வைஃபை ஆன் செய்ததும் “விரிவானம் என்றால் என்ன” என்ற கேள்வியை கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
திமுக தலைமையிலான கூட்டணி ‘விரிவானம்’ போல உருமாறுகிறதாமே?

ஆமாம்.. அடுத்தடுத்த சந்திப்புகள், சந்திக்க முடியாத தவிர்ப்புகள் எல்லாம் அப்படித்தான் சொல்கின்றன.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிஎம் ஸ்டாலின் ஓய்வில் இருந்தார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் ஜூலை 31-ந் தேதி முதல் தலைமை செயலகம் செல்வது உள்ளிட்ட அன்றாட பணிகளை தொடங்கிவிட்டார். அத்துடன் ஒவ்வொரு நாளும் ‘அதிரிபுதிரி’ பரபரப்புகளை ஏற்படுத்தும் சந்திப்புகளையும் நடத்தி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலினை ஜூலை 31-ந் தேதி காலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான குழு சந்தித்தது. அதேபோல ஜூலை 31-ந் தேதி மாலையில் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் சந்தித்தனர். இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி வைகோ, அவரது மகன் துரை வைகோ, சிஎம் ஸ்டாலினை சந்தித்தனர்.
முதல்வர் உடல்நலம் குறித்துதான் விசாரித்தோம் என அனைவரும் கிளிப்பிள்ளை போல சொல்லி வந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்றுதான் சொல்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

தேமுதிகவைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கு ஒப்புக் கொண்டுவிட்டதாம். தேமுதிக எதிர்பார்ப்பது ஒரு ராஜ்யசபா சீட் + அதிகபட்சம் 12 தொகுதிகள் + தேர்தல் செலவுக்கான நிதி. இதில் ராஜ்யசபா சீட் உறுதியாகும் போது தொகுதிகள் எண்ணிக்கையில் இறங்கி வர தயாராக இருக்கிறதாம்.
சிஎம் ஸ்டாலினைப் பொறுத்தவரையில், மக்களவைத் தேர்தலில் தென்மாவட்டத்தில் விருதுநகர் தொகுதியில் ரொம்பவே கடும் போட்டியை உருவாக்கியிருந்தது தேமுதிக. அதனால் அந்த கட்சியின் வாக்குகளும் நமக்கு கிடைப்பது கூடுதல் பலம்தான் என கணக்குப் போட்டுள்ளாராம்.
ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில், இனியும் போராடிக் கொண்டிருக்க முடியாது.. எடப்பாடியை ஒழிக்கனும்னா திமுக கூட்டணிக்குதான் போகனும் என்கிற முடிவில் இருக்கிறாராம்.
சென்னையில் ஸ்டாலினை நேற்று சந்திப்பதற்கு முன்னர், மனோஜ் பாண்டியன்,வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், நம்மை பாஜக மதிக்கவில்லைதான்.. சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும்.. நம்ம ஒரே நோக்கம் எடப்பாடியை ஒழிக்கனும் என்பதுதான்.. என பேசினார்.
வைத்திலிங்கம் பேசுகையில், கொஞ்சம் பொறுமையாக யோசிப்போம் என சொல்லி இருக்கிறார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும் போது, “அதிமுகவை ஒன்றாக சேர்ப்பதில் பாஜக அக்கறை காட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி நம்மை ரொம்பவே உதாசீனப்படுத்திவிட்டார்.. இப்போதைக்கு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதுதான் சரியான முடிவு. அப்பதான் நமக்கும் பல வழிகள் பிறக்கும் என திட்டவட்டமாக பேசியிருக்கிறார்.
ஓபிஎஸ் பேசுகையில், “வேறவழியில்லை.. நாம முடிவெடுத்துதான் ஆகனும். என்கிட்ட தங்கமணி, சிவி சண்முகம் எல்லாம் தொடர்பு கொண்டு பேசும் போது, கொஞ்சம் பொறுமையாக இருங்க அண்ணே.. நாம எல்லாம் ஒன்றாக இருந்தா தென்மாவட்டங்களில் வலிமையாக இருக்க முடியும் என்றனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பாஜகவினர் நம்மைப் பார்த்து, உங்களுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என கேட்கின்றனர்.. நம்ம செல்வாக்கு என்ன என்பதை கூட்டம் போட்டு காண்பிப்போம்.. மாநாடு நடத்தி காட்டுவோம்.. எடப்பாடியை வீழ்த்துவதுதான் நமது ஒரே நோக்கம்” என ஆவேசத்தை காட்டி இருக்கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர், வைத்திலிங்கம்- மனோஜ் பாண்டியனிடம் ஸ்டாலினை சந்திப்பது பற்றி சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ். மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும், “இப்ப நீங்க போய்ட்டு வாங்க” என தெரிவிக்க ஓபிஎஸ் மட்டும் நேற்று மகன் ரவீந்திரநாத்துடன் சென்று ஸ்டாலினை சந்தித்தார்.
ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணிதான் என்ற முடிவு எடுத்துள்ளார்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், விஜய் பக்கம் இழுத்துக் கொண்டு போக முயற்சிக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின், “கடந்த காலத்தில் திருநாவுக்கரசு தனிக்கட்சி நடத்திய போது கூட்டணியில் கலைஞர் சேர்த்துக் கொண்டது போல இப்ப ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்ளலாம்; அந்த 4 எம்.எல்.ஏக்களுக்கும் 4 சீட் கொடுத்துவிடலாம்” என யோசிக்கிறாராம்.
இந்த பரபரப்புகளுக்கு இடையேதான் இன்று ஸ்டாலினை வைகோ சந்தித்து பேசினார். அவருடன் மகன் துரை வைகோ எம்பியும் சென்றிருந்தார். இந்த சந்திப்பின் போது, திமுக கூட்டணியில்தான் மதிமுக தொடரும் என்பதை உறுதியாக சொல்லிவிட்டு வந்துள்ளார் வைகோ.

