள் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இது வழக்கமான தேர்தல் பணிதானே.. இதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது?

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற திமுக தலைமையின் முன்னெடுப்பானது வெறும் உறுப்பினர் சேர்க்கை, பிரசாரம் என்பது மட்டுமல்ல.. முதல்வர் ஸ்டாலின் நேரடிப் பார்வையில் நடக்கும் மிகவும் துல்லியமான பிரம்மாண்டமான சர்வே என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

ஓஹோ.. அப்படி என்ன செய்யப் போகிறார்களாம் திமுகவினர்?

“ஓரணியில் தமிழ்நாடு” முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள 68,000 பூத்துகளுக்கும் களப்பணியாளர்கள் செல்ல இருக்கின்றனர். இந்த 68,000 பூத் களப் பணியாளர்களுக்கு மட்டும் தனியாக ஒரு மொபைல் AAP ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த AAP-ல் சம்பந்தப்பட்ட பூத்துக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் தொடங்கி அத்தனை விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளதாம்.

ஒரு வீட்டுக்குப் போய் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துவிட்டு யார் யார் இருக்கிறார்கள்? இல்லை என்கிற விவரங்கள் கேட்கப்பட்ட உடனேயே அதே இடத்திலேயே AAP-ல் பதிவேற்றப்படும்.

அதேபோல தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கான மக்களின் பதில்களும் AAP-ல் கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் அப்டேட் செய்யப்படுமாம்.


திமுகவில் உறுப்பினராக சேருகிறீர்களா? என்ற கேள்விக்கான பதிலும் மத்திய அரசின் தமிழகத்துக்கு எதிரான செயல்பாடுகள் குறித்த கருத்தும் இந்த AAP-ல் அப்டேட் ஆகும்.

இப்படி AAP-ல் அப்டேட் செய்யப்படும் அத்தனை விவரங்களும் அதை ஆபரேட் செய்கிற நபரால் கூட முழுமையாக பார்க்க முடியாதாம்.. இவை அனைத்தையும் ஒரே ஒருவர்தான் முழுமையாக பார்க்க முடியுமாம்..அவர்தான் முதல்வர் ஸ்டாலின். அதனால்தான் இதனை முதல்வர் ஸ்டாலினின் ‘3-வது கண் ஆபரேஷன்’ என்கின்றனராம் அறிவாலய சீனியர்கள்.

இப்படி களப் பணியில் இறங்கும் பொறுப்பாளர்களுக்கும் குறிப்பிட்ட ஊதியத்தை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தந்துவிட வேண்டுமாம்; திமுக எம்.எல்.ஏ.க்கள் இல்லாத தொகுதிகளில் கட்சிதான் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவாலயத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற முதல்வர் ஸ்டாலினின் 3-வது கண் நடத்தும் இந்த ஆபரேஷன் ஒட்டுமொத்த திமுகவினரையும் பம்பரமாக சுழலவிடப் போகிறதாம்.. இந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட ‘அதிரடி’ நடவடிக்கைகளை அடுத்தடுத்து கையில் எடுப்பாராம் முதல்வர் ஸ்டாலின் என கண்சிமிட்டியபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share