கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு 77 மீட்டர் நீளத்தில் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே கடல் நடுவில் இருக்கும் ஒரே கண்ணாடி பாலம் இதுதான்.
விவேகானந்தர் பாறையில் இருந்து படகு மூலம் செல்வதற்கு பதிலாக கடல் அழகை ரசித்துக்கொண்டே இந்த கண்ணாடி இழைப் பாலத்தில் நடந்து செல்வது ரம்மியமாகவும் அதேசமயம் த்ரில்லிங்காவும் இருப்பதாக சுற்றுலா பயணிகள் கூறி வந்தனர்.
இந்த பாலம் திறக்கப்பட்டு இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஆபத்தை உணராத சில சுற்றுலாப் பயணிகள், விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு அருகே நின்று செஃபி எடுக்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அங்கே அட்டைகளைப் போட்டு மூடி வைத்திருக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கூறுகையில், “பராமரிப்பு பணியின்போது சுத்தியல் விழுந்ததில் சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. சிறிய சிராய்ப்பை சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கண்ணாடி இழைப் பாலம் உறுதியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் அச்சமடைய தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று, விரிசல் ஏற்பட்டிருக்கும் பகுதியை விரைவில் சரி செய்ய வேண்டும் என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.