ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: அமித்ஷாவிடம் ‘கறாராக’ பேசிய எடப்பாடி! அண்ணாமலை பேச்சால் அதிர்ந்த பாஜக! புலம்பும் தினகரன், சசிகலா

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என பிக்பாஸ் ஸ்டைலில் கமெண்ட் அடித்தபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

எது எதிர்பாராதது? எதை எதிர்பார்க்கனும்யா?

ADVERTISEMENT

எல்லாம் அதிமுக- பாஜக விவகாரம்தான்.. செங்கோட்டையனைத் தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. டெல்லிக்கு எடப்பாடி போன நேரத்தில் சென்னையில் பாஜகவின் மிக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளதே..

பிஎல் சந்தோஷ், அண்ணாமலை கலந்துகிட்டதா?

ADVERTISEMENT

அதேதான்.. சென்னையில் இருந்து இன்று (செப்டம்பர் 16) காலை எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி என ஒரு டீம் டெல்லி சென்றது. இங்கே, சென்னை ஈசிஆர் ரிசார்ட்டில் சிந்தனை அமர்வு, கலந்துரையாடல் என பாஜகவின் சீரியசான ஆலோசனை கூட்டம் நடந்தது.

பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் கலந்துகிட்டதால இந்த கூட்டம் ரொம்ப முக்கியமானதா பார்க்கப்படுகிறது.. அதனாலேயே ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணாமலையும் கூட பிற்பகலில் இந்த கூட்டத்துல கலந்துகிட்டாரு.. அண்ணாமலை காலை கூட்டத்துல கலந்துக்கலை..

ADVERTISEMENT

பாஜக கூட்டத்துல என்ன நடந்தது? அண்ணாமலை என்ன பேசினாராம்?

திமுக, அதிமுக, விஜய் கட்சிகளின் எலக்‌ஷன் பணிகளை விவரித்த அண்ணாமலை, பல புள்ளி விவரங்களையும் அடுக்கினார்.

“திமுக தலைவரான சிஎம் ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றுப் போன, கடுமையான போட்டிகளை சந்தித்த தொகுதி நிர்வாகிகளை எல்லாம் அழைத்து பேசினார். அப்போது, திமுக மாவட்ட செயலாளர்களை கூட ஸ்டாலின் உள்ளே விடலை.. தோல்விக்கான காரணம் என்ன ? என்பதை வெளிப்படையாக பேச சொல்லி, ‘உண்மையான காரணம்’ என்ன என்பதை தெரிந்து கொண்டார் ஸ்டாலின்.

ஒவ்வொரு தொகுதி நிர்வாகியிடமும் அந்த தொகுதியைப் பற்றி ஏராளமான கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கினார் ஸ்டாலின். அப்படி ஒரு அணுகுமுறையை அவர் வெச்சிருக்காரு..

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்துகிறார்; இப்ப தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் செய்கிறார்.

நடிகர் விஜய்யும் பிரசாரத்தை தொடங்கிட்டாரு.. தேமுதிக, பாமக என எல்லா கட்சியுமே ஒவ்வொரு முழக்கத்தை முன்வைத்து களத்தில் இறங்கி வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க என்பதை நாம கவனத்தில் வைக்கனும்” என சொன்னார்.

அப்போது, ‘ஆக நம்ம தலைவர் ஆக்டிவ்வாக இல்லைன்னு அண்ணாமலை சொல்றாரு’ என பாஜக நிர்வாகிகள் கிசுகிசுத்துக் கொண்டனராம்.

அத்துடன், திமுக கூட்டணிக்கு 40%-க்கும் அதிகமான ஓட்டு கிடைக்கலாம். நம்ம ஸ்டேட்ல 2.28 கோடி வோட்டர்ஸ், 40 வயது ஆகாதவங்க இருக்காங்க.. இவங்க ஓட்டு எங்க போகும்? சீமான் 6%-க்கும் மேல ஓட்டு வாங்குவாரு.. விஜய் கட்சிக்கு 8% முதல் 12% ஓட்டு கிடைக்கலாம். பொதுவாக திமுக, நம்ம அதிமுக- பாஜக கூட்டணிக்கு வெளியே 20% முதல் 25% ஓட்டுகள் இருக்கு.. என பல புள்ளி விவரங்களை அடுக்கி வைத்துவிட்டு, இதையும் கவனத்தில் வைக்கனும் என Power Point மூலமாக ‘பொலிட்டிக்கல் வகுப்பு’ எடுத்தார் வாத்தியார் அண்ணாமலை.

