வங்க கடலில் உருவான டிட்வா புயல் தற்போது சென்னையில் இருந்து 400 கிமீ தொலைவில் நகர்ந்து வருகிறது.
இலங்கை கடல் பகுதியில் உருவான டிட்வா புயலானது அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் 56 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் உயிரிழப்புகள் இரு மடங்கு அதிகமாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இலங்கையின் வடபகுதியை கடந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது டிட்வா புயல். இன்று காலை வரை மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகருகிறது. டிட்வா புயலானது சென்னையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 400 கிமீ தொலைவில் நகர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் மழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாகையில் 7 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சென்னையில் முன்னெச்சரிக்கையாக 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
