ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் பேசிய சோனியா.. அறிவாலயத்தில் பிரேமலதா.. பரபர காட்சிகள்.. “Behind the Scenes”.. என்ன நடந்தது?

Published On:

| By Mathi

DT DMDK Congress DMK

வைஃபை ஆன் செய்தது, ”க்ளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேறுகின்றன” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளா?

ADVERTISEMENT

ம்ம்..அப்படியும் சொல்லலாம்.. இன்னைக்கு அண்ணா அறிவாலயத்துல ஸ்டாலினை பிரேமலதா சந்திச்சு திமுக கூட்டணியில தேமுதிக இடம் பெறுவதை உறுதி செஞ்சு பிரஸ் மீட்டுல அறிவிச்சதுதான் ஹாட் டாபிக்.

திமுக கூட்டணியில சேர்ந்துட்டோம்னு அறிவிச்ச பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்துக்கு போய் விஜயகாந்துக்கு ராசியான நம்பரான 5-ஐ குறிக்கும் வகையில அங்க கட்டியிருந்த பெரிய மணியை 5 டைம் அடிச்சு மரியாதை செலுத்திட்டு அங்கேயும் பிரஸ் மீட் கொடுத்துட்டு, ‘தொகுதி விவகாரங்களை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பாரு’ன்னு சொல்லி இருக்காங்க.

ADVERTISEMENT

சட்டப்பேரவையில சிஎம் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன் காரசார வாக்குவாதம்னு அனல் பறந்தாலும் திமுக அமைச்சர்கள்கிட்ட, எம்.எல்.ஏக்கள்கிட்ட மெஜாரிட்டியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவலையாக கேட்டது எல்லாம், “தேமுதிக வந்துருச்சு.. எங்களை கழற்றிவிடுறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா”?” என்கிற கேள்வியைத்தான்.

இதைபத்தி முதல்வருக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “காங்கிரஸ் வேணாம்; போகட்டும்னு திமுக நினைக்கலை.. அதிமுகவுக்கு வடமாவட்டத்துல ஓட்டுகளை கொண்டு வர்றதுக்கு அன்புமணி பாமக இருக்கு… திமுக கூட்டணியில ஒரு பெல்ட்டுல விசிக சப்போர்ட் இருக்கு.. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி இப்படியான பெல்ட்டுல தேமுதிக தேவையா இருக்குது..

ADVERTISEMENT

திமுகவோட அந்த பகுதி மண்டல பொறுப்பாளர்களான எ.வ.வேலு, சக்கரபாணி எல்லாமே, இதை சுட்டிக்காட்டி தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வரனும்னு வலியுறுத்தினாங்க..

அதே மாதிரிதான் தெக்கே கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, மூர்த்தி இவங்களும், தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள்ள கொண்டு வந்துடுங்கன்னு பேச்சுவார்த்தை நடத்துன அமைச்சர் எ.வ.வேலுவை பார்க்குறப்ப எல்லாம் சொல்லிகிட்டு இருந்தாங்க..

திமுக கூட்டணிக்கு சில பெல்ட்டுகளில் தேமுதிகவின் ஓட்டுகள் உதவும்கிறதாலதான் 2 மாசத்துக்கு மேல விடாம அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தினாரு..

தேமுதிக, 18 தொகுதிகள்+1 ராஜ்யசபா சீட்டுன்னு பேச தொடங்குச்சு….திமுக சைடுல 6+1-ன்னு பேசுனோம்.. அப்புறமாக தேமுதிக 14+1-ன்னு சொன்னாங்க.. விஜயகாந்துக்கு ராசியான நம்பர் 5 .. அதனால 14+1 கொடுங்கன்னு சொன்னாங்க..

நாங்களும் 6-ல் ஆரம்பிச்சு 7,8ன்னு நகர்ந்து 9+1 வரைக்கும் போய் இப்ப 10+1-ன்னு முடிவாயிருக்கு..” என்றனர்.

விஜயகாந்த் குடும்பத்தினரிடம் இதை பத்தி நாம பேசுனப்ப, “ அதிமுக சைடுலயும் பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. எடப்பாடியோ 7+1-ன்னுதான் கடைசி நம்பர்னு சொல்லிட்டாரு.,.. ஆனா திமுகவுல எ.வ.வேலுவும் பேசிகிட்டு இருந்தாரு..

இதுக்கு நடுவுல மகா சிவராத்திரி அன்னைக்கு கோவை ஈஷா மையத்துக்கு பிரேமலதா போனாங்க.. அங்க தியான லிங்கம், லிங்க பைரவி முன்னாடி ரொம்ப நேரமா தியானம் செஞ்சாங்க.. அங்கதான் எந்த கூட்டணின்னு ஒரு முடிவு செஞ்சுட்டு சென்னைக்கு ரிட்டர்ன் வந்தாங்க.. ” என்றனர்.

