திமுகவை வீழ்த்தும் வகையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு தவெக நிர்வாகி நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
பிரியப்பட்டால் தவெக கூட்டணியில் வந்து இணைந்து கொள்ளலாம் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு இபிஎஸ், ‘ அவர் அவருடைய கட்சி கருத்தை சொல்லி இருக்கிறார். நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், மக்கள் விரோத திமுக அரசை அகற்றக் கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களோடு தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம்’ என்று கூறினார்.
திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் திமுக தீய சக்தி என்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்று கூறி இருப்பது தமிழக அரசியலில் பேசு பொருளாகியிருக்கிறது.
இது தொடர்பாக தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் மாமல்லபுரத்தில் இன்று (டிசம்பர் 22) செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ‘ அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கை சொன்னார். இந்த நிலையில் அவருக்கு நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை….
எங்களுடைய தலைவரை முதல்வராக்க யார் யாரெல்லாம் ஒத்த கருத்துடன் இருக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி.
அதுபோன்று அரசியல் எதிரி கொள்கை எதிரிகளுடன் கூட்டணி இல்லை என்றும் சொல்லிவிட்டோம்.
அடுத்த பொதுக்கூட்டம் தொடர்பாக அனுமதியும் இடமும் கேட்கப்பட்டு வருகிறது. அதன்படி அறிவிப்பு வெளியாகும்.
விருப்ப மனு வாங்குவதற்கு ஒரு வாரம் போதும். இன்னும் நாட்கள் இருக்கிறது’ என்று கூறினார்.
ஆதவ் அதர்ஜுனா டிசம்பர் 27ஆம் தேதி ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு… இதுபோன்று ஏதாவது இருந்தால் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பதிலளித்தார்..
