இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சலசலப்பு- மூத்த தலைவர் சி.மகேந்திரன் அதிருப்தி!

Published On:

| By Mathi

CPI Mahendran

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அதிருப்தி குரல் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ் கட்சியின் செயல்பாடுகளில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் சி.மகேந்திரன் விலகியிருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமது முக நூல் பக்கத்தில், “சுயநலத்திற்காக சிலரை தூக்கிப் பிடிப்பதும், சிலரை தூக்கி எறிவது, நீங்கள் தூக்கிப் பிடித்து செங்கொடிக்கு செய்யும் துரோகம் என்பதை எப்பொழுதுதான் உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள்? இது எல்லோருக்கும் அல்ல சிலருக்கு மட்டும்” என சி.மகேந்திரன் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

சி.மகேந்திரனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பி இருக்கிறது. மிக மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான சி.மகேந்திரனின் இந்த குமுறல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சி.மகேந்திரனை தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது, “கால வெள்ளத்தில் கம்யூனிஸ்டுகள் மாறிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக மத்தியத்துவம் அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட ஜனநாயகம், கம்யூனிஸ்டுகளின் முக்கிய பண்பு. பொதுவாகவே கம்யூனிஸ்டுகளிடம் இந்த பண்பு மீறல் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகமாகிவிட்டது.

ADVERTISEMENT

கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் சக தோழர்களை சுயநலத்துடன் அணுகுதல் கூடாது; சக தோழர்கள் மீது விருப்பு வெறுப்பை காட்டக் கூடாது; மனதால் கூட ஒரு சக தோழரை இழிவுபடுத்தக் கூடாது. இத்தகைய பண்புகள் இருந்தால் அடுத்த கட்ட அரசியலை முன்னெடுக்க முடியாமல் போய்விடும்; கட்சியின் உட்கட்டமைப்பும் வலுவிழந்து போய்விடும்.

இடைக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் கோட்பாடற்ற முறையில் கோஷ்டிகளை அமைத்தல், கோஷ்டிகளை உருவாக்குதல், கோஷ்டிகள் மாறிக் கொள்ளுதல் என்கிற போக்கும் அதிகரித்துவிட்டது.

ADVERTISEMENT

கம்யூனிஸ்ட் கட்சியை ஜனநாயகப்படுத்த வேண்டும்; மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்கிற மனக் குமுறலையே என் உணர்வுகளாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக முன் வைக்காமல், கோட்பாடு ரீதியாகவே இந்த பிரச்சனையை பேசுகிறேன் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share