அதையே தமக்கே உரிய பாணியில் செய்தியாளர்களிடம் ஆணித்தரமாகவே கூறினார் வைகோ. பாஜகவுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற யூகங்களுக்கு எல்லாம் ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ” திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும்; மதிமுக- பாஜக, அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஏதோ அவர்கள் பக்கத்தில் இருந்து லைட் பிடித்தது போல, பக்கத்தில் இருந்து கேட்டதைப் போல எழுதி இருக்கின்றனர்.. எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்தைக் கொண்டும் இந்துத்துவா சக்திகளோடும் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இயங்குகின்ற பாஜகவுடனும் மதிமுக இம்மியளவும் உடன்பாடோ உறவோ வைத்துக் கொள்ளாது என முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்குச் செல்லும் இந்த வழியில் பத்திரிகையாளர்களிடம் உறுதியாக பதிவு செய்கிறேன்” என உரத்த குரலில் பேசினார்.
மதிமுகவைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியிலேயே நீடிப்பது என ‘உறுதியான’ முடிவெடுத்திருக்கின்றனராம்.
இந்த பரபரப்புக்கு நடுவேதான் பாமக நிறுவனர் ராமதாஸ், ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டதாகவும் ஒரு தகவல் பரவியது.
பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில்தான் இருக்கிறார். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிஎம் தரப்பிலோ, கூட்டணியில் திருமாவளவன் உறுதியாக நிற்கிறார். அவருக்கு நெருடலை ஏற்படுத்தும் வகையில் ராமதாஸை சந்திக்க வேண்டுமா? என்ற யோசனையுடன் நேரம் கொடுக்காமல் தவிர்த்துவிட்டதாகவும் சொல்கின்றனர்.
சிஎம் ஸ்டாலினைப் பொறுத்தவரையில், திமுக கூட்டணியை ‘விரிவானம்’ போல வலுவாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்; ஒவ்வொருவரது பலத்தையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து வலிமைப்படுத்திக் கொள்வது நல்லதுதான் என கால்குலேஷன் போடுகிறார்..
அதே நேரத்தில், “இவ்வளவு லக்கேஜ் தேவைதானா? ஒரே நேரத்தில் பலாப்பழம், மாம்பழம் என எல்லாவற்றையும் சாப்பிட முடியுமா?” என்கிற கேள்வியும் அறிவாலய பக்கங்களில் காதில் விழுகிறது என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.