மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய மனு மீது உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ந் தேதி தீர்ப்பளிக்கிறது.
தமிழக ஆளுநர், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது. மாநிலங்களின் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது 1 மாத காலத்திற்குள்ளும், குடியரசுத் தலைவர் 3 மாத காலத்திற்குள்ளும் முடிவெடுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு மாநில உரிமைகள் வரலாற்றில் மைல் கல்லாகப் போற்றப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் ரவியால் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் காலக்கெடு தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் 14 முக்கிய கேள்விகளை எழுப்பினார். அதில், இப்படி ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர்கள், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் எல்லைகள் என்ன? ஆளுநர்- குடியரசுத் தலைவர் நடவடிக்கைகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதா? உள்ளிட்ட கேள்விகளை திரவுபதி முர்மு எழுப்பி இருந்தார். இது தொடர்பான விசாரணையில் பல்வேறு முக்கிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதேநேரத்தில் காலக்கெடு விதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
தற்போது குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் மனு மீது உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ந் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.
