வைஃபை ஆன் செய்ததும் ‘அஜித்குமார் லாக்கப் மரணத்தில் ஸ்கோர் செய்யத்தான் எவ்வளவு மெனக்கெடுறாங்கப்பா’ என டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Ajithkumar TVK Vijay
திருப்புவனம் போலீசாரால் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு அரசுக்கு நெருக்கடி தர தீவிரமாக முயற்சித்தன; அரசு தரப்போ இந்த விவகாரத்தை லாவகமாக கையாண்டு ‘கண்டத்தில்’ இருந்து தப்பி இருக்கிறது.
அஜித்குமார் மரணத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியது, அக்கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை தந்தது. இதே பாணியில் விஜய்யின் தவெகவும் அஜித்குமார் லாக்கப் மரணத்தை கையில் எடுத்திருக்கிறது.
அஜித்குமார் மரணத்துக்கு நீதி கோரி ஜூலை 3-ந் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே போராட்டம் நடைபெறும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார்.
மேலும் இந்த போராட்டம் தொடர்பான ஆலோசனையில், “சென்னை போராட்டத்தில் சுமார் 1 லட்சம் பேரையாவது திரட்ட வேண்டும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து நம்ம கட்சியினர் அத்தனை பேரும் கட்டாயம் வரனும்.. பொதுமக்களையும் எவ்வளவு திரட்ட முடியுமோ திரட்டிக் கொண்டு வரனும்” என்று தவெக தலைவர் விஜய்யும் உத்தரவிட்டடிருந்தார்.
இந்த போராட்டத்துக்கு சென்னை போலீசிடம் அனுமதி கேட்டு தவெகவினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “அஜித்குமார் லாக்கப் மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்; தமிழகத்தில் திமுக ஆட்சியில் 24 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன என நீதிமன்றம் தெரிவித்துள்ளது-இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜூலை 1-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக அறிவித்து விட்டார்.
இதனால் சென்னை போலீசாரும், தவெக நிர்வாகிகளை அழைத்து, “சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக முதல்வரே அறிவித்துவிட்டாரே” என சுட்டிக்காட்டி ஜூலை 3-ந் தேதி போராட்டம் நடத்த அனுமதி இல்லை என கூற்யிருக்கின்றனர்.
ஆனாலும் விடாப்பிடியாக, ’24 லாக்கப் மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டு போராட்டம் நடத்துகிறோம்’ என கூறியிருக்கின்றனர் தவெக நிர்வாகிகள்.
இதனையடுத்து ஜூலை 6-ந் தேதி தவெகவினர் போராட்டம் நடத்த அனுமதி தந்துள்ளனர் சென்னை போலீசார். ஆனால் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி தரவில்லை. அதற்கு பதிலாக, சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
சென்னை போலீசாரின் அனுமதியைப் பெற்றுவிட்டாலும், ‘தலைவர்’ விஜய் சொன்னபடி 1 லட்சம் பேரை திரட்டனுமே.. சென்னையை சுற்றிய மாவட்டங்களில் இருந்து மட்டுமே இவ்வளவு பேரை எப்படி திரட்ட முடியும்? ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சிக்காரர்கள் அனைவரையும் வரச்சொல்லித்தான் மாஸ் காட்டனுமா? கூட்டத்தை எப்படியாவது கூட்டித்தானே ஆகனுமே என தவெக நிர்வாகிகள் தவியாய் தவிப்பதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.