வைஃபை ஆன் செய்ததும், ‘தெற்கே நல்ல மழை கொட்டுதே’ என வானிலை முன்னறிவிப்பு செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தினம் தினம் மழைதானே?
ஆமாம்.. மழைக்கு நடுவேதான் ஆகஸ்ட் 21-ந் தேதி மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் படுஜோராக நடந்து வருகின்றன.
தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் மதுரையில் முகாமிட்டு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் மாநாட்டு பணிகளில் ரொம்பவே கவனமாக இருக்கிறதாம் நடிகர் விஜய்யின் டீம்.
என்னதான் மாநாட்டு பணிகளில் இணைந்து செயல்பட்டாலும் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ரொம்பவே பொங்கிக் கொண்டிருக்கின்றராம்..
புஸ்ஸி ஆனந்த் தமக்கு நெருக்கமானவர்களிடம், இத்தனை வருஷமாக விஜய் கூட இருக்கிறேன்.. என்கிட்ட ரொம்ப கடுமையாக நடந்துகிட்டது இல்லை.. நம்ம பசங்க ஆர்வ கோளாறில் “வருங்காலமே!” “அரசியல் சாணக்கியரே” என்றெல்லாம் என் படத்தை பெருசா போட்டு போஸ்டர் அடிக்கிறாங்க.. ஏதோ ஆர்வத்துல பசங்க செய்றாங்கன்னு நாங்க கடந்து போறோம்.. ஆனால் ஜான் ஆரோக்கியசாமியோ, விஜய்யிடம் புஸ்ஸி ஆனந்த் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கனும் என்றே திட்டமிட்டு செய்கிறார் என்றெல்லாம் போட்டுக் கொடுத்துவிட்டார். இதனால் விஜய் என்னிடம் ரொம்பவே வருத்தப்படுகிற மாதிரி ‘செஞ்சுவிட்டார் ஜான்’ என புலம்பி இருக்கிறார்.
இதேபோல ஆதவ் அர்ஜூனாவும், ‘ஜான் ஆரோக்கியசாமி சொல்றதைத்தான் விஜய் கேட்கிறார்.. நெல்லை கவின் படுகொலை சம்பவத்தின் போது நான் சொன்ன மாதிரி அவங்க வீட்டுக்கு போயிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் தெரியுமா? ஆனால் ஜான் சொன்னதால, நெல்லைக்கு விஜய் போகலை..
இங்க வந்ததில் இருந்து காசுதான் செலவாகிட்டே இருக்கு.. எதுவும் திருப்தியா இல்லையே.. சில நேரங்களில் ஏன் இங்க வந்தோம்னு கூட நினைக்க தோனுது என நொந்து போய் பேசியிருக்கிறார்.
அதேநேரத்தில் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களோ, அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. ஜான் ஆரோக்கியசாமி சொல்கிற சில விஷயங்களை விஜய் கேட்கிறார்தான்.. அதே நேரத்தில் ஜான் ஆரோக்கியசாமி சொல்கிற அத்தனையையும் அப்படியேயும் கேட்டுவிடுவதில்லை. பல நேரங்களில் ஜான் ஆரோக்கியசாமி சொல்லும் விஷயங்களில் குறுக்கு கேள்விகளை கேட்டு மடக்கியும் விடுகிறார் விஜய்.. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஏதோ ஒரு ஆதங்கத்தில் அப்படி நினைக்கிறார்கள் அவ்வளவுதான்.. என்கின்றன என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.