சொர்க்கவாசல் திறப்பு : வைணவ கோயில்களில் அலை மோதிய பக்தர்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் வைணவ திருத்தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டில் ஏகாதசி நாளான இன்று, பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.தற்போது தங்க தேரோட்டம் நடைபெற்று வருகிறது உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தங்கத் தேரில் வலம் வருகிறார்.

ADVERTISEMENT

இதேபோல் 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றபடும் சிறப்புகளை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19ம்தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 20ம்தேதி காலை துவங்கியது. தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ஜூன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி பகல்பத்து 9ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு நம்பெருமாள் முத்துக்கொண்டை அலங்காரத்தில், முத்து கபாய், முத்து நேர் கிரீடம், பங்குனி உத்திர பதக்கம், தாயார் பதக்கம், ரங்கூன் அட்டிகை, முத்து அபய ஹஸ்தம், முத்து கர்ண பத்ரம், முத்து திருவடி, 2 வட முத்து மாலை, முத்தங்கி அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு நம்பெருமாள், அர்ஜூன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைந்தார். பகல் 10ஆம் நாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5.45 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா.. ரங்கா.. ரங்கா.. என்ற கோஷங்களுகிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில் நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனை தொடர்ந்து நம்பெருமாள் கோவிந்தா.. கோவிந்தா… கோஷங்களுடன் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்து பக்தி உலாத்தல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்..

மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் சுமார் 3000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வைணவத்திருத்தலங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்ற நிலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது.

சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வழியாக நுழைந்து இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்ற நம்பிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share