இளையராஜாவின் காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 28) மறுப்புத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இசையமைப்பாளர் இளையராஜா 1500க்கு மேற்பட்ட படங்களில் 7500க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் அவரது படைப்பை அனுமதியில்லாமல் பயன்படுத்தும் பட நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்து வருகிறார்.

இந்தநிலையில், சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இளையராஜா மியூசிக் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (IMMP) நிறுவனத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
அதில், சோனி நிறுவனத்தின் பதிப்புரிமையை இளையராஜாவின் IMMP நிறுவனம் மீறியதாக கூறியிருந்தது. மேலும், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் மற்றும் எக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்திடமிருந்து சோனி வாங்கிய 536 படைப்புகளைப் பயன்படுத்துவதற்கு இளையராஜா நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். தாங்கள் வாங்கிய படைப்புகளில் 228 ஆல்பங்கள் யூடியூபில் பதிவேற்றப்பட்டு, அது IMMP நிறுவனத்தால் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படுவதை சோனி நிறுவனம் உறுதி செய்தது. அதனால் சோனியின் பதிப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளையராஜா நிறுவனம் பதிப்புரிமையை மீறியதற்காக சோனி நிறுவனத்துக்கு ஒன்றரை கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற இளையராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 28) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் , நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இளையராஜா தரப்பில், சென்னையில் காப்புரிமை தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், ஒரே தன்மை கொண்ட வழக்குகள் இரு நீதிமன்றங்களில் நடப்பது முரண்பாடான தீர்ப்புக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இளையராஜா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.