நாளைக்கு சிம்பு கூட வருவார்.. திமுக அதிமுகவுக்கு இடையில் தான் போட்டி – சி.வி.சண்முகம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சினிமா தியேட்டரில் வேண்டுமானால் விசில் அடிக்கலாம். பஸ்ஸை நிறுத்த விசில் அடிக்கலாம். இரட்டை இலைக்கு வாக்கு போடுவதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நாம் பணியாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும். சோர்ந்து விடக் கூடாது. நாம் ஜெயித்து விடுவோம் என்று அஜாக்கிரதையாக இருக்க கூடாது நமக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.

ADVERTISEMENT

அவர் வந்துட்டாரே. இவரு வந்துட்டா.. என்று இருக்க கூடாது. ஏன் மூப்பனார் வந்தார். போனார். வைகோ வந்தார். வந்த வேகத்திலேயே புயலாகப் போய்விட்டார். அதற்கு பிறகு விஜயகாந்த் வந்தார்.. போய்விட்டார். இன்றைக்கு திமுகவிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாரே.. கமலஹாசன் வந்தார். உடனே சொன்னாங்க மாற்றுச் சக்தி வந்துவிட்டது. தமிழ்நாட்டுக்கே டார்ச் லைட் அடித்து விட்டார். ஒளி கொடுத்துட்டார் என்றார்கள்.

தமிழ்நாட்டுக்கே மாற்றத்தை உருவாக்க வந்த கமலஹாசன் கடைசியில் அவர் தொகுதியிலேயே தோற்றுப் போய்விட்டார். அவராலேயே ஜெயிக்க முடியாது.

ADVERTISEMENT

இப்பவும் பல பேர் வந்திருக்கிறார்கள். சினிமா தியேட்டரில் வேண்டுமானால் விசில் அடிக்கலாம். பஸ்ஸை நிறுத்துவதற்கு விசில் அடிக்கலாம். அதிமுக இரட்டை இலைக்கு வாக்கு போடுவதை எவராலும், எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. பல ஜாம்பவான்களைப் பார்த்த இயக்கம் இந்த அதிமுக.

ஆகவே யார் வந்தாலும் சரி. இன்றைக்கு இவர் வருவார். நாளைக்கு இன்னொருவர் வருவார்.. நாளைக்கு சிம்பு கூட வருவார்.

ADVERTISEMENT

ஒவ்வொரு பத்தாண்டு காலத்துக்கும் ஒரு ஒரு கட்சி முளைக்கும். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். நமக்கு எதிரி யார்? இந்த இயக்கம் என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது? தீய சக்தி தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share