தமிழக அரசு வழக்கின் தீர்ப்பு மீது ஜனாதிபதியின் 14 கேள்விகள்- உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Supreme Court

தமிழக அரசு வழக்கின் தீர்ப்பு மீது ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பிய விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருந்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

இந்தத் தீர்ப்பை துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த தீர்ப்பின் மீது 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளில் ஆளுநர்கள், ஜனாதிபதிக்கான அதிகாரம் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவுகளை சுட்டிக்காட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு கேள்வி எழுப்பி இருந்தார்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று ஜூலை 22-ந் தேதி விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை ந்நீதிபதி பிஆர் கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பிஎஸ் நரசிம்ஹா, ஏஎஸ் சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.

ADVERTISEMENT

இன்றைய விசாரணையின் போது, அட்டர்னி ஜெனரல் ஆர். வேங்கடரமணியை நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அப்போது மத்திய அரசு சார்பாக தாம் ஆஜராவதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலேயே உள்ளன என சுட்டிக்காட்டினார். கேரளா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.

இந்த வழக்கில் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8-ந் தேதி அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களைக் கையாளும் போது மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறார்.
  • மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்த ஆளுநர் தமக்கான வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.
  • இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது அல்லது சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்புவது என்கிற நடவடிக்கைகள் மூலம் மசோதாக்களை ஆளுநரால் செயலிழக்க செய்ய முடியாது.
  • ஆளுநர், மசோதாவை சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பும் நிலையில் அந்த மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2-வது முறையாக ஒப்புதலுக்கு அனுப்பும் போது, அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்க முடியாது.
  • அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 200, 201-ன் கீழ் ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் என்ன?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீது ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள்:

  • ஆளுநருக்கு மசோதாவை அனுப்பி வைத்தால் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கான சட்ட ரீதியான வாய்ப்புகள் எவை?
  • ஆளுநருக்கு அரசியல் சாசனப் பிரிவு 200 தந்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்த அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளை பெற வேண்டுமா?
  • அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், ஆளுநருக்கு உள்ள சட்டப்படியான வீட்டோ உரிமை ஏற்றுக் கொள்ளத்தக்கதா?
  • ஆளுநரின் முடிவுகளை ஆய்வு செய்ய அரசியல் சாசனத்தின் 361வது பிரிவு தடை விதிக்கிறதா?
  • அரசியல் சாசனத்தில் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு காலக்கெடு விதிக்கவில்லை; ஆகையால் உச்சநீதிமன்றத்தால் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா?
  • அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின் கீழ் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு இருக்கக் கூடிய வீட்டோ உரிமை ஏற்கத்தக்கதா?
  • ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனத்தில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்படவில்லை. அதனால் உச்சநீதிமன்றத்தால் காலக்கெடு நிர்ணயம் செய்ய இயலுமா?
  • ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி ஆலோசனையை கேட்க வேண்டுமா?
  • அரசியல் சாசனத்தின் 200, 201-வது பிரிவுகளின் கீழ் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் ஜனாதிபதி முடிவு எடுக்கும் முன்னரே மசோதா சட்டமாகிவிடுமா?
  • ஆளுநர்- ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டிய உத்தரவுகளை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் பிறபிக்க முடியுமா?
  • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் அது சட்டமாகிவிடுமா?
  • அரசியல் சாசனம் தொடர்பான கேள்விகளை, 145-3 பிரிவின் கீழ், 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?
  • மத்திய – மாநில அரசுகள் இடையிலான பிரச்சனையில், அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின் கீழ் சிறப்பு வழக்கு தொடருவதைத் தவிர உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு தடுக்கப்படுகிறதா?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share