ADVERTISEMENT

நீதிபதி ப.உ.செம்மல் மீதான நடவடிக்கையை கைவிட CPI(ML) வலியுறுத்தல்

Published On:

| By Mathi

Justice P. U. Chemmal

நீதிபதி ப.உ.செம்மல் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்; இந்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்று CPI(ML) கட்சி வலியுறுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) 12வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ADVERTISEMENT

தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து, “தெற்கில் ஒரு அயோத்தியை உருவாக்குவோம்” என்ற சூழ்ச்சித் திட்டத்துடன், பாஜக, இந்துமுன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஒரு மதவெறுப்பு அணிதிரட்டலை துவக்கி, அதற்குப் பின்னர், உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சாமிநாதன் வழங்கிய தீர்ப்பை எடுத்துக்கொண்டு மிகப்பெரிய கலவரத்தை உருவாக்கும் திட்டத்துடன் பணியாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் சங்கப் பரிவாரம் மேற்கொள்ளும் அனைத்து வகையான சதித் திட்டங்களையும் முறியடிக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அணிதிரண்டு நிற்க வேண்டிய பாசிச எதிர்ப்பு அரசியல் கடமை நிலவுகிற தருணத்தில்…..தமிழக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என சிபிஎம்எல் கட்சியின் மாநில மாநாடு முன்வைக்கிறது.

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புர, நகர்ப்புர ஏழை மக்களின், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத வீடு – வீட்டுமனைப் பட்டா கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உடனடியாக மீட்டுத் திருப்பி வழங்கிட வேண்டும். கோவில், மடங்கள் மற்றும் பிற சமய நிறுவனங்கள் வசமுள்ள பெரும் நிலவுடமைகளை அரசு கையகப்படுத்தி குத்தகை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.

ஆக்கிரமித்து வைத்துள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மீட்கப்பட வேண்டும்; பினாமி பெயரில், நிலவுடமை சக்திகள், எஸ்டேட்கள் சட்டவிரோதமாக கையில் வைத்திருக்கும், உச்சவரம்பு சட்டத்திற்கு உபரியான surplus நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். அதோடு கூட, இலட்சக்கணக்கான ஏக்கர் அரசு தரிசு நிலங்களையும் ஒதுக்கீடு செய்து, இலட்சக்கணக்கான நிலமற்ற
விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் நுண்கடன்கள் உள்ளிட்ட தனியார் கடன் சுமைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், தமிழ்நாட்டில் கடன் பிரச்சினை தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, ஏழைகள் மீதுள்ள நுண்கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும், தமிழ்நாட்டு ஏழை மக்களுக்கு, அவர்களுடைய மீளாக் கடனிலிருந்து விடுதலை அளிக்கும் வகையில், தமிழ்நாட்டின் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25,000
வழங்கிட வேண்டும்.

சென்னையில் கடந்த 135 நாட்களாக போராடிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம், தமிழ்நாடு முழுவதுமுள்ள தூய்மைக் காவலர்களுக்கு குறைந்தபட்ச சட்டப்படியான சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

தமிழக அரசு, போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டுவிட்டு, தமிழ்நாடு முழுவதுமுள்ள உழைப்போர் உரிமை இயக்கம் உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகளை அழைத்து, இக் கோரிக்கைகள் மீது உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.

ADVERTISEMENT

ஆபத்தான தொழில்களில் பெண் தொழிலாளரை ஈடுபடுத்தும், மாநில தொழிற்சாலை விதிகளில் மாநில அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்.

கோவை பிரிக்கால் தொழிற்சாலைப் போராட்டத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சுமார் பத்தாண்டுகளாக சிறையில் இருக்கும் தொழிலாளர் தலைவர்கள் இராமமூர்த்தி, மணிவண்ணன் இருவரையும் உடனே
விடுதலை செய்திட வேண்டும்.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை நாசகரமாக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் போராடினர், உயிரிழந்தனர். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக இலட்சக்கணக்கான கிராமப்புற மக்கள் எழுச்சியுடன் போராடினர், தடுத்து நிறுத்தினர். கூடங்குளம் அணுசக்தி உலைகள், இன்றும் சுற்றுச்சூழலுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக எழுந்து நிற்கின்றன. தமிழ்நாடு கடற்கரை நெடுக உள்நாட்டிலும், கடற்பகுதியிலும் ஹைட்ரோகார்பன் கிணறுகள், மின்திட்டங்கள் எனச் சுற்றுச்சூழலுக்கு விரோதமான பல்வேறு கார்ப்பரேட் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும், கனிமவளக் கொள்ளைகள் பெரும் அபாயமாக உருவாகியுள்ளன; காற்று, நிலத்தடி நீர், விவசாயத்தை பாழ்படுத்துகின்றன.
தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் விரோத, கார்ப்பரேட் பெருந்திட்டங்கள், ஆலைகள் மற்றும் கனிமசுரங்கத் திட்டங்களை அனுமதிக்க கூடாது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போராடியவர்கள் மீது, இதுவரை போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்.

சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு ஆணையத்தை அமைத்திருப்பது, தேர்தல்கால அணுகுமுறையாக மாறிவிடாமல், ஆணையத்திடம் விரைந்து அறிக்கை பெற்று தேர்தலுக்கு முன்பே, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.

கரூர் கூட்ட நெரிசல் – உயிரிழப்புகளின் தொடர்ச்சியாக, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது என்ற பேரால், தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அரசியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக, ஜனநாயகத்தை மறுப்பதாக மாறிவிடக்கூடாது. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிற வகையில் அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகளையும் அழைத்துப் பேசி பொருத்தமான விதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்கிட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ப.உ.செம்மல் மீதான நடவடிக்கைகளை கைவிட்டு, பணியிடை நீக்க உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share