தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் 1.31 கோடி பெண்களுக்கு சிறப்புத் தொகையாக இன்று தலா ரூ.5000 வரவு வைக்கப்பட்டது.
இது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பலருக்கு பணம் வரவில்லை என்றும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாநகரைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கு பணம் வரவில்லை என்று தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து முறையிட்டனர். அவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி என்று அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், “என்னிடம் கூட ஒரு பெண், எனக்கு பணம் வரவில்லை என்று சொன்னார். மகளிர் உரிமைத் தொகை தகுதியிருந்தும் விடுபட்டவர்கள் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், அதற்கான காரணத்தை அறிந்து மீண்டும் மேல்முறையீடு செய்ய அரசு உரிய வழிவகைகளைச் செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் ஆய்வு செய்த பின் தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு 3 லட்சத்துக்கும் குறைவாக ஊதிய பெறும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார். ”
