வைஃபை ஆன் செய்ததும் தேமுதிகவில் திடீரென புதிய உற்சாகம் உருவாகிறதே என முன்னோட்டம் கொடுத்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். DMDK Premalatha Vijayakanth
மறைந்த கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக தமிழக அரசியல் களத்தில் 20 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. தேமுதிகவின் முதல் 10 ஆண்டுகளிலேயே சட்டமன்ற எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்தது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகள், பத்தோடு பதினொன்று என்ற நிலைமைக்கு போனது.

தேமுதிகவை உருவாக்கிய கேப்டன் விஜயகாந்த், உடல் நலன் பாதிக்கப்பட்டதில் இருந்தே அக்கட்சி தொய்வுநிலைக்குப் போனது. விஜயகாந்த் மறைவின் போது மக்கள் காட்டிய பேரனுதாபம், அக்கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தது.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிவிட்டன. தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் அடுத்தடுத்த தேர்தல் கள நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

தேமுதிகவை மீண்டும் முழுவீச்சில் கட்டமைக்க வேண்டும் என்பதற்காக கட்சியை மறுசீரமைப்பு செய்து கொண்டிருக்கிறார் பிரேமலதா. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர்; 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மண்டல பொறுப்பாளர் என நியமித்த பிரேமலதா, தேர்தல் பணிகளுக்கு அப்பால் செய்ய சொன்ன ஒரு வேலைதான் முக்கியமானது.
ஒவ்வொரு தொகுதியிலும் கிளைச் செயலாளர் தொடங்கி ஒன்றிய செயலாளர் வரை ஒதுங்கி நிற்கும் தேமுதிகவினரை இந்த பொறுப்பாளர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். தேமுதிகவில் இருந்து ஒதுங்கி இருப்பது ஏன்? தேமுதிக தலைமை என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? இப்படியான அனுசரணையான கேள்விகளுடன் ஒதுங்கி நிற்கும் நிர்வாகிகளை அரவணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த பொறுப்பாளர்களிடம், “தேமுதிகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருந்து கொண்டு அரசியலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்.. எங்களைப் பொறுத்தவரை இது கேப்டனின் கட்சி. அந்த தெய்வத்தின் கட்சியின் சின்னத்துக்கு ஓட்டு மட்டும் போடுவது கடமை என்ற அளவுக்கு நாங்கள் ஒதுங்கித்தான் நிற்கிறோம். எங்களுடைய விரக்திக்கு காரணமே இன்று நேற்று நடந்த சம்பவம் அல்ல. 2016-ம் ஆண்டு கேப்டன் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை வலுக்கட்டாயமாக கொண்டு போய் மக்கள் நலக் கூட்டணியில் சேர்த்து இந்த கட்சியையே இப்படியான நிலைமைக்கு கொண்டு வந்த துக்கத்தை இன்னமும் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை” என குமுறியிருக்கின்றனர்.
பெரும்பாலான தொகுதிகளில் ஒதுங்கி இருக்கும் தேமுதிகவினரின் கருத்து இதுவாகத்தான் இருக்கிறதாம்.
இப்படி தொகுதிகளில் இருந்து வரக் கூடிய விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் பொருளாளர் சுதிஷ் மற்றும் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கும் பாஸ் செய்யப்படுகிறதாம்.
தொகுதிகளுக்கு செல்லும் பொறுப்பாளர்களை காலையிலேயே அழைத்து பேசுகிறார் சுதிஷ். எந்த தொகுதியில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்கிற விவரத்தை போட்டோக்களுடன் வாட்ஸ் அப்பில் சுதிஷுக்கு அனுப்புகின்றனர். இது அப்படியே ஒரு ரிப்போர்ட்டாக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கும் பார்வார்டு செய்யப்படுகிறது.

