மதுரை மாநகராட்சியில் பிரதான கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து மதிப்பிட்டதில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் சொத்து வரி மறு ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல முக்கிய கட்டிடங்களுக்கு சொத்து வரி குறைத்து மதிப்பிடப்பட்டதன் மூலம் சுமார் ரூ.200 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து மண்டல தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதுகுறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ரவி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு முறையான வரி செலுத்தப்படவில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஆளும் கட்சி தரப்பினர் சம்பந்தபட்டிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரகதிரவன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் வாதிட்டனர். அப்போது, கடந்த 10 ஆண்டு கால சொத்து வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய உதவி ஆணையர் (வருவாய்) தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கைது நடவடிக்கை தொடரும், முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மகேந்திரன், மதுரை மாநகராட்சி ஆணையர் வரி விதிப்பு முறைகேடு நடைபெற்ற காலத்தை குறிப்பிட்டு புகார் அளித்துள்ள நிலையில் முதல் தகவல் அறிக்கை, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தப்பிக்க வைக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சியில் நடந்த சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக விசாரிக்க போவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது விசாரணையை இழுத்தடிக்கும் போக்கு என தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், “முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக விசாரித்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை? முறைகேடு எந்த ஆண்டில் நடைபெற்றாலும் விசாரிக்க வேண்டும். மக்கள் பணம் பாதுகாக்கப்பட வேண்டும். சொத்து வரி மறு ஆய்வை பொறுத்தவரை முறையாகவும் சட்டப்பூர்வமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். தேவை என்றால் புதிய வழக்கு பதிவு செய்து கொள்ளலாம்” என்றும் கூறினர்.
மேலும் ”மதுரை மாநகராட்சி கள ஆய்வு, சொத்துக்களை அளவீடு செய்வது உள்பட சொத்து வரி மறு ஆய்வு தொடர்பான செயல் திட்டத்தை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.