திருத்தணி தவிர்த்து முருகன் எழுந்தருளி அருள்பாலிக்கும் மற்ற அனைத்து தலங்களிலும் வெகுவிமரிசையாக சூரசம்ஹாரம் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.
ஐப்பசி மாதத்தில் அசுரனான சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த நாளானது ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணி தலம் தவிர முருகன் எழுந்தருளி அருள்பாலிக்கும் மற்ற அனைத்து தலங்களிலும் வெகுவிமரிசையாக இன்று நடைபெற்றது.
குறிப்பாக சூரனை வதம் செய்த இடமாக கருதப்படும் திருச்செந்தூரில் இன்று மாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டிருக்க, அவர்கள் முன்னிலையில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தார். சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக அங்கு நிகழ்த்தப்பட்ட நிலையில் பக்தர்கள் உற்சாக கோஷமெழுப்பி வழிபட்டனர்.
இதேபோல் பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் விமரிசையாக இன்று நடைபெற்றது.
சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் எனக் கருதப்படுவதால், அங்கு சூரசம்ஹாரத்திற்கு பதிலாக அங்கு ’புஷ்பாஞ்சலி’ நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பிற முருகன் கோவில்களிலும் இன்று விமரிசையாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்வை தொடர்ந்து நாளை (அக்டோபர் 27) முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
