தயிர் (Curd), மோர் (Buttermilk) இவை இரண்டில் எது உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தயிர் மட்டும் மோர் இரண்டும் இந்தியாவின் முக்கிய உணவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக மதிய உணவில் பலருக்கும் தயிர் அல்லது மோர் கட்டாயம் இருக்க வேண்டும். பலரும் தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். கோடைக் காலங்களில் தயிர், மோர் ஆகியவை குளிர்ச்சியூட்டுவதோடு, செரிமானத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதே சமயம் தயிர் அல்லது மோர் இரண்டில் எது சிறந்தது, எதை சாப்பிடுவது அதிக நன்மைகளைத் தரும் என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கலாம். தயிர், மோர் இடையே உள்ள வேறுபாடுகள், எதை எப்படி தேர்வு செய்து சாப்பிடலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தயிரில் உள்ள நன்மைகள் (benefits of curd):
பாலை மதிப்பு கூட்டுவதன் மூலம் அடர்த்தியான, சத்தான மற்றும் நல்ல தயிர் கிடைக்கிறது. அதுபோலவே அதிகளவு ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. தயிரில் அதிகளவு புரதச்சத்துக்கள் உள்ளதால், இவை தசை வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது உங்களை நீண்ட நேரம் வயிறு முழுமையடைந்த உணர்வுடன் வைத்திருக்கும். எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவாக தயிர் உள்ளது. தயிரில் உள்ள கால்சியம் எலும்புகள், பற்களை வலுப்படுத்துகிறது. அத்துடன் அமிலத்தன்மை மற்றும் வாயுப் பிரச்னைகளை குறைக்கவும் உதவுகிறது.
மோரில் உள்ள நன்மைகள் (benefits of buttermilk):
மோர் லேசானது, குளிர்ச்சியானது மற்றும் செரிமானத்திற்கு சிறந்ததாக உள்ளது. தயிருடன் தண்ணீரை கரைத்து மோர் தயாரிக்கப்படுகிறது. மோரின் சுவையை அதிகரிக்க உப்பு, வறுத்த சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்க்கலாம்.
மோர் கோடைக் காலத்தில் உடலை குளிர்விக்க பயன்படுகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கல், அமிலத்தன்மையை குறைக்கிறது. மோரில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் எடையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. எலக்ட்ரோலைட்டுகள் மோரில் நிறைந்துள்ளதால் நீரிழப்பை போக்க உதவி புரிகிறது. கனமான உணவுகள் சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது வயிற்றை லேசாக வைத்திருக்க உதவுகிறது.
எடை குறைக்க விரும்புபவர்கள் அசிடிட்டியால் அவதியடைபவர்கள் கோடையில் வறுத்த உணவு சாப்பிட்டால், அதற்குப் பிறகு மோர் குடிக்கலாம்.
தயிர், மோர் எதில் அதிக நன்மை பயக்கிறது (Curd vs buttermilk Which is best):
உங்கள் தேவையை பொறுத்தே எதனை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உள்ளது. புரதம், வயிறு நிறைவடைய உதவும் உணவு உங்களுக்கு தேவை எனில் தயிரை நீங்கள் சாப்பிடலாம். லேசான, ஜீரணமாக எளிதான, குளிர்ச்சியான உணவு வேண்டும் என்றால் மோர் குடிக்கலாம். இரண்டும் உடலுக்கு நல்லதுதான். சரியான நேரத்தையும், தேவையையும் பொறுத்து இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து சாப்பிடலாம்.
