டிஜிட்டல் திண்ணை: வெடித்த எடப்பாடி.. விரக்தியில் மா.செக்கள்.. அதிமுகவுக்குள் ‘பூகம்பம்’!

Published On:

| By Mathi

Digital Thinnai AIADMK

வைஃபை ஆன் செய்ததும், “நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்மறை தீர்ப்பு” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

ஓஹோ.. தேர்தல் காலம்னா ‘நம்பிக்கை’யை பத்தி அதிகமா பேசுவீரோ?

ADVERTISEMENT

நாம எங்கய்யா பேசுறோம்.. பேசுறதை சொல்றோம்.. சென்னையில நேத்து நடந்த அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தை பத்திதான் சொல்ல வந்தேன்..

மோடி போன மாசம் 23-ந் தேதி மதுராந்தகம் வந்தப்ப, எல்லா கூட்டணி கட்சிகளோட தலைவர்களையும் அந்த மேடையில ஒன்னா உட்கார வெச்சிருந்தாங்க.. அதுல இருந்து ‘எங்க கூட்டணியை பார்த்தீங்களா.. வலிமையான கூட்டணியை அமைச்சிருக்கோம்’னு அதிமுக, பாஜக லீடர்ஸ் பேசிகிட்டு இருக்காங்க.. அதே மாதிரி எங்க கூட தேமுதிகவும் வந்துரும்னு சிலர் நம்புறாங்க.. ஆனா தேமுதிகவோ, திமுக கூட மும்முரமா பேசிகிட்டு இருக்காங்க..

ADVERTISEMENT

இந்த ஜோரில்தான் நேத்து சென்னையில அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டியிருந்தாரு எடப்பாடி.. இந்த கூட்டம் முடிஞ்சதும் 2-ம் கட்டமாக சில தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவிச்சாரு எடப்பாடி.. போன ஜனவரி 17-ந் தேதி எம்ஜிஆர் பிறந்த நாள் அன்னைக்கு கொஞ்ச வாக்குறுதிகளை முதல் கட்டமாக வெளியிட்டிருந்தாரு.. அதோட தொடர்ச்சியா நேத்து, ”முதியோர்/ விதவைப் பெண்கள் உதவித் தொகை உயர்த்தப்படும்; சிறுபான்மை பெண்களுக்கு கடன் தரப்படும்; மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்”ன்னு வாக்குறுதிகளை கொடுத்திருக்காரு எடப்பாடி.

சரிய்யா.. அதிமுக மா.செ.க்கள் கூட்டத்துல என்ன பேசுனாங்களாம்?

ADVERTISEMENT

அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தை பத்திதான் இப்ப அந்த கட்சியில எல்லா ‘தலை’களும் ரொம்பவே சீரியசா பேசுறாங்க.. என்னப்பா விவரம்னு எடப்பாடிக்கு நெருக்கமானவங்ககிட்ட முதல்ல பேசுனோம்.. அப்ப, “நேத்து மீட்டிங்குல பொதுச்செயலாளர் (எடப்பாடி) ரொம்ப டென்ஷனாத்தான் பேசினாரு.. ஒரு சில விஷயங்களைப் பேசித்தான் ஆகனும்னு ஓபனா உடைச்சும் விட்டுட்டாரு..

பொதுச்செயலாளர் பேசுறப்ப, ”முதல நம்ம மா.செக்கள் உங்களுக்கே நாம ஜெயிப்போம்னு நம்பிக்கை இல்லை.. அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கனுமே.. அப்படி நம்பிக்கையே இல்லாம எலக்‌ஷன் வேலை பார்த்தா எப்படி ஜெயிக்க போறோம்? நீங்க நம்பிக்கையா இருந்தாதானே தொண்டர்கள் நம்பிக்கையா வேலை செய்ய முடியும்.. ஜெயிப்போம்னு நம்பிக்கையோட வேலை செய்யுங்க…

நாம பலமான கூட்டணி அமைப்போம்னு சொன்னேனா இல்லையா? இப்ப பலமான கூட்டணியும் அமைச்சாச்சு.. அப்புறம் ஏன் உங்களுக்கு நம்பிக்கை இல்லை?

இங்க பாருங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைங்க.. நான் முதலமைச்சர் பதவி வரை பார்த்துட்டேன்..
உங்களை எல்லாம் எம்.எல்.ஏ.வாக்கனும்.. மந்திரியாக்கிடனும் நான் நினைக்கிறேன்.. நான் மட்டுமே நினைச்சா போதுமா? நீங்களும் அதுக்கு வேலை செய்யனும்.. நீங்களும் நாம ஜெயிச்சுப்போம்.. எல்லா நடக்கும்னு நம்பிக்கை வைக்கனுமே..“ன்னு காட்டமாகவே பேசிட்டாரு..

அதுக்கு அப்புறமா, “இந்த கூட்டத்துல இருக்கிறவங்க சில பேரு மத்தவங்ககிட்ட என்னைப் பத்தி என்னவெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தகவல் வந்துகிட்டுதான் இருக்கு.. ஏன் இப்படி எல்லாம் பேசனும்?

