நா.மணி
மருத்துவர் ஆனந்த் குமார் ஐஏஎஸ் அவர்களின், “க்யூரியாசிட்டியும் சிம்பிளிசிட்டியும்” (Curiosity and Simplicity- Book Review) நூல் மதிப்புரை
நூலின் தலைப்பு “க்யூரியாசிட்டியும் சிம்ப்ளிசிட்டியும்”. பக்கங்கள் 122. பத்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. நூலின் பத்து பாகங்களும் தைவான் பயணம், திருச்சி–தஞ்சை அனுபவங்கள், உணவுத் தொழில் நுட்பம், பெரிய கோவில், இண்டர்வியூ, தத்துவம், பூனைகள், க்யூரியாசிட்டியும் சிம்ப்ளிசிட்டியும் எனப் பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.
முதலில் பார்க்கும்போது இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி சம்பவங்களின் கோர்வையாகத் தோன்றும். ஆனால் அவற்றுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத நூலிழை இருக்கிறது. இதற்குள் ஒரு தத்துவ அடிநாதம் இருக்கிறது. அதுவே நூலாசிரியரையும் நூலையும் இயக்கும் உந்து விசையாக இருந்து இந்த நூலைத் தந்திருக்கிறது.
வெற்றி என்பது என்ன? வெற்றியை எப்படி அணுகுவது? வெற்றியை எப்படி எடுத்துக் கொள்வது? வெற்றி என்பது உண்மையில் வெற்றியா? வெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி என்ன? வெற்றியையும் தோல்வியையும் சமமாக நோக்கும் பார்வையை எப்படி பெறுவது? போன்ற கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்கிறது. நாம் ஒன்றைத் தேடுவதால்தான் அது கிடைக்கிறதா? தானாக ஒளிர்ந்து கொண்டிருப்பதை நாம் கண்டடைகிறோமா? என்பது இந்த நூலின் சிறந்த தத்துவ விசாரணை.
“க்யூரியாசிட்டியும் சிம்ப்ளிசிட்டியும்” என்கிற இந்த நூல், ஒரு வகை பயண அனுபவக் குறிப்பு அல்லது தொகுப்பு போல் தெரியும். ஆனால் நினைவோடையில் நீந்தும் மீன்கள் பற்றி அது பேசுகிறது. நினைவுகளுக்குள் தொக்கி நிற்கும் சந்தேகங்களின் சாட்சியமாக நிற்கிறது. தேடல் மீதான ஒரு தத்துவ விசாரணையை நிகழ்த்துகிறது.
நூலின் தலைப்பு “க்யூரியாசிட்டியும் சிம்ப்ளிசிட்டியும்”. இந்த க்யூரியாசிட்டி என்பது என்ன? மீண்டும் மீண்டும் அவதானித்து, வாழ்வை உற்று நோக்கும் கண்ணாடி. ஒரு வார்த்தையில் சொல்வதானால், அதன் நதி மூலம், ரிஷி மூலம் காணும் முயற்சி. வார்த்தையில் பின்னிப் பிணைந்து கிடக்கும் பொருளைத் தேடிக் கண்டடையும் மனம். ஒரு ஊரை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதியையும் அந்தத்தையும் ஆராயும் முயற்சி.
நூலாசிரியர் தனது அனுபவங்களை மீண்டும் மீண்டும் உரசிப் பார்க்கிறார். உரசலுக்குள்ளும் ஒரு ஆராய்ச்சியை நிகழ்த்துகிறார்.
க்யூரியாசிட்டி என எதனைச் சுருக்கமாகச் சொல்ல வருகிறார் ஆனந்தகுமார் சார்? அறிவு என்பது பெருக்கிக் கொண்டு செல்வதற்கல்ல; சுயவிமர்சனத்திற்காக. அந்த சுயவிமர்சனத்தை உரிய விதத்தில் செய்யத் தெரிந்தால், புரிந்து கொண்டால், அதில் உரிய பயிற்சி எடுத்துக் கொண்டால், அதுவே அனைத்திற்கும் மாமருந்தாக அமையும் என்பதை நூலின் வழியாக உணர்த்துகிறார்.
