தருமபுரி கிழக்கு மாவட்டம் தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தடங்கம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஆகஸ்ட் 17) காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது அவர், விழா மேடையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, பெரிய கருப்பன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டவர்,
மாவட்ட செயலாளர் மணியை, பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே என்றும், மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பனை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்களே என்று அழுத்தமாக குறிப்பிட்டார்.

அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, விழா நடந்துக்கொண்டிருக்கும்போது அரங்கத்திற்குள் ஒரு முதியவர் வருகை தந்தார். அவரை பார்த்ததும், மேடையில் தனது இருக்கையில் இருந்து எழுந்து ’வணக்கம்’ சொன்னார் முதல்வர்.
பதிலுக்கு அந்த பெரியவரும் நெகிழ்ந்து போய் வணக்கம் சொன்னார். உடனே அருகில் இருந்த எம்.ஆர்.கேவிடம் ’அவரை வெயிட் பண்ண சொல்லுங்க… விழா முடிந்ததும் அவரை சந்தித்து பேச வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அதன்படி விழா முடிந்ததும், கீழே இறங்கி சென்ற ஸ்டாலின், அந்த பெரியவரை சந்தித்து, அவரது குடும்பத்தார் பேரப்பிள்ளைகள் அனைவரையும் விசாரித்தார். மேலும் “உங்க குடும்பத்தில் இருந்து கட்சிக்கு ஒருவரை அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என உறுதியளித்திருக்கிறார்.
இதனையடுத்து அந்த பெரியவர் குறித்து நமது மின்னம்பலம்.காம் தரப்பில் விசாரித்தோம். ஸ்டாலின் சந்தித்த அந்த பெரியவர் ஆர்.சி என்கின்ற சின்னசாமி. கலைஞருக்கு நெருக்கமான இவர் தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
அப்போது முல்லை வேந்தனுடன் மதிமுகவுக்கு போனவர், சில காலங்களில் மீண்டும் திமுகவுக்கே திரும்பிவிட்டார். மேலும் நான்கு முறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார்.
அவருக்கு ஒரே மகன் பரிமளம். அவரது மனைவி பேராசிரியையாக இருந்து வருகிறார்.
இரண்டு பேரப்பிள்ளைகளில் ஒருவரான சரத்குமார், பி.இ முடித்து விட்டு அமெரிக்காவில் பணியாற்றி வசித்து வருகிறார். இன்னொரு பேரனான சதீஷ், எம்.டி முடித்துவிட்டு டாக்டராக தருமபுரியில் சேவை செய்து வருகிறார். இதில் ஒருவருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்க முதல்வர் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழா மேடையில் மாவட்டச் செயலாளரான மணியை எம்.பி என மட்டுமே குறிப்பிட்டதும், பெரியருவருக்கு கொடுத்த வாக்குறுதியையும் பார்க்கையில் மீண்டும் மாவட்டச் செயலாளார் மாற்றமா என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.பி. மணிக்கு முன்பு, தர்ம செல்வன் மாவட்ட செயலாளராக இருந்தார். அவரது செயல்களில் தலைமைக்கு விருப்பம் இல்லாமல், அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அதற்கு முன்பு தடங்கம் சுப்பிரமணியனும் அதேபோன்று மாற்றப்பட்டார். இந்த வரிசையில் மணியும் தற்போது மாற்றப்படுவரா என கேள்வி எழுந்துள்ளது.