ADVERTISEMENT

கரூரில் என்ன நடந்தது? வேலுசாமிபுரத்தில் இடம் ஒதுக்கியது ஏன்? பொறுப்பு டிஜிபி பேட்டி!

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரூரில் நள்ளிரவு ஒரு மணியளவில் தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இன்று நடந்தது மிகவும் வருந்தத்தக்க துரதிர்ஷ்டமான நிகழ்வு. தற்போதைய தகவல் படி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆண்கள் 12 பேர், பெண்கள் 16 பேர். குழந்தைகளில் ஆண்கள் ஐந்து பேரும், பெண்கள் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தெரிந்தவுடன் காவல்துறை சார்பில் உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மூன்று ஐஜி, இரண்டு டிஐஜி, பத்து எஸ்பிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் 2000 போலீசார் கரூர் சென்றுள்ளனர்.

இதற்கு முன்னர் திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமாக வந்ததை மனதில் வைத்துக் கொண்டுதான் கரூரில் முதலில் கேட்ட லைட் ஹவுஸ், உழவர் சந்தை போன்ற பகுதிகளில் அனுமதி அளிக்கவில்லை. அதைவிட இது கொஞ்சம் வசதியான பகுதியாக இருக்கும் என்பதை நினைத்து தான் இந்த இடத்தில் அனுமதி கொடுக்கப்பட்டது. இதே இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான பெரிய கட்சி பரப்புரை செய்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய கூட்டத்திற்கு அவர்கள் 10000 பேர் வருவார்கள் என்றனர். ஆனால் 27 ஆயிரம் பேர் அளவிற்கு கூட்டம் வந்துள்ளது. அதிகமான காவல் துறையினர்தான் பணியில் அமர்த்தபட்டனர்.

தவெக சார்பில் பத்து முதல் மூன்று மணி வரைக்கும் தான் அனுமதி கேட்டனர். தவெக ட்விட்டர் தளத்தில் 12 மணிக்கு வருவார் என்று தெரிவித்திருந்தனர். இதனால் 11 மணியிலிருந்து கூட்டம் வரத் தொடங்கியது. ஆனால் விஜய் வரும்போது 7.40 மணி ஆகிவிட்டது.

ADVERTISEMENT

இதனால் காலை 11 மணியிலிருந்து சேர்ந்த கூட்டம் அங்கேயே இருந்தது. அவர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் உணவு இல்லை என்பது முக்கிய விஷயம். விஜய்க்கு வரவேற்பு ஒரு பகுதியில் நடந்த நிலையில் அங்கிருந்த கூட்டமும் அவருடைய வாகனத்தை தொடர்ந்து வந்தது.

இதனால்தான் கட்சித் தொண்டர்களை சீராக கொண்டுவர வேண்டும் என்று வழிமுறைகள் கொடுக்கப்படுகிறது.

இந்த சம்பவம் எதனால் நடந்து என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share