தாராபுரம் அருகே முன் விரோதம் காரணமாக பள்ளி வளாகம் அருகே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை (Lawyer Hacked to Death) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் லிங்கசாமி. முன்னாள் ராணுவ அதிகாரியான லிங்கசாமியின் மகன் முருகானந்தம். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
லிங்கசாமிக்கும் அவரது தம்பியான தண்டாயுதபாணி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன் கூலிப்படையினரால் லிங்கசாமி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அப்போது கொலைக்கான சாட்சியங்கள் இல்லாததால் இந்த கொலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் லிங்கசாமி குடும்பத்திற்கும் தண்டாயுதமாணி குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. லிங்கசாமியின் சகோதரர் தண்டாயுதபாணி தாராபுரம் நகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிர்புறம் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
அந்த பள்ளி கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகானந்தம் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்தப் பள்ளியில் நான்கு மாடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் சட்டப்படி மூன்று மாடிகளுக்கு மேல் கட்டக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளியின் கூடுதல் கட்டடமான நான்காவது மாடி இடிக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டாயுதபாணி நிர்வகித்து வந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கட்டடத்தின் உறுதித் தன்மையை சோதனை செய்ய உயர் நீதிமன்ற உத்தரவின் படி நீதிமன்ற ஊழியர்கள் தாராபுரம் நில அளவை பிரிவு அதிகாரிகள் நேற்று (ஜூலை 28) அங்கு வந்தனர். அவர்களுடன் வழக்கறிஞர் முருகானந்தமும் வந்தார்.
முருகானந்தம் மீது தாக்குதல்
பள்ளியை சோதனை செய்ய வந்த அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மறைந்திருந்த கூலிப்படையினர் 4 பேர் வழக்கறிஞர் முருகானந்தத்தை அரிவாளால் வெட்டினர். முருகானந்தத்தை காப்பாற்ற வந்த ரகுராம், தினேஷ் என்ற சக வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
அதிகாரிகள் ஓட்டம்
அப்போது அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள், நில அளவை பிரிவு அதிகாரிகள் அங்கிருந்து ஓடத் தொடங்கினர். இந்த தாக்குதலில் நிலை குலைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகானந்தத்தின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த ரகுராம், தினேஷ் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வாகனத்தில் ஆயுதங்கள்
சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. முருகானந்தத்தை வெட்ட பயன்படுத்திய ஆயுதங்கள் பள்ளி வேனில் இருந்தது கண்டறியப்பட்டது. இதை போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தனிப்படை ஒன்றை அமைத்து கொலையாளியை காவல்துறையினர் தேடி வந்தனர்.
தாளாளர் சரண்
முருகானந்தம் கொலை தொடர்பாக பள்ளியின் தாளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் ராம், சுந்தரன், நாகராஜன், நாட்டுதுரை ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
நீதிமன்ற புறக்கணிப்பு
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இன்று திருப்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.