என்னய்யா தேமுதிகவும் திமுக கூட்டணிக்கு வந்ததை பார்த்தா..

அதுசரி.. நீர் சொல்ல வர்றது புரியது.. 2016 மக்கள் நலக் கூட்டணி ஒட்டு மொத்தமா திமுகவுக்க் வந்துருச்சுன்னு சொல்றீரு அப்படித்தானே..

அன்னைக்கு என்ன நடந்துசுன்னா.. ”2016 எலக்‌ஷனப்ப திமுக கூட காங்கிரஸ் இருந்துச்சு.. இந்த கூட்டணியில சேர விசிகவும் ரொம்பவே முயற்சிச்சது..

ஆனால் திமுகவுக்கு வியூக வகுப்பாளராக இருந்த சுனில் போன்றவங்கதான், திமுக- காங்கிரஸே போதும்.. விசிக எல்லாம் வேணாம்னு சொல்லிகிட்டு இருந்தாங்க..

அப்ப விஜயகாந்த்- ஜெயலலிதா மோதல் உச்சமா இருந்ததால, தேமுதிகவை கூட்டணிக்குள்ள கொண்டுவரனும்னு கலைஞர் விரும்பினாரு.. நேரடி அரசியலுக்கே வராம இருந்த சன் டிவி கலாநிதி மாறன், விஜயகாந்த்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாரு.. விஜயகாந்த் சைடுல்யும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது.. அதனாலதான் கலைஞர் அன்னைக்கு பழம் நழுவி பால்ல விழும்னு சொன்னாரு..

அந்த டைம்ல, விஜயகாந்த் வீட்டுக்கு கனிமொழி அம்மா ராஜாத்தி அம்மாள் விருந்துக்கு போறதாவும் இருந்துச்சு.. ராஜாத்தி அம்மாள் விரும்பி சாப்பிடுற இறால், மீன் எல்லாத்தையும் விஜயகாந்த் வீட்டுல ஏற்பாடு செஞ்சு வைச்சிருந்தாங்க…

அப்ப, ”நாங்க ஒரு லைன்ல பேசிகிட்டு இருக்கோமே.. இன்னொரு லைன்ல பேசுனா சரியா வருமா? நெகட்டிவாகிடுச்சா நான் பொறுப்பு இல்லை”ன்னு ஸ்டாலின் தரப்புல சொன்னதால, அந்த விருந்துக்கு ராஜாத்தி அம்மாள் போகாம கேன்சலாகிடுச்சு..

இதுக்கு அப்புறம் இந்த பேச்சுவார்த்தைகளில்ல இடைவெளி விழுந்தது.. அப்ப விஜயகாந்த் உடல்நிலை பலவீனமாக இருந்ததால பிரேமலதா ஆக்டிவ்வாக இருந்தாங்க. ஜெயலலிதாவும் பிரேமலதாகிட்ட பேசி திமுக பக்கம் போக வேண்டாம்னு சொன்னாங்க..

ஒரு கட்டத்துல விசிககிட்ட, கம்யூனிஸ்டு கட்சிகளையும் கூட்டிட்டு வாங்க … கூட்டணியில சேர்க்கலாம்னு திமுக சொன்னது…விசிக திருமாவளவனும் இடதுசாரி கட்சிகள்கிட்ட பேசிகிட்டு இருந்தாரு..

ஆனால் ஜெயலலிதாவோ, “ஆளும் கட்சியான நம்ம அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் மொத்தமா திமுகவுக்கு போகக் கூடாது.. அப்படி போனா திமுக ஈஸியாஜ் ஜெயிச்சுரும்.. அதை தடுக்கனும்”னு கணக்கு போட்டாங்க..

அதனால ஜெயலலிதா, தனக்கு ரொம்ப வேண்டியவரான சிபிஎம் பிரகாஷ் காரத் மூலமாக இடதுசாரிகளை திமுக கூட்டணிக்கு போகவிடாம தடுத்து தனிச்சு போட்டியிட சொன்னாங்க.

இதுக்கு கவுண்ட்டரா சீதாராம் யெச்சூரி மூலமாக திமுகவும் இடதுசாரிகளை கூட்டணிக்கு கொண்டுவர பேசிப் பார்த்தது.. அதுவும் ஒர்க் அவுட் ஆகலை..

அப்ப, திமுகவை மதிமுகவும் கடுமையாக விமர்சிச்சுட்டு இருந்தாங்க..

அப்படித்தான் மதிமுக, இடதுசாரிகள், விசிக, தேமுதிக எல்லாம் இணைஞ்சு மக்கள் நலக் கூட்டணியே உருவாச்சு..
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிச்சாங்க..

