திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், சிக்கந்தர் தர்கா என இரண்டு வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழிகளை பலியிடக்கூடாது, மலையில் அசைவம் சாப்பிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 24ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வு மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது.
சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதிக்க கோரிய மனுக்களை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவிக்கப்பட்ட உத்தரவுக்கு முரண்படுவதாக நீதிபதி ஸ்ரீமதி கூறினார்.
இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
தனி நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கை விசாரித்து இன்று (அக்டோபர் 10) தீர்ப்பு வழங்கினார்.
அப்போது திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை வதித்து, இது குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.
மேலும் இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார்.
அதுபோன்று இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.