தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26-ந்தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
⁰தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘மோன்தா புயல்’, இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மோன்தா புயலின் தாக்கத்தால் ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிஜாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது
தமிழகத்தை பொறுத்தவரை ‘மோன்தா’ புயலின் தாக்கம் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.
புயல் எச்சரிக்கை கூண்டு
பொதுவாக புயல் வரும் காலங்களில் வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தலின் அடிப்படையில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். புயல் எச்சரிக்கை குறித்த ஒவ்வொரு எண்களுக்குமான முழுமையான விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.
எண் 1: புயல் உருவாகக் கூடிய திடீர் காற்றோடு கூடிய மழைக்கு வாய்ப்புள்ள வானிலை பகுதிகள் ஒன்று ஏற்றப்படும்.
எண் 2: புயல் உருவானதை எச்சரிக்கும் வகையில் ஏற்றப்படும்.
எண் 3: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என பொருள்படும்.
எண் 4: மிக அதிக முன்னெச்சரிக்கை எடுக்கும் அளவுக்கு தீங்கு விளைவிக்காது ஆனால் புயலால் துறைமுகம் அச்சுறுத்தப்படலாம் என அர்த்தம்.
எண் 5: துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுகம் கடுமையான பாதிப்புகளுக்கு உட்படலாம் என்று பொருள்படும்.
எண் 6: துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும். என எதிர்பார்க்கலாம். துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம். அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறலாம்.
எண் 7: புயலினால் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படலாம் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பொருள்
எண் 8 : பெரிய அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இடது பக்கமாக கரையைக் கடக்கும். கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்பட வாய்ப்புகள் உள்ளது.
எண் 9: பெரிய அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வலது பக்கமாக கரையைக் கடக்கும், கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதற்காக எச்சரிக்கை
எண் 10 : பெரிய அபாயம் ஏற்படலாம். துறைமுகம் அல்லது அருகே புயல் கடந்து செல்லுமென எதிர்பார்க்கப்படுவதோடு துறைமுகம் கடுமையாக வானிலைக்கு உட்படலாம் என அர்த்தம்.
எண் 11 : இந்த சூழலில் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம். மோசமான வானிலையால் கேடும் விளையலாம். வானிலை மையத்தோடு தகவல் தொடர்பு இல்லாமல் போகலாம் என்பதை குறிக்கும்.
