திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் நிவேதித் ஆல்வா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று பிப்ரவரி 25-ந் தேதி செய்தியாளர்களிடம் நிவேதித் ஆல்வா கூறியதாவது: திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது பொதுவெளியில் உள்ள ஒரு விஷயம் தான்.
நாங்கள் கடந்த டிசம்பர் மாதமே பேச்சுவார்த்தைக் குழுவை அறிவித்திருந்தோம். முதற்கட்ட பேச்சுவார்த்தையும் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.
அண்மையில் திமுக தரப்பிலும் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், வேட்பாளர் தேர்வு குழு தலைவர் டி.எஸ். சிங் தியோ ஆகியோர் சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இனி அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இது குறித்த தகவல்கள் வரும்போது உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
நான் ஏற்கனவே சொன்னது போல, பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே எத்தனை தொகுதிகள் என்பது குறித்துப் பிறகு உங்களுக்குத் தெரிவிக்கிறோம். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள், மூத்த தலைவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து டெல்லியில் காங்கிரஸ் மேலிடத்தைச் சந்தித்தபோது, கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் கட்சியின் மேலிடமே எடுக்கட்டும் என்று ஒருமனதாக விட்டுவிட்டனர். நாங்கள் அதையே பின்பற்றுகிறோம்.
எனவே, பேச்சுவார்த்தைகள் முன்னேற முன்னேற அவ்வப்போது உங்களுக்குத் தகவல்களைத் தருகிறோம். திமுகவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு நிவேதித் ஆல்வா தெரிவித்தார்.
