எனக்கு வழிகாட்டியவர் விஜய் : கண்கலங்கிய செங்கோட்டையன்

Published On:

| By Kavi

வழி தெரியாமல் நின்ற எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கண்கலங்கி பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், “வழி தெரியாமல் இருந்த போது எனக்கு வழிகாட்டினார் விஜய், நான் இப்போது சொல்கிறேன்., என் உடம்பில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான். தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு பிரான் சொன்னார். இறைவனிடம் கையேந்துகள் அவன் இல்லையென்று சொல்லுவதே இல்லை என்பார்கள்.

கேட்பதை கொடுப்பவனே கிருஷ்ணா, கிருஷ்ணா இந்து மதத்தில் சொல்வார்கள். ஆனால் கேட்காமேலே கொடுக்கக் கூடியவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி தளபதி கிடைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

இன்று காலையில் மலேசியா சென்றிருக்கிறார். 9 என்றாலே வெற்றியின் சின்னம். ஜனவரி 9ம் தேதி படம் வெளியான பிறகு யாரும் வாய் திறக்க முடியாது. இப்படி ஒரு திரைப்படமா, இப்படி ஒரு மாற்றமா என்ற நிலை உருவாகும்” என்று உணர்ச்சி பொங்க பேசினார் செங்கோட்டையன்.

அதுபோன்று, “அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும், வேகம் இருக்காது. ஆனால் ஆர்ப்பரிக்கும் இந்த கூட்டம் த.வெ.க.வின் தலைவர் விஜய் முதல்வராக வரவேண்டும் என்று கூடுகிறது. பெரும்பாலான அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வருபவர்கள் 1 , 2 மணிநேரத்தில் எழுந்து சென்றுவிடுவார்கள். பாதி நாற்காலிகள் காலியாக இருக்கும்.

ADVERTISEMENT

நமது தலைவர்தான் முதல்வராக வேண்டும் என்று இளைஞர்கள் வருகிறார்கள். இந்த கூட்டத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த கூட்டத்தை பார்த்து ஆளும், எதிர்க்கட்சியினர் தேர்தல் களத்தில் நிற்கலாமா? வேண்டாமா? என்ற அச்சத்தில் உள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.

தமிழக அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் கொண்ட செங்கோட்டையன், மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறார். எனினும் அவர் எனக்கு விஜய் வழிகாட்டினார் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share