டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அல்லது விசாரிக்கப்பட்ட டாக்டர் பிரியங்கா சர்மா குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10-ந் தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர்; 32 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலை நடத்தியது உமர் நபி என்றும் இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு உதவியாக இருந்த கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதாகவும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த டாக்டர் பிரியங்கா சர்மா என்பவர் பெயரும் அடிபட்டு வருகிறது. இந்த பிரியங்கா சர்மா குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கைச் சேர்ந்த மருத்துவ மாணவி பிரியங்கா சர்மா.
- ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்த்நாக்கில் அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்.
- திக்ஹால் என்ற கிராமத்தில் சுகாதார மையத்தில் மருத்துவராகவும் பிரியங்கா சர்மா பணியாற்றி வந்தார்.
- டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ‘ஒயிட் காலர்’ பயங்கரவாதம் என்ற சொற்றொடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது; ஹரியானாவின் அல்ஃபலா பல்கலைக் கழகத்தின் மருத்துவர்கள் பலரும் டெல்லி குண்டு வெடிப்பு சதித் திட்டத்தில் தொடர்புடையவர்கள் என கூறின ஊடகங்கள்
- ஹரியானா அல்ஃபலா பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள் 4 பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சியும் கைது செய்தது; ஆனால் இந்த 4 மருத்துவர்களுக்கும் டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
- இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் அனந்த நாக்கில் பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின; பின்னர் அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது; டெல்லி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கூறப்பட்ட பலரது படங்கள் வெளியான போதும் பிரியங்கா சர்மாவின் போட்டோ இதுவரை வெளியிடப்படவில்லை.
பிரியங்கா சர்மா சிக்கியது எப்படி?
- டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் டாக்டர் அதீல் அகமது ராதர் என்பவருக்கும் தொடர்புள்ளது என்பது குற்றச்சாட்டு; இவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- அதீல் அகமது ராதர், அனந்தநாக் மருத்துவ கல்லூரி முன்னாள் ஊழியர்.
- அதீல் அகமது ராதரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள், அவரது செல்போன் அழைப்புகள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பிரியங்கா சர்மாவுடனான தொடர்பு தெரிய வந்தது.
- இதனடிப்படையில் ஜம்மு காஷ்மீர் அனந்தநாக்கில் பிரியங்கா சர்மா தங்கியிருந்த வாடகை வீட்டுக்குள் பயங்கரவாத தடுப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து கைது செய்தனர்; அதே நேரத்தில் சிலர், கைது செய்யப்படவில்லை- விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என விளக்கம் தருகின்றனர்.
- பிரியங்கா சர்மா வீட்டில் இருந்து செல்போன், சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- பிரியங்கா சர்மாவின் பின்னணி, செல்போன் அழைப்புகள் ஆகியவை தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
- தற்போதுவரை பிரியங்கா சர்மா குறித்து கூடுதல் தகவல்களை விசாரணை அமைப்புகள் முழுமையாக வெளியிடவில்லை.