இந்த நூல் வழியாக சிம்ப்ளிசிட்டி என்று எதனைச் சொல்கிறார்? “மனிதன் நினைவுகளின் தொகுப்பை அதிகரித்துக் கொண்டு செல்வதா? அல்லது நினைவுகளே அற்று வாழ்வதா?” “ஒருவர் படித்தும் படிக்காத நிலையில் இருந்தால் என்ன படிக்க வேண்டும்?” இவற்றை உரையாடல் வழியாக உன்னதமாக எடுத்துச் சொல்கிறார். இதற்கெல்லாம் பதில் என்ன? “எல்லாம் நமக்குள்ளே இருக்கிறது என்பதை கற்பதே தற்போதைய கற்றலின் மையம்” என்பதை உணரச்செய்கிறார். இந்தப் புள்ளிதான் நூலின் உச்சம்.
இந்த நூல் ஓர் சிந்தனைச் சிதறல் நிறைந்த தொகுப்பு அல்ல; இது அறத்தின்பால் நிகழ்த்தும் உரையாடல் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
இந்த நூலின் சிறப்பு அம்சங்கள் என்ன? உரையாடல் பாணியில் அமைந்த சிறந்த நூல். சிந்தனையைத் தூண்டும் பக்க அமைப்பு. வாசிப்பைத் தன் வசம் ஆக்கி, சிரித்துக்கொண்டே சிந்தனைகளை உள்வாங்கும்படியான எழுத்து நடை. தன்னை முன்னிலைப்படுத்தி, சுயவிமர்சனத் திறன்களை வளர்க்கும் நூல்.
நினைவுகள் மீதான சிந்தனை ஓட்டமே நூலுக்கு சிகரமாய் விளங்குகிறது.
“நினைவுகளே இல்லாமல் நிகழ்கிற இந்தத் தருணத்தில் மட்டுமே வாழ்வது வாழ்க்கையா?” என்று நூலாசிரியர் வாசகனைப் பார்த்து கேட்பது, வாசகனை வாசகனுக்குள் அழைத்துச் செல்கிறது.
இந்த நூலில் எழுத்தின் போக்கு ஒரு நேர்கோட்டில் செல்வதில்லை. இது ஒரு தனிச்சிறப்பு. “வாழ்க்கை நேர்கோட்டில் செல்வதில்லை” என்பதை நூல் சொல்லாமல் சொல்கிறது.
இந்த நூலை பயண இலக்கியம் என்று கூறலாம். ஒருவகை சுயசரிதைத் துளி என்று கூறலாம். தத்துவத் தேடல் எனவும் கூறலாம். நுண்கதைகளின் தொகுப்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த நூல் ஆனந்தகுமார் அவர்களின் உள்ளார்ந்த தேடலை உரக்கச் சொல்ல உதவும் நூல்.
அதிகாரத்தின் கம்பீரத்தை அகற்றி, உண்மையான மனித மன அழகை வெளிக்காட்டும் நூல். “எளிமை என்பதே மனிதம்” என்று அழகாக பதிவு செய்கிறது.
வாசித்துவிட்டு ஒதுக்கி வைத்து அடுத்த வேலையைப் பார்க்கும் புத்தகம் அல்ல இது. வாசகனை நிறுத்தி, நிமிர வைத்து, சிந்திக்க வைக்கிறது. “வாழ்க்கையில் ஒளியைத் தானே தேடுகிறீர்களா? அப்படியானால் தேடுதலை நிறுத்தி, அமைதியில் ஆழ்ந்து விடுங்கள்” என்கிறது நூல். “வாழ்க்கையை வெல்ல வேண்டுமா? வாழ்வோடு இணைந்து விளையாடு” எனக் கற்றுக் கொடுக்கிறது இந்த நூல்.
கட்டுரையாளர்

நா.மணி, பேராசிரியர். மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
