தமிழகத்தையே உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட 3 பேரையும் வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர்கள் காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். இதையடுத்து காவல் துறையினர் 3 பேரையும் காலில் சுட்டு பிடித்தனர்.
இதில் காயமடைந்த தவசி, கருப்பசாமி , காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் பொது பிரிவிற்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவில் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற JM 2 நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனைக்கு நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் நவம்பர் 19 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறை பிரிவிற்கு மாற்றப்பட உள்ளனர்.