ஜெயலலிதா நினைச்ச மாதிரியே ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக திமுகவுக்கு போகாம சிதறிப் போய் அதிமுகவே மறுபடியும் ஜெயிச்சிருச்சு..

இதுல மக்கள் நலக் கூட்டணி ஒர்க் அவுட் ஆகாம போனதால மதிமுக, இடதுசாரிகள், விசிக எல்லாம் அப்படியே திமுக கூட்டணிக்கு வந்துட்டாங்க.. இப்ப கடைசியா தேமுதிகவும் திமுக கூட்டணிக்கே வந்துருச்சு.. இதுதான்யா அந்த வரலாறு..

சரிய்யா.. காங்கிரஸ்- திமுக நிலவரம் என்னான்னு சொல்லுமய்யா

சொல்றேன்யா.. டெல்லியில் இருந்து வர்றேன்.. காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “சோனியா காந்தியை ப.சிதம்பரம் 2 நாட்களுக்கு முன்னாடி மறுபடியும் சந்திச்சு பேசினாரு.. அப்ப, திமுக கூட்டணியிலதான் காங்கிரஸ் தொடரனும்.. அப்பதான் நமக்கு 2029 எம்.பி எலக்‌ஷனுக்கு உதவியா இருக்கும்.. திமுக கூட்டணியில இருந்து நாம விலகிட்டா மத்த ஸ்டேட்லயும் நமக்கு கூட்டணியில சிக்கலாகும்னு விளக்கமாவே பேசியிருந்தாரு.. இதுல சோனியா காந்தி கன்வீன்ஸ் ஆயிட்டாங்க..

இதுக்கு அப்புறமா, ஸ்டாலின்கிட்ட செவ்வாய்க்கிழமையன்னைக்கு சோனியா காந்தி போன்ல பேசினாங்க.. மறுநாள் புதன்கிழமை, கார்கேவும் ஸ்டாலின்கிட்ட பேசுனாரு. இதனால திமுக கூட்டணியிலதான் காங்கிரஸ் இருக்குங்கிறது உறுதியாச்சு” என்றனர்

திமுக வட்டாரங்களில் இதை பத்தி பேசுனப்ப, “சிஎம் கிட்ட சோனியா, கார்கே எல்லாம் பேசுனதுக்கு அப்புறம்தான் சென்னைக்கு கேசி வேணுகோபால் வந்தாரு.. அவர்கிட்டேயும் கனிமொழி பேசினாங்க.. திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருதுங்கிறதாலதான் சென்னையில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்துல, ”திமுக- காங்கிரஸ்” கூட்டணியை பத்தி பொதுவெளியில பேசாதீங்கன்னு தீர்மானமும் போட்டாங்க.. பிரஸ் மீட்லயும் கேசி வேணுகோபால், திமுக- காங்கிரஸ் கூட்டணி பத்தி பாசிட்டிவ்வாகவும் பேசிட்டு போனாரு.. அதோட கூட்டணி பத்தி வெளியே பேசாதீங்கன்னும் கறாராவும் கேசி வேணுகோபால் சொன்னாரு” என்றனர்.

அதுமட்டும்ல்ல, “திமுக கூட்டணியில காங்கிரஸ் இருக்குமா? இல்லையா?ன்னு இழுபறியா இருந்ததால தேமுதிகவும் ரொம்பவே யோசிச்சுகிட்டு இருந்தது..

இப்ப திமுகவோடதான் காங்கிரஸ் கூட்டணின்னு உறுதியான தகவல் கிடைச்ச உடனே பிரேமலதா அறிவாலயத்துக்கு வந்து திமுக கூட்டணியில இணைஞ்சுட்டாங்க..

தேமுதிக வந்துட்டதால திமுக கழற்றிவிடுமான்னு காங்கிரஸ் கட்சிக்காரங்க சிலர் நினைக்கிறாங்க.. ஆனா திமுக கூட்டணியை காங்கிரஸ் கன்பார்ம் செஞ்சதாலதான் தேமுதிகவே கூட்டணிக்கு வந்துச்சு” என்கின்றனர் திமுக சீனியர்ஸ்.

திமுக- காங்கிரஸ் உறவுக்கு சிக்கலா இருந்தது ஆட்சியில் பங்கு அப்படிங்கிற டிமாண்ட்தான்.. அதை ராகுல் காந்தி டிராப் பண்ணிட்டாரு.. இப்ப சிக்கல் எங்கேன்னா காங்கிரஸ் கேட்கிறது 41 சீட்.. திமுக சைடுல 25 முதல் 28 வரைன்னு சொல்றாங்க.. 30 வரைக்கும் கூட ஓகேங்கிற நிலைமையில திமுக இருக்குது.. இந்த நம்பர்ஸை வெச்சுதான் பேச்சுவார்த்தை நடக்கப் போகுது என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share