திருப்புவனம் போலீசார் விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. Ajithkumar Lockup death
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார், கோவில் காவலாளியாக பணியாற்றினார். நகை திருட்டு புகார் தொடர்பாக அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் கடுமையாகத் தாக்கி விசாரித்தனர். இந்த விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்தார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அஜித்குமார் மரணம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்; மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியை தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது வருத்தத்தை தெரிவித்து அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன ஆணையை, அமைச்சர் பெரியகருப்பன் இன்று அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரிடம் வழங்கினார்.