நயினார் நாகேந்திரன் பேசும் போது, “நானும் டிடிவி தினகரன் கிட்ட பேசிக்கிட்டுதான் இருந்தேன். அமித்ஷா ஜி-யிடமும் பேசினேன்.. பொன் ராதாகிருஷ்ணனிடமும் பேச சொல்லி இருந்தேன்.. இப்படி பேசிகிட்டே இருக்கும் போது திடீர்னு கூட்டணியை விட்டு விலகுவதாக தினகரன் அறிவிச்சுட்டாரு.. நான் என்ன செய்யறது?” என்றார்.

பாஜக நிர்வாகிகளான கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம் போன்றவர்கள், “தென் மாவட்டங்களில் நமக்கு வெற்றி கிடைக்கனும்னா டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லாத்தையும் கூட்டணிக்குள் கொண்டுவரனும்… இல்லைன்னா ரொம்ப சிரமம்தான்” என வெளிப்படையாகவே வருத்தப்பட்டனர். கரு.நாகராஜன் பேச தொடங்கும் போது, அண்ணாமலை அவர்களே! என சொல்ல அப்போது குறுக்கிட்ட பிஎல் சந்தோஷ், அண்ணாமலைதான் இப்ப இந்த கூட்டத்தில இல்லையே என சுட்டிக்காட்டினார்.

பாஜக மாநிலச் செயலாளர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் பேசும் போது, “நம்ம கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லாம் இருக்கிறதுதான் ரொம்ப பெரிய பலம்” என அழுத்தமாக சொன்னதுடன், ” அரசு அதிகாரிகளிடம் கூட திமுக ஆட்சிக்கு எதிரான போக்கு- மாற்றம் இருக்கிறது” என சுட்டிக்காட்டியதை அனைவரும் உன்னிப்பாக கேட்டனர்.

இதன் பின்னர் ஒரு கலந்துரையாடல் போல சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அப்போது, நயினார் நாகேந்திரன், “ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.15 கோடியை திமுக ஒதுக்கியிருக்கு” என சொல்ல குறுக்கிட்ட கராத்தே தியாகராஜன், “ஒரு தொகுதிக்கு ரூ.20 கோடி கொடுத்து அனுப்பிடுச்சு திமுக.. அதெல்லாம் அந்த தொகுதிகளில் பாதுகாப்பாக இருக்கு..” என சொன்னார்.

டால்பின் ஶ்ரீதர் பேசும் போது, “நடிகர் விஜய்க்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடுறது ரொம்ப பெரிய விஷயம்” என சொல்ல, நடிகர் சரத்குமார் குறுக்கிட்டு, “கூட்டம் கூடுவதை வைத்து எல்லாம் கணக்கு போட தேவையில்லை.. ஏன்னா கூட்டம் எல்லாமே ஓட்டாகவும் மாறாது” என அழுத்தமாக சொன்னார்.

சரத்குமாருக்கு சப்போர்ட்டா கராத்தே தியாகராஜன், ஒருவிஷயத்தை பகிர்ந்து கொண்டார். “சரத்குமார் சொல்றது சரியாகத்தான் இருக்கும். ஏன்னா 1996-ல் சரத்குமார் தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் செஞ்சாரு.. அப்ப ஒரு லட்சம் பேரு கூடுனாங்க.. அந்த தேர்தலில் பர்கூரில் ஜெயலலிதா தோற்பார் என மூப்பனார், கலைஞர்கிட்ட சொன்னார் சரத்குமார்.. இதை அன்று கலைஞர் கூட நம்பலைதான்.. ஆனால் ஜெயலலிதா தோற்றார்.. அதனால சரத்குமாரின் கணிப்பு சரியாக இருக்கும்” என்றார்.