பூத் கமிட்டியை போட்டு ஒழுங்கா வேலை பாருங்கன்னும் சொன்னேன்.. அதையும் செய்யலை.. நம்ம IT Wing கூட சேர்ந்து வேலை செய்யுங்கன்னும் சொல்லிப் பார்த்தேன்.. அதையும் செய்யலைன்னா என்ன அர்த்தம்?”னும் ஓபனாவே கோபத்தை கொட்டிவிட்டார் சார்” என்றனர்.

அப்படியா சங்கதி.. அதிமுக மா.செ.க்கள் என்ன சொன்னாங்களாம்?

அதிமுக மா.செ.க்கள் கூட்டத்துல எடப்பாடி இப்படி சரவெடியா வெடிச்சதால அதிகமா உள்ளே யாரும் பேசலை.. ஆனால் கூட்டத்தை முடிச்சுட்டு வெளியே வந்த மா.செ.க்கள் ஆள் ஆளுக்கு மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்டித் தீர்த்துட்டுதான் நகர்ந்தாங்க..

இந்த கூட்டத்துல கலந்துகிட்ட மா.செ.க்கள் கிட்ட நாம பேசுனப்ப, “ ஆமா சார்.. அண்ணன் ரொம்பவே டென்ஷனாத்தான் சில விஷயங்கள் சொன்னாரு.. முதல்ல பலமான கூட்டணி அமைச்சிருக்கோம்னு சொல்றாரு.. ஒரு விஷயம் எங்களுக்கே புரியலை சார்.. நாங்க என்ன பலமான கூட்டணி அமைச்சுட்டோம்னு தெரியலை? ஏற்கனவே கூட்டணியில இருந்த சின்ன சின்ன கட்சிகள்தானே இப்பவும் இருக்காங்க.. டிடிவி மட்டும்தான் புதுசா வந்திருக்காரு.. என்னமோ விஜய் கூட கூட்டணி வெச்சிருக்கிற மாதிரி ‘பலமான கூட்டணி.. வலிமையான கூட்டணி’ன்னு அண்ணன் சொல்லிகிட்டு இருக்கிறதை எப்படித்தான் நம்பறது?..

எலக்‌ஷனுக்குன்னா செலவு செய்யனும்தானே? ஆனா எங்க அண்ணன் முன்னாள் அமைச்சர்களைக் கூப்பிட்டு, “உங்களுக்கு இந்த துறையை கொடுக்கலாம்னு மனசுல வெச்சிருக்கேன்.. அதனால எலக்‌ஷன்ல நீங்க அந்த தொகுதிகளை எல்லாம் பாருங்கன்னு” பிரிச்சுவிட்டு அமைதியா இருக்கிறாரு.. இப்படி செஞ்சா எப்படிசார் கட்சியில வேலை நடக்கும்?” என குமுறுகின்றனர்.

இந்த கூட்டத்துல கலந்துகிட்ட மாஜி அமைச்சர்கள் சிலர்கிட்ட நாம பேசனப்ப அவங்க சொல்றது என்னான்னா, “ எங்க பொதுச்செயலாளர் கலர் கலரா பஞ்சுமிட்டாய் கொடுத்து சாப்பிட சொல்ற கதையாத்தான் பேசுறாரு.. பஞ்சு மிட்டாய் பார்க்க நல்லாத்தான் இருக்கும்.. அதை சாப்பிட்டா உள்ளே ஒன்னுமே இருக்காதே.. அதுமாதிரிதான் எங்க அண்ணன் பேச்சும்.. பேசும்போது எல்லாம் நம்பிக்கையா இருங்கன்னு சொல்றாரு.. ஆனால் நம்பிக்கையான விஷயங்களே இல்லைன்னா எப்படி சார்?

அண்ணன் எங்களை செலவை பார்த்துக்குங்கன்னு சொன்னது எல்லாம் உண்மைதான்.. அதுக்கு அவரு திரும்ப திரும்ப சொல்ற ஒரே விஷயம்.. ”கவர்மெண்ட்டுல இருந்தப்ப உங்ககிட்ட நான் எந்த பணமும் வாங்கலைதானே.. நீங்களே கொடுக்கல் வாங்கலை பார்த்துகிட்டீங்கதானே.. இப்ப எலக்‌ஷனுக்கு செலவு செய்யுங்க”ன்னு சொல்றாரு.. அதெல்லாம் சரிசார்.. நாங்களும் செலவை பார்க்கிறோம்.. ஆனா அதுக்காக தன்கிட்ட இருக்கிற காசை மட்டும் வெளியே எடுக்கவே மாட்டேன்.. நீங்களே எல்லா செலவையும் பாருங்க”ன்னு அண்ணன் சொன்னா யாரா இருந்தாலும் எப்படி சார் ஏத்துகிட்டு வேலை செய்வாங்க?”ன்னு கொந்தளிப்பதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share