இந்த தொகுதி பொறுப்பாளர்களின் கலந்துரையாடல்களில் இன்னொரு விஷயம் ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. அது, “இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகரன் இன்னும் முழு வீச்சில் , இளைய கேப்டனாக அரசியல் களத்தில் இறங்க வேண்டும்; கட்சியினர் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் உடனடியாக ஒப்புக் கொண்டு அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்; பல ஊர்களில் விஜய பிரபாகரன் வருவார் என்ற நம்பிக்கையில் பத்திரிகையே அடித்துவிட்டு கடைசியில் நிகழ்ச்சிகளையே கேன்சல் செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா காடாம்புலியூரில் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு ஒரு நிர்வாகி, விஜய பிரபாகரன் பெயரைப் போட்டு பத்திரிகை அடித்தார்.. ஆனால் விஜய பிரபாகரன் வராததால் அந்த நிகழ்ச்சியையே நிறுத்திவிட்டார்.. இப்படியானவற்றை தவிர்த்து சுப நிகழ்ச்சியானாலும் துக்க நிகழ்ச்சியானாலும் எங்களுடன் கேப்டனைப் போல துணை நிற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்றும் வேதனையுடன் கூறியிருக்கின்றனர்.
இப்படி களத்தில் இறக்கிவிடப்பட்ட பொறுப்பாளர்களை சுதிஷ் மட்டுமல்ல பொதுச்செயலாளர் பிரேமலதாவும் தொடர்பு கொண்டு, தமக்கு கிடைத்த ரிப்போர்ட்டுகளைப் பற்றி விலாவாரியாக விசாரிக்கிறாராம்.. இதனால் “அண்ணியார் இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் விசாரித்ததே இல்லை.. இப்படி எங்களிடம் கலந்து பேசி விஷயங்களை உள்வாங்கிக்கிறது ரொம்ப தெம்பாக இருக்கிறது” என நெகிழ்கின்றனர் தேமுதிக பொறுப்பாளர்கள்.

அதேபோல, தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்து செல்லும் கட்சி நிர்வாகிகளைப் பற்றி முன்னர் எல்லாம், பிரேமலதா கண்டு கொள்ளாமல்தான் இருந்து வந்தாராம். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டதாம். தேமுதிக அலுவலகத்துக்கு வந்து கேப்டன் நினைவிடத்துக்கு சென்று திரும்பும் ஒவ்வொரு கட்சிக்காரர்களையும் அழைத்து பேசி, எந்த ஊரில் இருந்து வருகிறீங்க? என்ன பொறுப்பில் இருக்கிறீங்க? உங்க தொகுதியில் கட்சி எப்படி இருக்கு? முன்ன எப்படி இருந்தது? என ரொம்பவே மெனக்கெடலுடன் விசாரிக்கிறாராம்.. இதுவும் சென்னை வந்து செல்லும் தேமுதிக நிர்வாகிகளுக்கு ரொம்பவே உற்சாகத்தை தருகிறதாம்.
இப்படியான தொகுதி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைகளைத் தொடர்ந்து பூத் முகவர்கள் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்துகிறது தேமுதிக தலைமை. தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே கொடுத்த பூத் முகவர்களில் யார் எல்லாம் கட்சி மாறியிருக்கின்றனர்; ஒதுங்கி இருக்கின்றனர் என்ற விவரங்களை அப்டேட் செய்து கொண்டு புதியதாக, ஆர்வத்துடனும் கட்சிக்காக பாடுபடக் கூடியவர்களையும் கவனமாக தேர்வு செய்து பூத் முகவர்க
ள் பட்டியலை தயாரித்து புதியதாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப இருக்கிறதாம் தேமுதிக.
இந்த ஆலோசனைகளின் படியே, அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளையும் கவர் செய்யும் வகையில் விஜய பிரபாகரனுக்கான பயண திட்டமும் ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்.. அதேபோல தேமுதிக கூட்டணி விவகாரத்தில் இனி கட்சி நிர்வாகிகளையும் அழைத்து பேசி கலந்து ஆலோசிப்பது எனவும் வாக்குறுதி தந்துள்ளனராம் என டைப் செய்துவிட்டு ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ என்ற பாடலை பாடிய படியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.