அதேபோல, “நடிகர் சரத்குமார், நடிகை குஷ்பு போன்றவங்களை எல்லாம் நாம முழுமையாக பயன்படுத்தனும்; நடிகர் ராதாராவி வீட்டில்தான் இருக்கிறார்.. அவரை எல்லாம் நாம முழுமையாக பயன்படுத்தனும்” என்றும் ஆலோசனை சொன்னார் கராத்தே ‘தியாகு’.

தமிழிசை சவுந்தரராஜன் பேசும் போது, “பீகாரில் வாக்கு திருட்டுன்னு காங்கிரஸ் பேசுது.. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது என் தொகுதியிலேயே 20,000 ஓட்டுகள் காணாமல் போயிருச்சு” என ஆவேசப்பட்டார்.

சென்னை ஈசிஆர் அக்கரை ரிசார்ட்டில் நடந்த இன்றைய பாஜகவின் கூட்டத்தில் பெரும்பாலானோர் பேசியது, “அதிமுக- பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருக்கனும்” என்பதுதான். அத்தனையையும் பிஎல் சந்தோஷ் ரொம்ப கவனமாக கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்துல அண்ணாமலை காலையில் கலந்து கொள்ளாமல் இருந்தது, பிற்பகலில் கலந்து கொண்டது.. இதை எல்லாத்தையும் வைத்தும் வழக்கம் போல அண்ணாமலை வார் ரூம் ‘அன்பு கூட்டமும்’ பாஜகவினரும் சமூக வலைதளங்களில் ‘வெட்டு குத்து’ ரேஞ்சுக்கு ‘விளையாடுவதும் சுவாரசியமாத்தான் இருக்கிறது.

சரிங்க.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி என்ன சொன்னாராம்?

டெல்லி போன எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுகவின் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, தம்பிதுரை, எம்.பிக்கள் சிவி சண்முகம், இன்பதுரை ஆகியோருடன் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாம்.. அவர் தமது இல்லத்திலேயே, எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு மதிய விருந்து கொடுத்தார்.

டெல்லியில் அமித்ஷாவை மட்டும் இல்லாமல், செங்கோட்டையனை இயக்கும் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் எடப்பாடி சந்தித்து பேசினார். இரவு 8 மணியளவில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளுடன் சந்தித்தார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்தது. இதன் பின்னர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி தனியே சந்தித்தும் பேசினார்.

அமித்ஷாகிட்ட என்ன பேசினார் எடப்பாடி என டெல்லி பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ” “டிடிவி, தினகரன், சசிகலா இவங்களை எல்லாம் அதிமுகவில் சேர்க்கவே முடியாது; அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இருப்பது பற்றி பாஜகதான் முடிவு செய்யனும்” என திட்டவட்டமாகவே சொல்லிவிட்டாராம்.. இதுதான் இப்போதைக்கு வந்த தகவல்..

ஓஹோ..எடப்பாடி டெல்லி போன நிலையில் தினகரன் ரொம்ப கொந்தளிக்கிறாரே?

சென்னையில் நேற்று அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்துல பேசுன எடப்பாடி, செங்கோட்டையன்- ஓபிஎஸ்- டிடிவி தினகரன் என எல்லாத்தையும் வெளுத்துவிட்டார்.. அதுக்குதான் தினகரன் இந்த ரியாக்‌ஷனை காட்டினார்.

தினகரன் வெளிப்படையாகவே பிரஸ் மீட்டை கூட்டி மனசில் இருந்ததை எல்லாம் கொட்டுனாரு.. சசிகலாவோ, எடப்பாடி பேசியதை திரும்ப திரும்ப கேட்டு.. “என்ன இவரு இப்படி பேசுறாரு.. ஒரு முடிவு எடுத்துவிட்டுதான் இப்படி பேசுறாரு.. நாமும் எவ்வளவுதான் இறங்கிப் போய் பேசுறது..அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியலையே” என ரொம்பவே புலம்பிக் கொண்டே இருக்கிறாராம் என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share